Friday, December 16, 2005

எப்படி வாழப்போகிறீர்கள்

கடவுள் நம்பிக்கை இல்லை என்று எழுதியதால் என்னை அறிந்தவர்கள் பலர் இப்போ எனக்கு அறிவுரை செய்யத்தொடங்கி விட்டார்கள். அவர்கள் நிச்சயமாய் என்மேல் உள்ள கரிசனையில்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பது எனக்கு உறுதியாய் தெரியும். அவர்களுக்கு நான் ஏதொ தவறான காரியம் செய்வதாக ஒர் எண்ணம்.
அவர்களுக்கும் இன்னும் பல வாசகர்களுக்கும் என் நிலை விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

இங்கே வழிபடப்படும் தெய்வங்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்க்கிறபோது அவை அந்தந்தப் பிரதேசங்களிற்கு ஏற்ப ஆரம்பகாலத்தில் அப்பிரதேச மக்களால் அல்லது கொஞ்சம் விசயம் தெரிந்தவர்களால் உருவாக்கப் பட்டதாகவே கருதுகிறேன். அதனால் தான் எனக்கு அது குறித்து "அக்கறை'' இல்லை!

என்னுடைய மனித புத்திக்கு எட்டிய வரைக்கும் நியாயமாக நடக்கிறேன். இப்படி எல்லாம் கடவுள் சொன்னார் என்று இன்னொரு மனிதன் சொல்கிறதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதே மனிதன் நல்ல விடயம் ஒன்றைக் கடவுள் சொல்கிறார் என்றால் ஏற்றுக்கொள்கிறேன் அதற்குக் காரணம் கடவுள் அல்ல, சொல்லப்படுகிற விடயமே! இயலுமானவரை நல்லதை செய், நல்லதை நினை! அதுதான் எனது முயற்சி. அதையும் நீங்கள் செய்தால் தேவையில்லாத சிக்கல் இருக்காது மனம் தெளிவாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் அவ்வளவுதான்.
இதனைப் பலரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
சிலர் தமது அத்திவாரம் ஆட்டம் கண்டுவிடும் என்று பயப்படுகிறார்கள்.
நான் என்ன செய்வது.

அதை ஒருபுறம் வைத்துவிட்டு அண்மையில் ஒருவர் என்னிடம் பேசியதை எழுதுகிறேன். அவர் என்னிடம் டேய் உனக்கு வீடு வாங்கிற ஐடியா இல்லையோ என்றார். இருக்குத்தானே இது நான். ஒண்டெல்லோ இது அவர். காணாதா -நான் டேய் ஒண்ட வைச்சு என்னத்தைச் செய்யிறது இது அவர். இதுக்கும் மேலே உரையாடலைத் தொடராமல் விடயத்திற்கு வருகிறேன்.

அதாவது அவர் மட்டுமல்ல நம்மில் பலர் இப்படித்தான். கார் வைத்திருந்தால் Bmw வைத்திருக்க வேண்டும். முடிந்தால் remortgage செய்து இரண்டு வீடு வைத்திருக்க வேண்டும். இவை சாதாரணமா இயலாத காரியம் என்றால் தொடர்ச்சியாகத் தும்படிக்க வேண்டும். இப்படி வாழ்வதுதான் பிரதானம் என்று பலர் நினைக்கிறோம்.

நாலு வீடும் நாலு காறும் உங்கள் செல்வத்தினை வெளிப்படுத்தலாம் அல்லது வாழ்க்கைத்தரம் என்ற பொருளியல் அளவீட்டை அதிகரிக்கலாம் ஆனால் உங்களின் உண்மையான அளவை தரத்தை அதிகரிக்குமா?

மகாகவி பாரதியாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவருக்கு இன்னும் உலகம் கொடுக்கும் மரியாதைக்கு காரணம் என்ன? அவருடைய வீடும் Bmw காருமா? ஒவ்வொரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டவர் பாரதி. இன்னும் சொல்லப் போனால் கஞ்சாவை நஞ்சாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லியபடி கஞ்சா அடித்த மனிதர் அவர். ஆனால் இன்றும் அவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அதுதான் மகாகவி பாரதி.

ஒரு மனிதனுடைய தரம் அல்லது பெறுமதி அவன் வைத்திருக்கும் செல்வத்தினால் கணிக்கப் படுவதில்லை. அது அவன் வாழும் வாழ்க்கை முறைகளினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. (எல்லாளன் உமக்கு என்ன நடந்தது இப்ப என்னத்துக்காக இதை எழுதிறீர்...? )

வாழும் மனிதர்கள் யாவருமே மற்றவர்களுக்கு எங்களை ஏதாவது வழியில் வெளிப்படுத்தவோ அல்லது வித்தியாசப்பட்டு இருக்கவோ விரும்புகிறோம். அதற்காகத்தான் ஒவ்வொருவரும் இப்படி எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறோம். நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்றால் நாங்கள் வைத்திருக்கும் பொருட்களை வைத்து மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவதைவிட அல்லது மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதை விட எங்கள் குணாதிசயங்கள் மூலம் வெளிப்படுத்தவோ வித்தியாசப்படவோ முயற்சிக்கலாம் என்பதுதான்.

வள்ளுவரோ அல்லது கொலம்பஸ்சோ அல்லது அரிஸ்டோட்டிலோ வேறுபடுவது அவர்கள் வைத்திருந்த செல்வங்களால் அல்ல. அவர்கள் குணங்களால் அவை வெளிக்கொணர்ந்த விடயங்களால். அதற்காக நாங்கள் எல்லாம் நாடு களைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
அந்தாள் நல்ல மனுசன். அந்தாள் கெட்டிக்கார மனுசன். அந்தாள் சுப்பர் மனுசன். இப்படி இருந்தாலே போதும். நான் இதை எழுதுவதற்கான காரணம் நீங்கள் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதைவிட கையில் கழுத்தில் சங்கிலி அணிந்து கொண்டு வீடு கூடிப்போட்டுது விக்கவேணுமடா என்று விலாசம் காட்டுவதாக எண்ணி முட்டாளாகக் கூடாது என்பதுதான்.

வாழ்க்கையே நிலையில்லாதது அதிலும் நிலையில்லாத செல்வத்தை வைத்துக்கொண்டு விலாசம் காட்டுவது எப்படி?

பாரதியினது வாழ்க்கையும்
அவனது செல்வமும் நிலை இல்லாதது
ஆனால் அவன் விட்டுச்சென்ற பெயர் நிலையானது.

நீங்கள் எதனை விட்டுச்செல்லப் போகிறீர்கள். Bmw,வீடுகள்?.
உண்மையான உங்கள் பெயரை விட்டுச்செல்லுங்கள்.
புதிய வருடத்தில் நீங்கள் எப்படி வாழப்போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்.

Friday, December 02, 2005

எம் கலாசாரம்

எந்த ஒரு இனமும் தனித்து வாழவேண்டும் என்றால் அதற்கென்றொரு மொழி கலை கலாசாரம் இருக்கவேண்டும் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். தமிழ் கலாசாரத்தை வாழ வைக்க அல்லது பேணவேண்டிய பொறுப்பு தமிழர்களிடமே இருக்கிறது.

எந்தவொரு மனிதனும் எங்களுடைய தனித் தன்மையினை அல்லது விசேட தன்மைகளை அசட்டை செய்கிறபோது அவர்களுக்கு தமிழர்கள் குறித்தும் அவர்கள் கலாசாரம் பற்றியும் சொல்ல வேண்டிய கடைப்பாது ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. அதனை விட புலத்தில் வாழும் நாங்கள் வேற்றுக் கலாச்சார அல்லது பல்லினக் கலாச்சார மக்களுடன் சேர்ந்து வாழுகிறபடியினால் எங்கள் தனித்தன்மையை நாம் கவனமாகக் காக்க வேண்டும். எங்கள் நடை உடை பாவனை மூலம் இதனை மற்றவர்கள் உணரக் கூடியதாக நடக்கலாம். சுருங்கச் சொன்னால் எங்கள் வாழ்க்கை முறை மூலமாக இதனை வெளிப்படுத்தி நாம் தமிழர் என்ற இனம் என்பதை வெளிப்படுத்தலாம்.

இப்படிச் சொல்லும் பலவிதமான கலாசாரக் காவலர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் தவறில்லை ஆனால், நாம் எப்படியெல்லாமோ வாழ்ந்து கொண்டு இருக்கிறபோது தமிழர் கலாசாரத்தினை மட்டும் காத்துக் கொள்வதால் என்ன பயன். ஆகா எல்லாளனும் சினிமா நடிகைகளுக்கு வக் காலத்து வாங்குகிறாரோ (வாங்குகிறானோ) என்று உங்களுக்குத் தோன்றும். அவர்கள் என்ன சொன்னார்கள் அவை பத்திரிகைகளில் எவ்வடிவில் வந்தன என்பது பற்றித் தெளிவு இல்லை என்பதால் அது தொடர்பான சரி பிழை களை விட்டுவிடுவோம். அதைவிட என்னுடைய கருத்து சினிமாக்காரருடன் ஒத்துப்போகிறதா என்ற தேவை யாருக்கும் இல்லை.

நாம் நலமான அல்லது சீரான வாழ்வினை வாழ்வதற்காகவே இந்தக் கலாசாரம் என்கிற ஒரு ஒழுக்கமைப்புடைய முறை ஏற்படுத்தப் பட்டிருக்குமே அன்றி நாசமாவதற்கு அல்ல. அப்படி என்றால் கலாசாரம் பற்றி அக்கறைப்படுகிற அனைத்து ஆசாமிகளும் ஒரு ஒழுங்கான அல்லது ஒழுக்கமான முறையுடன் சீரான வாழ்க்கையினை வாழ ஆசைப்படுகிறவர்கள் என்று கொள்ளலாம் என்று கருதுகிறேன். அதனால்தான் அவர்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட முறைகளை இயலுமான அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள், கடைப்பிடிக்க வைக்கிறார்கள்.

இங்குதான் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது ஒரு கேள்வி இருக்கிறது. உண்மையில் இவர்கள் சீராக வாழவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதனைச் கடைப்பிடிக்கிறார்களா அல்லது நாம் தமிழர் எம் தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாழோடு முன்தோன்றி மூத்த தமிழ். எங்கள் முத்து தமிழ், எங்கள் சொத்து தமிழ் என்று நினைக்கிறபடியால் கடைப்பிடிக்கிறார்களா அதுவும் அல்லாவிட்டால் சிறிய வயதில் இருந்து இயல்பாகவே அப்படி Programme பண்ணப்பட்ட படியால் கடைப்பிடிக்கிறார்களா என்பதே அந்தக் கேள்வி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ( நீ எழுதிறதெண்டா எழுதிப்போட்டுப் போ எங்களிட்ட எல்லாம் உனக்கு என்ன கேள்வி... )

எனக்கென்னவோ நாங்கள் தமிழர் என்பதற்காகவும் ஏற்கனவே அப்படி Programme பண்ணப் பட்டு இருப்பதாலுமே கலாசாரம் என்ற ஒன்றினை து}க்கிப்பிடிக்கிறோம் என்று படுகிறது

நான், வெறும் தமிழர்கள் மட்டும்தான் இப்படி என்று சொல்லவில்லை. உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு இனமாகிலும் தங்கள் கலாசாரத்தினை து}க்கிப்பிடித்து வைத்திருப் பவர்கள் அனைவரையும்தான் இப்படிச் சொல்கிறேன். அதே நேரத்தில் இதனைச் சரி, தவறு என்று கூறும் வாதத்திற்கும் நான் வரவில்லை. பின்னர் ஏன் இப்படிச் சொல்கிறேன்.

அதாவது இப்படி வாழவேண்டும் இதுவே எங்கள் முறை இதுவே சரியான சீரான வாழ்க்கை என்பவர்களில் 99 வீதத்தினர் தமது அன்றாட வாழ்க்கையில் எந்த அளவுக்கு ஒழுங்காக வாழ்
கிறார்கள்? "ஒழுங்கு'' என்கிற ஒரு வார்த்தையை வைத்து ஏதோ கள்ளத்தொடர்பினைப் பற்றி எண்ண வேண்டாம்.
ஒரு மனிதனுடைய எண்ணமும் உடலும்தான் "அவன்''

இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். அந்த எண்ணத்திற்கும் உடலுக்கும் ஏற்றதான வாழ்க்கையினை நாம் வாழ்கிறோமா? பெரிதாய் இல்லாமல் சிறியதாய் ஒரு விடயத்தினைச் சொல்கிறேன் புகைப்பிடித்தல்!
புகைத்தல் கொல்லும் என்று எழுதினாலும் அதைப் பற்றி அக்கறைப்படாமல் சதா ஊதித் தள்ளுபவர்கள் எத்தனை பேர்? புகைத்தல் என்பது ஒரு உதாரணத்திற்கு நான் சொல்கிற விடயம். ஆனால் இதற்கப்பால் எத்தனையோ இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வீடு தொழில் உறவுகள் இடையே எத்தனையோ பரிசைகேடான நிகழ்வுகளை நாம் அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

சாதாரணமாக குப்பைத்தொட்டி சற்று எட்டத்தில் இருக்கிறபோது நிக்கிற இடத்தில் குப்பையினை எறிந்து விட்டுப்போவதே எங்கள் எண்ணத்தில் எதோ சிக்கல் இருக்கிறது என்பதைத் தான் வெளிப்படுத்துகிறது.
கலாசாரம் ஒருவரிடம் இருந்து இன்னொரு இனத்தவரை வேறுபடுத்தி நின்றாலும் அது ஒழுங்கான சீரான வாழ்க்கை முறைக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும். ஆகவே அவற்றை பேணுவோம்.

அதுதானே எம் கலாசாரம்.

Monday, October 10, 2005

CONTROVERSIAL MATTER

இது கொஞ்சம் Controversial ஆன விசயம். இப்படியான விசயங்களை வாசிக்க விரும்பாதவர்கள் இந்த இடத்திலேயே நிறுத்தி விடுங்கள். ஆனால் அப்படி என்ன Controversial ஆன விடயம் என்று பார்ப்போமே என்று எண்ணுபவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். "முக்கியமாய்'' யோசிக்கலாம்.

நான் பேசிக்கொண்டு இருக்கிறபொழுது பலர் என்னிடம் கேட்கிற கேள்வி
நீங்கள் நாத்தீகனா (Atheist)?
கடவுளை நம்பமாட்டீர்களா?
உலகப் படைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்பதுதான்.

எனக்கு கடவுள் என்கின்ற சக்தி வாய்ந்த ஒருவரில் நம்பிக்கை இல்லை. எதற்காக, எப்படி, நான் அதனை நம்புவது? அது சிரமமான விடயம் எனக்கு. என்னைப் பொறுத்த வரையில் கடவுள் என்பவர் இல்லை. கடவுள் என்பவள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை ஏனெனில் சகல மதங்களிலும் பெண் இரண்டாம் பட்சம்தான்.

ஆனால் கடவுள்த்தன்மை என்ற ஒன்று இருக்கிறது. அது எங்களுக்குள்தான் இருக்கிறது. அதனைப் Potential God எனலாம். அது நாங்கள்தான். எங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் கண்டறியவேண்டும். அதை விடுத்து மதங்களின் பின்னால் இழுபடுவது உண்மையான கடவுளைக் காண்பிக்காது.

என் பள்ளிக் காலங்களில் நாங்கள் உள்கட உள்கட என்று வேகமாகச் சொல்லி விளையாடுவோம் அது "கடவுள்'' என்று தொனிக்கும். அதன் உண்மை அன்று எங்களுக்குப் புரியவில்லை. இப்பொழுதும் பலருக்குப் புரியவில்லை. ஆக "கடவுள்'' என்பது எமக்குள்கும் இருக்கிறது. அங்கே நாம் அதைத் தேடவேண்டும். உள்ளே கடந்து சென்று தேடவேண்டும். அது தவிர கட்டடங்களில் அல்ல. அன்பும் "உண்மையுமே'' கடவுள்.

பொதுவாக நான் மதங்களினைப் பற்றி யாரிடமும் தேவை இல்லாமல் விவாதிப்பதில்லை. ஆனால் ஒரு சத்தியத்தினைச் சொல்வதற்காக அதைப் பற்றி கொஞ்சம் அலசுவதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.

கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் இறைவன் ஆதாமினை மண்ணில் இருந்து படைக்கிறான் பின் ஆதாமின் எலும்பு ஒன்றினை எடுத்து ஏவாளைப் படைக்கிறான். சொல்லவருகிற சேதி. மனிதா நீ மண்ணடா மண்ணுக்கு மறுபடியும் போவாய். பெண்ணே நீ ஆதாமிலிருந்து உருவானவள் ஆதாமுக்காகவே உருவானவள். முதலாவது தத்துவம் இரண்டாவது ஆணாதிக்கம்.
நான் சொல்ல வருவது என்னவெனில் முதல்க் குடும்பம் ஆதமும் ஏவாளும் இரண்டு மகன்களுமாம். இதில் இருந்துதான் உலகம் உருவானதாம். எப்படி என்பது கேள்வி?. கீழ்த்தரமான உறவு முறைகளில் இருந்துதான் நாங்கள் உருவானோமா. என் நண்பர் ஆண்டவனின் அனுமதி அதற்கு இருந்திருக்கும் என்றார். அவர் ஆண்டவனின் அனுமதி என்று எதுவும் செய்யலாமாம். பயமாக இருந்தது எனக்கு. இவைபோல பல சிக்கல்கள் இருக்கிறது. நான் ஆரம்பத்தில் இருந்த ஓர் உதாரணத்தினைச் சொன்னேன் அவ்வளவுதான்.

அண்மையில் இணையத்தில் ஒர் கட்டுரை படித்தேன் அதில் இப்படி இருந்தது. சிவமகா புராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட மோதல் வந்தது. பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமா தேவியார் தன் குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இதில் எத்தனையோ கேள்விகள்

எதற்கு. ஏன் கடவுளுக்குக் காவல்
ஏன் சிவபெருமானுக்கு பிள்ளையார் தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை.
ஏன் பிள்ளையாரை சிவன் அவரது சக்தியால் தற்காலிகமாக கட்டுப்படுத்த வில்லை.
ஏன் மனித உடலுக்கு சும்மாபோன யானையின் தலையை வெட்டி வைத்தார்.
பிள்ளையாரின் பழைய தலையின் நிலை என்ன?
யானை முண்டத்தின் நிலை என்ன?

யோசித்துப்பார்த்தேன் எனக்கு இது கதை என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் பக்கம் நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.
புத்தர் தன்னைக் கடவுளாகவோ அல்லது மதம் தொடங்குங்கள் என்றோ சொல்லவில்லை அவரும் சத்தியத்தினைத்தான் சொன்னார். ஆனால் மக்கள் அவரின் மறைவுக்குப்பின் அவரைக் கடவுளாக்கி விட்டார்கள்.

இப்படி ஒவ்வொரு மதத்திலும் சிக்கல்கள் இருக்கிறது. ஏனெனில் இதை உருவாக்கிய வர்களின் காலத்தில் யாரும் கண்டமாதிரிக் கேள்வி கேட்டு இருக்கமாட்டார்கள். கேட்டாலும் ஏதாவது தெய்வ குற்றம் என்று பூச்சுற்றி இருப்பார்கள். உதாரணத்திற்கு அம்மைநோய். அது ஏன் வருகிறது. அம்மாளின் கோபம். கோயில் கிணற்றில் எல்லாம் குளிக்கவைத்தார்கள். இப்போ மாத்திரைகள் கூட இருக்கிறது. இன்னமும் சிலர் மாத்திரைகள் எடுப்பதில்லை. தெய்வகுற்றமாம்.

எத்தனை காலத்திற்கு இப்படி து}ங்கப் போகிறோம். ஏற்கனவே இருக்கிற பாதையில் நடக்கவேண்டும் என்பதில்லை. நல்லதாய் இருந்தால் நடப்போம் இல்லையேல் அதை தவிர்ப்போம். புதியபாதை அமைப்போம். நான் கடவுளை நம்பவில்லை. கடவுள் தன்மையினை நம்புகிறேன். எங்களுக்கு அப்பாலும் சக்தி இருக்கிறது. அதை குறிப்பிட்டு அறியமுடியாத காரணத்திற்காக உருவம் கொடுத்து வணங்கவேண்டிய தேவை இல்லை.

எங்களுக்குள்ளும் சக்தி இருக்கிறது. அதை அறியலாம். அதை அறிவோம். That is the one called Potential God.

Friday, September 16, 2005

HEALING BY DEALING

நான் எந்த சமயத்திற்கும் உரியவன் அல்ல. மனிதரை வழி நடத்த உருவாக்கப்பட்டவைகளே இன்று வழி தவறி மனிதர்களுக்குள் சிக்கல்களினை வளர்த்து விட்டு இருக்கிறது என்பதால் பொதுவாக எனக்கு "மதங்கள்'' பிடிக்காது.

அண்மையில் எனது நண்பன் ஊரிலே து}க்குக் காவடி எடுத்தான். அவன் சகோதரன் தாயகத்தில் ஓரிருவருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறான். இந்தக் காரணத்தினால்தான் அவன் காவடி எடுத்தானாம்.

இன்னுமொருவர் இங்கு தனது விசாப் பிரச்சனைகள் தீரவேண்டும் என்று நேர்த்தி வைத்திருந்தார். பிரச்சனை தீர்ந்தது. இப்போது அவர் British citizen. அதனால் அவர் அண்மையில் அங்கப் பிரதட்சணம் செய்தார்.

மூன்றாவதும் இறுதியுமானவருமான நண்பர் தனக்கு குறிப்பிட்ட வேலை கிடைக்கவேண்டும் என்று நேர்த்தி வைத்திருந்து சென்ற வாரம் தான் 200 pint Fresh milk ஊற்றினார்.

மேற்சொல்லப்பட்ட என் நண்பர்கள் கடந்து வந்த அந்தப் பாதை எனக்குத்தெரியும். அது மிகவும் கொடூரமானது.

இதனை இவ்விடத்தில் விட்டுவிட்டு நான் கடந்த வாரம் வாங்கிய கணிணி மென்பொருள் பற்றி ஒரு தடவை சொல்லவேண்டும். நான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துடன் எனக்குத் தேவையான மென்பொருள் பற்றிப்பேசினேன். அவர்கள் அந்த மென்பொருளுக்கு ஈடான ஒன்று இருப்பதாகச் சொல்லி அதை என் தேவைகட்கு உபயோகப்படுத்தலாம் என்று சொன்னார்கள். நான் அவர்களிடம் அந்த மென்பொருளினை வாங்கி உபயோகித்தபோது என்தேவைகளை அது ஈடு செய்யவில்லை. அதனால் நான் அவர்களிடம் மென்பொருளைக் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொண்டேன். அத்துடன் எனக்கும் அவர்களுக்கும் இடையில் இருந்த வியாபார உறவு முடிந்து விட்டது.

மறுபடி விட்ட இடத்திற்கு வருகிறேன். என் நண்பர்கள் மூன்றுபேர் தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இவர்கள் என் நண்பர்கள் என்பதால் அவர்கள் செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைச் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது.

ஏனெனில் இறைவனுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கிற உறவு என்ன என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றே எண்ண வேண்டி இருக்கிறது. இவர்கள் என்று நான் குறிப்பிடுபவர்கள் தனியே என் மூன்று நண்பர்களை மட்டும் அல்ல. மாறாக நேர்த்தி செய்யும் அனைத்து அடியார்களையும்தான்.

நேர்த்தி என்றால் என்ன? இறைவனிடம் ஒரு தேவைக்காக மன்றாடி அத்தேவையினை நீ நிறைவேற்றியவுடன் நான் உனக்காக இப்படிச் செய்வேன் என்று இறைவனுக்கு ஒரு வாக்குறுதியினை வழங்குதல் அல்லவா. இறைவன் நிறைவேற்றியவுடன் நாங்கள் நேர்த்திக் கடனினைச் செய்கிறோம். சரி இறைவன் ஒன்றும் செய்யாமல் இருந்தால்? நாங்கள் அவரவர் வேலையுடன் இருப்போம். அப்படித் தானே! நான் மென்பொருள் வாங்கியது போல, இது என்னையா இது கடவுளுடனேயே வியாபாரம். பலருக்கு என்னுடைய வாதம் ஆரோக்கிய மானதாகப்படாது.

சரி இப்படிப் பார்ப்போம். என்னுடைய சில சிக்கல்களை என்னிடம் இருந்து விலகவேண்டும் என்று இறைவனின் காலில் விழுகிறேன். அதாவது நேர்த்தி வைக்கிறேன். ஆனால் அது நடக்க வில்லை. இருப்பினும் நான் நேர்த்தியினை நிறைவேற்றுகிறேன் அதுதான் உண்மையான உறவு.

அதாவது இப்படி, இறைவா என்னுடைய பிரச்சனைகளை உன்னிடம் சொன்னேன் ஆனால் நீ கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் நான் செய்ய இருந்த நேர்த்தியினை இப்போ செய்கிறேன். என்று சொன்னால் அது இறைவனில் நாம் வைத்துள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது.
அதை விடுத்து. நீ தந்தால் நான் செய்வேன் இல்லாவிட்டால் இல்லை என்றால் அது ஒருவகை வியாபாரம் என்றுதான் சொல்லவேண்டும் ஆகவே இன்றைய காலத்தில் காணப்படும் அனைத்து நேர்த்திகளும் வியாபாரம்தான் ( Bothway Dealing ). சரி இதை நீங்கள் விளங்கிக் கொண்டாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

உண்மைகளை ஏற்றுக்கொண்டால், இன்று பல சமயங்களின் கட்டமைப்புக்களில் ஓட்டைகள் விழுந்து அவை நாசமாகிவிடும். அதாவது சந்திரனில் மனிதன் காலடி வைக்கவில்லை வைக்கவும் முடியாது என்றும் கூறி வந்த Conspiracy Theory யை உடைக்க முடியாமல் நாசா இருந்தாலும் அதை ஏற்காமல் தன்வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. காரணம் அதன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது முயன்றாலும் குட்டு வெளிப்பட்டு விடும்.
ஆகவே இருந்த இடத்தில் இருந்து கொண்டு, இல்லை மனிதன் சந்திரனில் கால்வைத்தான் என்று சாதாரணமாகச் சொல்லுகிறது.

அதுபோலத்தான் தங்கள் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காக மதங்களும் தம்விடயங்களை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறது.சரி, நாங்கள் நேர்த்தியினை வியாபாரம் என்று பார்க்கவில்லை. அது தெய்வீகமானது. புனிதமானது என்று கூறினால் கூறிவிட்டுப் போங்கள். ஒரு விடயத்தினையாவது முடிந்தால் செய்யுங்கள்.

நேர்த்தி என்று சொல்லி Trolleyயில் பாலினைக் கடவுளுக்கு ஊற்றாமல் அதை ஏதாவது முதியோர் இல்லங்களுக்கு அல்லது ஆதரவு இல்லங்களுக்கு வழங்குங்கள். புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, இல்லங்களுக்கான பட்ஜெட்டில் பால் செலவாவது குறையும்.

Thursday, August 18, 2005

நாம் வாழ்வதற்கே

சில நேரங்கள் எங்களுக்கு கடும் ரணமாக இருக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் தலை இறுகிப்போய் விடும். செத்து விடலாமா என்று தோன்றும். எத்தனை பேர் இப்படியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் தள்ளப்பட்டு இருக்கிறேன். பல தடவை இருந்ததினால் பழகிப் போய் விட்டது.


எத்தனை பேர் நாளை மரணம் வந்தால் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறீர்கள். நிச்சயமாக 99 வீதமானோர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக் கூட எண்ணாமல் எனக்கு என்ன நடந்து விட்டது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். காரணம் மரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூட உங்களால் முடியாது. ஏன்?


வாழ்க்கை குறித்து கடுமையான எதிர்பார்ப்பினை வைத்து இருப்பீர்கள் அந்த எதிர்பார்ப்பு உங்களை நாளை போகலாம் ஆயத்தம் செய்யுங்கள் என்றால்! விடாது. ஆகவே பெரிய எதிர்பார்ப்பு ஒன்றினையும் வைத்திருக்காதீர்கள். இப்போது நிச்சயமாக எனக்கு கழன்று விட்டது என்கிற உறுதியான முடிவிற்குப் பலர் வந்திருப்பீர்கள்.


சரி இப்ப நான் சொல்ல நினைக்கிற விடயத்திற்கு வருகிறேன். பெரிதாக ஒன்றும் கட்டுரை எழுதி இறுக்காமல் சில உதாரணங்கள் மூலம் இலகுவாகச் சொல்லுவது நல்லது என்று படுகிறது.


எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். 2 பிள்ளைகளுக்குத் தகப்பன். தும்படித்தல் என்று சொல்வோமே அவர் அதுதான் நான் அவரை அறிந்த ஐந்து வருடமாகச் செய்து கொண்டு இருக்கிறார். மனைவி வீடு, இவர் தும்பு.


இன்னொருவர் வேலைக்குப் போவார். முடிந்தால் நேர பிள்ளையிட்ட வருவார். சகல விடயமும் பிள்ளைக்குப் பக்கத்தில் இருந்து செய்வார். பிள்ளை முடித்தவுடன் தன்பாட்டில் போய் படுத்துவிட்டு மறு நாள் மறுபடி காரியாலயம். வேலை பின்னர் வீடு பிள்ளை.


இன்னொருவர் தனக்குத் தெரியாமல் பிள்ளை பூக்கண்டுக்குத் தண்ணி ஊத்தவும் ஏலாது என்பது போல இருப்பார். பாடசாலை முடிந்தால் வாசலில நிண்டு கூட்டிக் கொண்டு வீடு வருவார். கடும் பாதுகாப்பு! எப்படிச் சொல்ல? இந்தப் பாதுகாப்பு "அவருக்கு'' இருந்திருந்தால் அவருக்கு சினைப்பர் அடிச்சிருக்க மாட்டார்கள். அப்படியொரு பாதுகாப்பு.


மூன்று பேரிட்டையும ஏன் இப்படி என்று கேட்டா பிள்ளைக்காக எண்டு சொல்லுவினம். பிள்ளைக்காக தும்படிச்சு வேலை செய்யிறது முடிஞ்ச உடன பிள்ளையோடயே இருக்கிறது பிள்ளைக்குப் பலத்த பாதுகாப்பு எண்டு முன்னுக்கும் பின்னுக்கும் திரிகிறது. எனக்கு விளங்கேல்ல. அதைவிட எந்த அளவிற்கு அந்தப் பிள்ளைகள் அதைத் தமக்காக என்று எடுத்துக் கொள்ளும். எல்லாம் விடை தெரியாக் கேள்விகள்.


என்னுடைய பிரச்சனை என்னவென்றால்! பெற்றோர் முழுக்க முழுக்க பிள்ளைக்காக வாழ வேண்டுமா? என்பதுதான் (மேலே குறிப்பிடப் பட்ட போன்றோரை நினைவில் வைத்துத்தான் கேட்கிறேன்). என்னுடைய கேள்வியினை சிலர் தவறானதாகக் கூட கருதி இருக்கலாம். ஆனால் மறுபடியும் அதே கேள்விதான் கேட்கிறேன் பெற்றோர் முழுக்க முழுக்கப் பிள்ளைகளுக்காக வாழுவது சரியா?


என்னுடைய பார்வையில் நிச்சயமாக இல்லை. நான் என் பிள்ளைக்காகவும் அவன் தன் பிள்ளைக்காகவும் வாழ்வதில் என்ன இருக்கிறது. நான் எனக்காக வாழவேண்டும் அவன் தனக்காக வாழவேண்டும். அதை விடுத்து மாறி மாறி வாழ்ந்து கொண்டு வந்தால் எப்படி அதை எங்கள் வாழ்க்கை எண்டு சொல்வது? முக்கால் வாசித் தமிழரும் இப்படித்தான் வாழ்ந்து வருகின்றார்கள். அதனை யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். எங்கள் வாழ்க்கையில் எங்கள் பிள்ளைகளுக்கான பங்கு என்று ஒன்று இருப்பது சிறந்ததே ஆனால் அவர்களையே முழுப்பங்காக்குவது பிழை என்பதே என் வாதம்.


உதாரணத்திற்கு பெண்களை எடுத்துக் கொண்டால் அனேகமானோர் திருமணம் முடிந்த பின்னர் தமது வாழ்க்கை முடிந்து விட்டது மாதிரித்தான் வாழ்கிறார்கள். கூடிய பட்சம் கடைத்தெருவுக்கு வருவதுடன் அவர்களுக்கு வாழ்க்கை சுருங்கி விடும். (வேலை செய்யா தவர்களை சொல்கிறேன்) ஆண்களுக்கு கடை வேலை என்று வாழ்க்கை ஒடிக்கொண்டே இருக்கும் தொடர்ந்து வேலை ஆளைப் பிடிக்கவே இயலாது.


ஒரு விடுமுறைக்கு எங்காவது சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுவது கிடையாது. சிலர் இந்தக் கருத்து பிழை என்று பாய்ந்து வருவீர்கள். நான் பொதுவாக என்ன நடக்கின்றது என் பதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றேனே தவிர நாலைந்து பேர் விடுமுறை போவதனை பெரிதாக எடுத்துப் பேசமுடியாது என்பதனை மிகப் பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.


நல்ல விடயங்களினை யாரிடமும் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளையர்களைப் பாருங்கள். அவர்கள் அளவுக்கதிகமாக வேலை செய்ய மாட்டார்கள். தேவையான அளவு விடுமுறைகள் என்று ஏதாவது நாட்டுக்கு அல்லது குறைந்தது பக்கத்து ஊருக்காவது செல்வார்கள். ஏன் பக்கத்து ஊருக்குப் போகுறீர்கள் என்றால் சிறிது மாற்றம் தேவை என்று சொல்லி கணவனும் மனைவியும் போய் தங்கிவிட்டு வருவார்கள்.


இதனால் சொல்ல முயற்சிக்கிற சேதி என்ன வெனில் அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையில் அவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்கின்றோம் என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். எங்களுக்கு கிடைத்திருக்கின்ற வாழ்க்கை நாம் வாழ்வதற்கே.

Sunday, July 17, 2005

DRAMAயணம்

அன்று ஒரு நாள் எனக்கு நடந்த சம்பவம் பற்றி எழுதி இருந்தேன் அது தொடர்பாக கடந்த வாரம்தான் வைத்தியரைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவரிடம் நடந்தவற்றைக் கூறினேன். அவர் ஏற்கனவே என்னுடைய பத்தியைப் படித்திருக்க வேண்டும். 

என்னைச் சோதித்துக் கொண்டு இருந்தவர் திடீரென கம்பவாரிதி ஜெயராஜ் பற்றி எழுதியது சரியா என்று கேட்டார். நான் சிரித்தேன் (ஏதாவது ஊசியப் போட்டு விடப்போறார் என்கிற பயத்தில்). பிறகு நீர் அதுக்கு இங்கு வரவில்லை, வேறு விடயத்துக்காக வந்திருக்கிறீர் என்று மறுபடி சோதனையில் இறங்கினார்.

சோதனை நடந்து கொண்டிருக்கிறது, அவர் சர்வதேசத் தமிழருக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்றார். ஆகா இதென்ன வேதாளத்தின்ர கதைபோல மரத்தில ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார் என்று நினைத்துவிட்டு பேசாமல் இருக்க (ஊசி... பயம்) மறுபடி சோதனை, பின்னர் "ஒருபேப்பரில இருக்கிறவைட்டச் சொல்லும் இராமாயணம் வாசிக்கச் சொல்லி, கம்பரப் பற்றிப் படிக்கச் சொல்லும். நாங்களும் இப்பிடித்தான் முந்தி "கிமாயணம்'' எண்டு எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னால திரிஞ்சனாங்க''. "கிமாயணம்'' தெரியுமோ? இது அவர். "இல்லை'' இது நான். நக்கல் சிரிப்பு இது அவர். பிரச்சனை என்னண்டா மூளை முதிர்ச்சி அடைய வேணும் என்று விட்டு ஏதாவது செய்யுங்கோ என்பதுபோல ஒரு ஏளனத்துடன் சிட்டையில் எழுதினார். இவர்தான் என்னை இப்போ இங்கு இதை எழுதத் து}ண்டினார்.

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் ராமாயணம் பற்றியும் கம்பர் பற்றியும் அவர் அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் தெரியும். ( ஆண்டு 11ல் படித்தது). நான் அறிந்தது இரண்டு இராமாயணம். ஒன்று மூலம் வான்மீகி இராமாயணம் மற்றயது தமிழ் மொழியாக்கம் கம்பராமாயணம். இதைவிட வேறும் இருக்கலாம் அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. மூலமும் படியும் எனக்குப் போதும்.

வான்மீகி இடம் இருந்து கம்பர் தமிழாக்கம் செய்யும்போது கம்பர் ஒரு வம்பு செய்ததாகப் படிக்கிறோம் அதாவது. தசரதனிடம் இருந்து இரண்டு வரங்களைப் பெற்ற கைகேயி இராமனை 14 வருடம் வனவாசம் போகச் சொல்கிறார். இந்த நேரத்தில் இராமன் அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற முகத்துடன் (சந்தோசமாக) ஏற்கிறார். இது கம்பருடையது. வான்மீகி அதாவது ஒறிஜினல் என்ன சொல்கிறது. இராமனுக்கு கடும்கோபம் வருகிறது, எங்கள் வழக்கில் "அடிடா பிடிடா'' என்று கத்திப் பிரச்சனைப் பட்டுத்தான் காட்டுக்குப் போகிறார்.கம்பர் ஏன் மாற்றினாரோ தெரியவில்லை. இதைவிடகடவுளாக வணங்கப்படும் ராமனின் கூத்து சீதையை தீக்குளிக்கச் சொல்லும் வரைக்கும் போகுது.

இராமனை விடுவோம். ஒரு ஆள் அப்படி இருந்தாரோ இல்லையோ அல்லது இருந்து அவருக்கு சும்மா ஒரு கதை எழுதினார்களோ தெரியவில்லை. ஆனால் கதையை வடிவாகப் பார்த்தால் சீதை கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் இலங்காபுரிக்குச் செல்ல வேண்டும் இவருக்கு உதவி செய்ய குரங்குக் கூட்டம் ஒன்று வருகிறது. அதன் தலைவர் சுக்ரீவன். பாலம் போடப்படும் இடம் அவருடைய எல்லைக்குள் இருக்கிறது. ஏன் சுத்தி வளைப்பான். தென்னிந்தியாவில் இருக்கிறது.

இலங்காபுரியில் இராவணன் என்னும் அரக்கன் இருக்கிறான். வீணை வேந்தன் என்று பட்டம் பெற்றவன். தமிழன். இலங்காபுரிக்குத் தமிழர் எங்கிருந்து போனார்கள் தென்னிந்தியாவில் இருந்து, ஆக இராமன் இலங்காபுரிக்கு இராவணனுடன் போர் புரிய வரும்போது தென்னிந்தியாவில் தமிழர் இருக்கவில்லையாம் (?) . குரங்குக் கூட்டங்கள்தான் இருந்ததாம். இப்படி இராமாயணம் சொல்கிறது. குரங்குக்கு மனைவி, அரசாட்சிப் பீடம், இதெல்லாம் எப்படி? திராவிடன் ஆரியனுக்குக் குரங்கானான்.

அதைவிட இலங்காபுரியைச் சேர்ந்த இராவணன் சிவனுக்காக தன் ஒரு தலையை பிடுங்கி நரம்பினை எடுத்து வீணை வாசித்தவர். அவர் ஒரு கொடிய அரக்கன். சின்னத்திரை மாதிரி சித்தியோடு சண்டை பிடித்துச் சின்னத்தனமாக இருந்தவர் இராமன் அவர் இன்று கடவுள்.

இராமாயணத்தை விடக் கம்பர் வேறு ஒன்றும் சொந்தமாக எழுதவில்லையா? அவைகள் து}க்கிப் பிடிக்கப்படாமல். கொப்பி அடிக்கப்பட்ட இராமாயணம் பிரபல்யம் ஆனதேன்? (அல்லது ஆக்கப்பட்டதேன்?) சந்திரமுகி வெற்றிக்கு வாசுவைப் பராட்டுவது போலத்தான் இந்த விடயத்தில் கம்பரைத் து}க்கி வைக்கிறதும்.

இப்போ விடயத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு எழுகிற இக்கேள்விகள் கம்பவாரிதிக்கு அவர்களுக்கு எழவில்லையா? மறுபடியும் சொல்கிறேன் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அல்லது அவர் சார்ந்தவர்கள், கம்பன் கழகம் என்று சொல்லிவிட்டு இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன? எனக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை. அனேகர் இல்லை என்றே படுகிறது.

ஏனெனில் அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவில ஒராள் இருக்கிறார் அவருக்கும் BACKUP அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர்தான். அந்த அளவுக்கு கம்பவாரிதி ஜெயராஜ் மோசம் இல்லைதான் என்றாலும் இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன?

Monday, July 11, 2005

பு/பெயர் தமிழர் சினிமா

இது புலம்பெயர் தமிழர்களின் திரைப்பட வளர்ச்சிக் காலம் என்று சொல்லலாமா? அல்லது பலர் இத்துறைக்குள் இப்போதுதான் நுழையத் தொடங்கும் காலம் என்று சொல்லலாமா? இரண்டாவதுதான் எமக்குப் பொருத்தமானது என்றுஎனக்குப் படுகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கான சினிமா இன்னும் உதிக்க வில்லை. உதிக்கப் போகிறது.

(நான் ஒரு படத்தை எடுத்துப் போட்டு உதிச்சிட்டுது எண்டு சொல்ல திட்டம் வைச்சிருக்கிறன்)

ஏன் உதிக்கவில்லை? இப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பல பதில்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சில பிரச்சனைகள் சொல்லப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். திரைப்படம் எடுக்கின்றோமா முதலில் பார்வையாளர்களைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் (ஐயோ பாவம் என்றும்தான்) நான் இங்கு பார்த்த திரைப்படங்கள் சில அந்த அக்கறை எல்லாம் இல்லாமல் எடுக்கப்பட்டு இருக்கும் அதாவது இது புலம் பெயர் தமிழர்களின் சினிமா என்றால் அது சார்ந்ததாக எடுக்கப் படலாம் (கவனிங்கோ எடுக்கப்படலாம். எடுக்கோணும் என்று சொல்லவில்லை)

அதை விட்டுத் தென் இந்தியச் சினிமா போல் "நான் ஒரு தடவை சொன்னா! நான் ஒரு தடவை சொல்லவில்லை எண்ணா! இப்படி Hero இசத்தினைக் காட்டினால் தான் மக்கள் மயங்குவார்கள் என்று படம் எடுப்பது பயனளிக்காது. நான் புலம்பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட சில படங்களைப் பார்த்து இருக்கிறேன். அனைத்து படங்களும் பார்த்து முடிக்க வேண்டும் என்று கடைசிவரை இருந்திருக்கிறேன். கடைசிவரை இருந்திருக்கிறேன் என்பது "கடினப்பட்டே'' என்பதைக் குறிக்கிறது.

சில புலம் பெயர் தமிழர் வாழ்வு சார் பிரச்சனைகளை சொல்ல வருகின்றன. சில அது பற்றி அல்லாமல் சாதாரணமான ஒரு கதையைச் சொல்ல முயல்கின்றன. சில தொழில் நுட்ப ரீதியாக கதை தவிர்த்து கொஞ்சம் முன்னுக்கு அடி எடுத்து வைக்கின்றன. ஆனால் நான் பார்த்த எந்தப் படமும் "பார்க்கலாம்'' என்று சொல்வதற்கு இல்லை. ஒரு படம் பார்த்துக் கொண்டு இருந்தபோது வெறுப்பில் அப்படி இப்படி அசைந்து கொண்டு இருந்தேன் (அட எனக்குப் பின்னாலும் ஆக்கள்...) உடனே பின்னால் இருந்தவரிடம் திரும்பி, மறைச்சுப் போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றேன். அதற்கு அவர் முடிஞ்சா முழுக்க மறைங்கோ என்றார்.

ஏன் இந்த நிலை? என்று கேட்டால் தமிழ்நாட்டுச் சினிமாவின் தொழில்நுட்பத்திற்குக் கிட்டே நெருங்க ஏலாது ஐசே! என்பார்கள். அப்படியா! சரி அப்படி அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? ரஜினி நடந்து வரும்போது காலின் கீழ்ப்பகுதியில் நெருப்புப் பொறி பறக்கிறது. கிரபிக்ஸ் பூக்களுக்கிடையில் காதலர்கள் டூயட் பாடுகிறார்கள். இந்த அளவுக்கான தொழி நுட்பத் தேவை எமக்கு இருக்கிறதா? அல்லது இருந்தாலும் இப்படியான சீன்களுக்கான தேவை எமக்கு இருக்கிறதா? சரி அதை விடுவோம். அழகி, காதல், ஆட்டோகிராப், போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கும் நெருங்க இயலாது என்று கூறப்படும் அந்தத் தொழில் நுட்பத்திற்கும் இடையே எந்த அளவிலான தொடர்புகள் இருக்கின்றன. மேற்சொன்ன படங்களுக்கு அடிப்படைத் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டது.

ஆக சினிமா எடுப்பதற்கு அடிப்படைத் தொழில் நுட்பம் இருந்தாலே போதுமானது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம் "எங்களுக்கு'' திரைப்படம் உருவாக்கல் தொடர்பான அனுபவ அறிவு குறைவு. அல்லது இல்லை. இதனால்தான் இவ்வளவு சிக்கலும். கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றிலும் கவனம் எடுத்தால் கூட பார்க்கக் கூடிய ஒரு படத்தினை உருவாக்கலாம் என்பது என் நம்பிக்கை.

ஆனால் சிலர் என்ன செய்கிறார்கள். தங்கள் திரைப்படத்திற்கு வித்தியாசமான முறையில் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அதாவது தமிழர்களுடன் தொடர்பான உணர்வுகளைத் தங்கள் தனிப்பட்ட உற்பத்திகளுடன் சேர்த்து விடுவதே அம்முறை. தமிழ், விடுதலை, போராட்டம், போன்ற சில விடயங்களை சம்பந்தமில்லாத தம் உற்பத்திகளுடன் ஊறுகாய் போல் சேர்த்து அவற்றினை ருசி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் படைப்பாளிகள்.

உதாரணத்திற்கு மாவீரர் துயிலும் இல்லம்! புலம்பெயர் திரைப்படங்களில் காண்பிக்கப் பட்டுள்ளது. காண்பிக்கவும் படும். அதை யாரும் காண்பிக்கக் கூடாது என்று சொல்ல முடியாதுதான்! ஆனால் அப்படியான இடங்களை தங்கள் லாபத்திற்காக அல்லது ஏதோ சுற்றுலாத் தளங்கள் போல படங்களில் காட்டுவது சரியா என்று தெரியவில்லை. அதைவிட அப் பிரதேசம் சென்று அதனைப் படம் பிடிப்பதன் நோக்கம் என்ன? சினி ஸ்டைலில் Feeling காட்டுறீங்களா? இல்லை Film காட்டுறீங்களா? என்றுதான் கேட்கவேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம் "இந்தப் படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புக்கள் மேல் நம்பிக்கை இல்லை''.

இப்படி நான் எழுதுவதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள், படம் எடுப்பதில் உள்ள சிரமம் அறியுங்கள். பின்னர் எழுதுங்கள் உருவாகும் புலம் பெயர் தமிழரின் திரைத் துறையை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள்.

நான் என்ன சொல்கிறேன்; உருவாகும் துறை ஒழுங்காக உருவெடுக்க வேண்டும் என்றால் இப்படி எழுதத்தான் வேண்டும். இல்லை என்றால் இன்றைய அனேக தென்னிந்தியத் திரைப் படங்கள் போல் C கிளாஸ் ஓடியன்சுக்குத்தான் படம் எடுக்கும் நிலை வரும் புரியவில்லையா? 3 சண்டை 2 கானா கொஞ்சம் நகைச்சுவை இப்படி ஒரு "துறை'' உருவாகுவதற்கு அது உருவாகாமல் இருப்பது மேல்.

Wednesday, June 01, 2005

தமிழர் சினிமா

இது புலம்பெயர் தமிழர்களின் திரைப்பட வளர்ச்சிக் காலம் என்று சொல்லலாமா? அல்லது பலர் இத்துறைக்குள் இப்போதுதான் நுழையத் தொடங்கும் காலம் என்று சொல்லலாமா? இரண்டாவதுதான் எமக்குப் பொருத்தமானது என்றுஎனக்குப் படுகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கான சினிமா இன்னும் உதிக்க வில்லை. உதிக்கப் போகிறது. (நான் ஒரு படத்தை எடுத்துப் போட்டு உதிச்சிட்டுது எண்டு சொல்ல திட்டம் வைச்சிருக்கிறன்)

ஏன் உதிக்கவில்லை? இப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பல பதில்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சில பிரச்சனைகள் சொல்லப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். திரைப்படம் எடுக்கின்றோமா முதலில் பார்வையாளர்களைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் (ஐயோ பாவம் என்றும்தான்) நான் இங்கு பார்த்த திரைப்படங்கள் சில அந்த அக்கறை எல்லாம் இல்லாமல் எடுக்கப்பட்டு இருக்கும் அதாவது இது புலம் பெயர் தமிழர்களின் சினிமா என்றால் அது சார்ந்ததாக எடுக்கப் படலாம் (கவனிங்கோ எடுக்கப்படலாம். எடுக்கோணும் என்று சொல்லவில்லை) அதை விட்டுத் தென் இந்தியச் சினிமா போல் "நான் ஒரு தடவை சொன்னா! "நான் ஒரு தடவை சொல்லவில்லை எண்ணா! இப்படி Hero இசத்தினைக் காட்டினால் தான் மக்கள் மயங்குவார்கள் என்று படம் எடுப்பது பயனளிக்காது.

நான் புலம்பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட சில படங்களைப் பார்த்து இருக்கிறேன். அனைத்து படங்களும் பார்த்து முடிக்க வேண்டும் என்று கடைசிவரை இருந்திருக்கிறேன். கடைசிவரை இருந்திருக்கிறேன் என்பது "கடினப்பட்டே'' என்பதைக் குறிக்கிறது. சில புலம் பெயர் தமிழர் வாழ்வுசார் பிரச்சனைகளை சொல்ல வருகின்றன. சில அது பற்றி அல்லாமல் சாதாரணமான ஒரு கதையைச் சொல்ல முயல்கின்றன. சில தொழில் நுட்ப ரீதியாக கதை தவிர்த்து கொஞ்சம் முன்னுக்கு அடி எடுத்து வைக்கின்றன. ஆனால் நான் பார்த்த எந்தப் படமும் "பார்க்கலாம்'' என்று சொல்வதற்கு இல்லை.

ஒரு படம் பார்த்துக் கொண்டு இருந்தபோது வெறுப்பில் அப்படி இப்படி அசைந்து கொண்டு இருந்தேன் (அட எனக்குப் பின்னாலும் ஆக்கள்...) உடனே பின்னால் இருந்தவரிடம் திரும்பி மறைச்சுப் போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றேன். அதற்கு அவர் முடிஞ்சா முழுக்க மறைங்கோ என்றார்.

ஏன் இந்த நிலை? என்று கேட்டால் தமிழ்நாட்டுச் சினிமாவின் தொழில்நுட்பத்திற்குக் கிட்டே நெருங்க ஏலாது ஐசே! என்பார்கள். அப்படியா! சரி அப்படி அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? ரஜினி நடந்து வரும்போது காலின் கீழ்ப்பகுதியில் நெருப்புப் பொறி பறக்கிறது. கிரபிக்ஸ் பூக்களுக்கிடையில் காதலர்கள் டூயட் பாடுகிறார்கள். இந்த அளவுக்கான தொழில் நுட்பத்தேவை எமக்கு இருக்கிறதா? அல்லது இருந்தாலும் இப்படியான சீன்களுக்கான தேவை எமக்கு இருக்கிறதா? சரி அதை விடுவோம்.

அழகி, காதல், ஆட்டோகிராப், போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கும் நெருங்க இயலாது என்று கூறப்படும் அந்தத் தொழில் நுட்பத்திற்கும் இடையே எந்த அளவிலான தொடர்புகள் இருக்கின்றன. மேற்சொன்ன படங்களுக்கு அடிப்படைத் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டது. ஆக சினிமா எடுப்பதற்கு அடிப்படைத் தொழில் நுட்பம் இருந்தாலே போதுமானது.

இப்படி வேண்டுமானால் சொல்லலாம் "எங்களுக்கு'' திரைப்படம் உருவாக்கல் தொடர்பான அனுபவ அறிவு குறைவு. அல்லது இல்லை. இதனால்தான் இவ்வளவு சிக்கலும். கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றிலும் கவனம் எடுத்தால் கூட பார்க்கக் கூடிய ஒரு படத்தினை உருவாக்கலாம் என்பது என் நம்பிக்கை.

ஆனால் சிலர் என்ன செய்கிறார்கள். தங்கள் திரைப்படத்திற்கு வித்தியாசமான முறையில் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அதாவது தமிழர்களுடன் தொடர்பான உணர்வுகளைத் தங்கள் தனிப்பட்ட உற்பத்திகளுடன் சேர்த்து விடுவதே அம்முறை. தமிழ், விடுதலை, போராட்டம், போன்ற சில விடயங்களை சம்பந்தமில்லாத தம் உற்பத்திகளுடன் ஊறுகாய் போல் சேர்த்து அவற்றினை ருசி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் படைப்பாளிகள்.

உதாரணத்திற்கு மாவீரர் துயிலும் இல்லம்! புலம்பெயர் திரைப்படங்களில் காண்பிக்கப் பட்டுள்ளது. காண்பிக்கவும் படும். அதை யாரும் காண்பிக்கக்கூடாது என்று சொல்ல முடியாதுதான்! ஆனால் அப்படியான இடங்களை தங்கள் லாபத்திற்காக அல்லது ஏதோ சுற்றுலாத் தளங்கள் போல படங்களில் காட்டுவது சரியா என்று தெரியவில்லை.

அதைவிட அப் பிரதேசம் சென்று அதனைப் படம் பிடிப்பதன் நோக்கம் என்ன? சினி ஸ்டைலில் Felling காட்டுறீங்களா? இல்லை Film காட்டுறீங்களா? என்றுதான் கேட்கவேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம்

"இந்தப் படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புக்கள் மேல் நம்பிக்கை இல்லை''. இப்படி நான் எழுதுவதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள், படம் எடுப்பதில் உள்ள சிரமம் அறியுங்கள். பின்னர் எழுதுங்கள் உருவாகும் புலம் பெயர் தமிழரின் திரைத் துறையை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள். நான் என்ன சொல்கிறேன்; உருவாகும் துறை ஒழுங்காக உருவெடுக்க வேண்டும் என்றால் இப்படி எழுதத்தான் வேண்டும். இல்லை என்றால் இன்றைய தென்னிந்திய சினிமா போல் C கிளாஸ் ஓடியன்சுக்குத்தான் படம் எடுக்கும் நிலை வரும் புரியவில்லையா?
3 சண்டை 2 கானா கொஞ்சம் நகைச்சுவை இப்படி ஒரு "துறை'' உருவாகுவதற்கு அது உருவாகாமல் இருப்பது மேல்.


Friday, May 20, 2005

வீழ்வேனென. . .

வழமைபோல் நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவன் சினிமாவைத் தவிர வேறு எதுவும் பேசமாட்டான். அன்று "விஜய்"யாயணம் பேசினான். அவன் அப்படி இப்படி என்றெல்லாம் சொன்னான். அதற்கு நான் ரஜினியைக் கொப்பி அடிக்கிறதுதானே விஜயின் பிரதான வேலை என்றேன். அதற்கு அவன் விஜய் ஒரு போதும் ரஜினியைக் கொப்பி அடிப்பதில்லை. ரஜினி படத்தில் வருகிற கட்டங்களினை தன்னுடைய திரைப்படங்களில் தனக்கு ஏற்றாற்போல் பாவிப்பது மட்டுமே உண்மை என்றான். அந்த உரையாடலே இன்றைய இதழின் இப்பத்தியினை எழுதத் து}ண்டியது.
மண்ணில் பிறக்கிறோம் வளர்கிறோம் உழைக்கிறோம் சில காலத்தின் பின்னர் இறக்கிறோம். இதுதான் வாழ்க்கை. இதை வெறுமனே பிறக்கிறார் பின்னர் இறக்கிறார் என்றும் சொல்லலாம். அதே நேரம் இந்த மண்ணில் குழந்தையாய் பிறந்து சிறுவனாகவோ சிறுமியாகவோ இருந்து வாலிபப் பருவம் அடைந்து பின்னர் குடும்பஸ்தராகி வயது முதிர்ந்து இறக்கிறார் என்றும் சொல்லலாம். இப்படிப் பார்க்கிறபோது ஒரு மனிதனுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை அவன் பெரும் பயணம் ஒன்றினை மேற்கொள்கிறான்.
இப்படியான பயணத்திற்கு உட்பட்டவர்கள்தான் அரிஸ்ரோட்டில், சோக்கிறரீஸ், திருவள்ளுவர், பாரதியார் யாவருமே. இவர்களைப் போல பலரை இங்கு உதாரணத்திற்கு இலகுவாகக் குறிப்பிடலாம். ஆனால் இப்படியானோருக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணிப் பார்க்கிறோமா? அனேகமாக நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மட்டுமே அக்கறைப் பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதாவது பிள்ளைகளுடைய வாழ்க்கை, வீட்டு மோட்கேஜ், வேலை என்று எங்களையே சுற்றிக் கொண்டுள்ள அக்கறைகள்.
அரிஸ்ரோட்டில், சோக்கிறரீஸ், திருவள்ளுவர், பாரதியார் போன்றோருக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் இந்த மனித சமுதாய வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பினைத் தந்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். அரிஸ்டோரில் தத்துவம் சோக்கிறடீஸ் தத்துவம் திருவள்ளுவர் குறள் பாரதியார் கவிதைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமூகத்திற்கு உதவியது மட்டும் அன்றி இன்றும் பலருடைய வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிக் கொண்டு இருக்கிறது. உதவிக் கொண்டு இருக்கிறது என்பதைவிட மனித சமுதாயதிற்கு அல்லது இந்தப் பூமிக்கு தங்களுடைய பங்கினைச் செலுத்திக் கொண்டு இருக்கிறது.
இவர்கள் வேறு வேலையே இல்லாமல் இருக்கவில்லை உதாரணத்திற்கு மாகாகவி பாரதியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மனிதருக்கு எத்தனை சிக்கல். வெள்ளையருடன் பிரச்சனை, வீட்டில் வறுமை இப்படி எல்லோருக்கும் இருக்கிற அன்றாட பிரச்சனைகள் பாரதிக்கும் இருந்தது. இருந்தாலும் இன்று பாரதி, மாகாகவி. இதனால் பிரபல்யம் அடைய வேண்டும் என்று சொல்ல வரவில்லை. எங்களால் நாங்கள் வாழும் இந்த உலகத்திற்கு என்ன பயன்? இன்றைய மனித சமூதாயத்திற்கு இனிவரும் மனித சமுதாயத்திற்கு என் பங்களிப்பு என்ன? இதற்காக நான், மனிதர்கள் யாவரும் இதே சிந்தனையோடுதான் வாழவேண்டும் என்று சொல்லவில்லை.
உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஏதோ பிறந்தேன் கொஞ்சநாளில் இறப்பேன் இடையில் வாழ்வேன் என்று இருந்தால் அது என்ன வாழ்க்கை? எனக்குப் பெயர் வைத்தது என்னை மற்றவர்கள் வெறுமனே அழைக்க மட்டும்தானா? "எல்லாளன்'' என்று பெயர் வைத்துவிட்டு எல்லோர் போலவும் சும்மா வாழ்ந்து கொண்டு இருந்தால் "எல்லாளன்'' என்று பெயர் வைத்து மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தப்பட்டு இருக்கவேண்டிய அவசியம் என்ன? (எல்லாளன் புனைபெயராக இருப்பினும்).
இதனால்தான் சொல்கிறேன் நான் இந்த பூமியில் வாழ்ந்து முடிக்கு முன்னர் ஏதாகிலும் இந்த உலகத்திற்கு அல்லது மனித சமுதாயதிற்கு குறைந்தது எனது தமிழ் சமூகத்திற்கு செய்து விட்டுச் சாகவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்த்தான் இந்த பூமிக்கு எங்களால் ஏதாகிலும் பிரியோசனம். அல்லது நாங்கள் பூமிக்கு வெறும் வெற்றுக் கடதாசிகள்.
விஜய் ரஜினியின் சில சீன்களையே எடுத்துத் தனக்கு ஏற்றால் போல் பயன்படுத்துகிறார் என்றால். விஜய் என்பவர் யார்?. சினிமாவிற்கு ஏதோ ரஜினி செய்கிறார். விஜய் என்ன செய்கிறார். ரஜினி போல வர முயல்கிறார். அப்படி என்றால் சினிமாவில் விஜயின் பங்களிப்பு என்ன? தனித்தன்மை என்ன? ரஜினியைக் கொப்பி அடிக்கிறார் என்றால் விஜய் என்பவர் எதற்கு? ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்க்கமான முடிவு இருக்கவேண்டும் பாரதிக்கு இருந்தது.
அது. . .

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல்
நான் வீழ்வேனென நினைத்தாயோ
இனியென்னைப் புதிய உயிராக்கி
மதி தன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, May 06, 2005

மண மாக்கட்

"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே.
என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது என்பது எளிதில் இயலாத காரியம் (?) . ஆனால் அதுவெல்லாம் இப்போ அக்கறைப் படத்தேவை இல்லாத விடயம்.
அதைவிட மேல் எழுதியவற்றிற்கும் இனி வரப் போவதற்கும் சம்பந்தமே இல்லை. "பிறகேன் எழுதுகிறாய்'' என்று கேட்பீர்கள். வேறொன்றும் இல்லை "எங்கள்" திருமணம் குறித்து மிகவும் குளம்பிப்போய் உள்ளதால் உங்களையும் ஒரு "குளப்பு" குளப்பி விடுவோமே என்பதே என் நோக்கம். குளப்பம் என்னவெனில் எங்கள் திருமணங்கள் "மலிவானதாகப்" போய்க்கொண்டு இருக்கிறதா என்பதுதான்.
திருமணம் என்பது இரண்டு முறைகளின் ஊடாகத்தான் நடைபெறுகிறது. முதலாவது காதல் இரண்டாவது காதல் அல்லாதது (டேய். . .டேய். . . ) காதல்த் திருமணங்கள் அவ்வளவு சிக்கல்களினை ஏற்படுத்துவதில்லை. (ஒன்று இரண்டினைத் தவிர) காதல் அல்லாத திருமணங்கள் இருக்கிறதல்லவா அதில் தான் பெரும் சிக்கல் இருக்கிறது. அதாவது மாப்பிள்ளையினைத் தெரிவு செய்யும் முறை அல்லது பொம்பிளையை தெரிவு செய்யும் முறை. இதில் அனேகமாக பெற்றோரினது தலையீடு மட்டுமே காணப்படும் ஆனால் பிள்ளைக்கு புகைப்படம் காண்பிக்கப் படும் வாய்ப்பும் உண்டு.
மாப்பிள்ளை வெளிநாடா, உள்ளுரா, என்ன வேலை செய்கிறார் என்பதுதான் முதற் கட்டக் கேள்விகளாக இருக்கும். பின் பெற்றோர் யார்? என்ன சாதி? என்ன செய்யினம்? இப்படிக் கேள்விகள் வரும்.
ஆக குறிப்பிட்ட வயது வர ஒன்றைப் பிடித்துக் கட்டிக் கொடுத்து அவர்கள் தார்மீகக் கடமைகளை முடித்து விடவேண்டும். என்பதில் தான் அக்கறை உண்டு அவர்களுக்கு. தனிப்பட்ட அந்த இருவர் தொடர்பான அக்கறை இன்றி, சரி பேசினோம், கட்டிக் கொடுத்தோம் என்ற போக்கில் இப்போ பல திருமணங்கள் நடந்தேறுகின்றன.
எனக்குத் தெரிய திருமண நாள்வரை மாப்பிள்ளையின் முகம் தெரியாது இருந்த ஒரு பெண்ணும் இருக்கிறாள். (இப்படியானவர்கள் மிக அரிதுதான்) ஏன் என்று திருமணப் பேச்சு வார்த்தைக் காலத்திலேயே பெண்ணின் தந்தையிடம் கேட்டேன். ( பெண் நாட்டில் இருந்தவேளை) அவள் "நீங்கள் பாருங்கோ அப்பா! நான் இல்லை எண்டோ சொல்லப் போறன்'' என்று சொன்னதாகச் சொல்லி மகளைக் குறித்துப் பெருமைப்பட்டார். நான் கவலைப்பட்டேன்.
இன்று எத்தனைபேர் திருமணம் குறித்து "அக்கறையாக'' இருக்கிறார்கள். போன வாரம் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார். "இஞ்ச! ஊரில ஒரு பிள்ளை இருக்கிது எக்கவுன்ஸ் டிபாற்மென்ட் ஒண்டில வேலை செய்யுது. ஆரும் கேட்டாச் சொல்லும், இங்க வந்தாலும் வேலை செய்யிறதுக்குப் பிரச்சனை இருக்காது" என்று.
இதை அவர் சொன்னபோது நான் ஏதோ கார் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். அதனால் "எப்பயாவது Offerல வரேக்க சொல்லுங்கோ அப்ப பாக்கிறன்'' என்று சிரித்து விட்டு வந்தேன் (அந்தப் பெண் அவருக்கு மூன்றாவது நபராக இருந்தபடியால் நான் அப்படிப் பேசியது கோபத்தினை ஏற்படுத்தவில்லை). அவர் எனக்குப் பின்னால் வந்தவரிடம் இது பற்றிப்பேசிக் கொண்டு இருந்தார். அவர் இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ விதத்தில் ஒரு சங்கடத்தினை எனக்கு அது ஏற்படுத்தியது.
பெண்ணோ ஆணோ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும் அல்லவா அந்த உணர்வுகள் ஒன்று சேர இருக்கும் இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போக வேண்டும் அல்லவா! இதை எல்லாம் குறித்து அக்கறைப் படாமல், வெறுமனே லண்டன் என்று திருமணத்திற்காக ஒரு பெண் அல்லது ஆண் இங்கு வருகிறார் ஆயின், அவர் காதல் யார் மீது? எனக்கேதோ லண்டன் மீது என்றே படுகிறது.
வாழ்க்கை வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டதா?மனித உணர்வுகளுக்கு இருந்த மரியாதை மரணித்து விட்டதா?
இல்லை இதுதான் நடைமுறை வாழ்க்கையா?
இது எங்களுக்கு மட்டும்தானா?
இது எங்கள் கலாசாரம் சம்பந்தப்பட்டதா?

இதற்கெல்லாம் பதில் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன். அதுவரைக்கும் நீங்களும் நான் இவ்வளவு நேரமும் கூறிய அனைத்துப் பிரச்சனைகள் குறித்து கொஞ்சம் யோசிங்க! முடிந்தால் எனக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள்

Saturday, April 30, 2005

கண்ணீர் அஞ்சலிகள் !

மாமனிதர் சிவராம் அவர்களுக்கு
அனைத்து உலகத் தமிழர் சார்பில்

கனத்த மனத்துடன்
கண்ணீர் அஞ்சலிகளை
காணிக்கையாக்குகிறேன்.

Sunday, April 24, 2005

சின்னத்திரை -755

அன்றொரு நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஏதோ தொடர் நாடகம் ஒன்று அதாவது சின்னத்திரை நாடகம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. ஓடிக் கொண்டு இருந்தது என்றால் அவர்கள் வாடகை கொப்பி எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று அர்த்தம். இன்று கிட்டத்தட்ட இரு மாதங்களின் பின் அதே வீட்டில் அதே நடிகர்களுடன் அதே கதாபாத்திரங்களுடன் (ஆகவே நான் அன்று பார்த்த அதே நாடகம்) திரும்ப ஓடிக் கொண்டு இருக்கிறது. அன்றும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை இன்றும் அதே பிரச்சனை ஆனால் வேறு வடிவத்தில் (Episode 755).

நான் தொடர் நாடகங்கள் பார்க்காதவன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் நான் எதையும் தொடர்ச்சியாகப் பார்த்ததும் இல்லை அதைவிட அவை தமிழ் நாடகங்களும் இல்லை. இங்கே ஆங்கில தொலைக்காட்சிப் பக்கத்தில் ஒளிபரப்பாகும் மூன்று நாலு நாடகங்கள் பார்ப்பேன் அவ்வளவுதான். தொடர்ந்தும் அல்ல நேரம் கிடைத்தால் அதாவது எப்போதாவது Free யாக இருந்தால். நான் பார்த்த எந்த நாடகத்திலும் என்னை அழவைக்க அதாவது பார்வையாளரை அழவைக்க வேண்டும் என்கின்ற நோக்கம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நம்மூர்க் கூத்துக்களைப் பார்த்தால் பார்வையாளர்களை அழவைக்க வேண்டும் எவ்வாறு எனினும் எங்களுக்காக ஏதாகிலும் ஒரு "அழுகுனி'' காட்சியினை உருவாக்கி அதனூடாக நாம் அழவேண்டும் என்ற நோக்கத்தினை முன்னிறுத்தியே சின்னத் திரைகள் அனேகமாக தயாரிக்கப்படுகின்றன.

நான் நாட்டில் இருந்த போது இந்திரா சௌந்தராஜனின் "விடாது கறுப்பு'' முழுமையாக (வாடகைக் கொப்பி) பார்த்தேன். அந்த நாடகம் இவ்வகையான சின்னத்திரை நாடகங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. அதில் இப்போது வருவது போன்ற மலிவான சிந்தனை உடையதான பிரச்சனைகளைக் காட்டிய தில்லை. அது ஒரு புராணக் கதை போன்ற நாடகம். Split Personality ஐ வைத்து எழுதப்பட்ட நாடகம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பதட்டத்துடன் நகர்ந்து கொண்டு இருக்கும். ஆனால் இப்போ எத்தனை நாடகங்கள் அப்படி வருகின்றன? அன்றே அந்தக் காலப் பகுதியில் விடாது கறுப்பு மட்டும்தான் இருந்தது.

இப்போ நான் அறிகிற அளவிற்கு (என்னுடைய வீட்டில் தமிழ்ச் சேவை இருக்கிறது என்கின்ற அளவில் ஏதாவது ஒரு நாடகம் அடிக்கடி குறைந்தது இரண்டு நிமிடத்திற்காவது என் கண்களில் தட்டுப்படும்) சொத்துப் பிரச்சனை வைத்து சுற்றப்பட்டு இருக்கும் கதையுடைய நாடகம். கணவன் மனைவிக்கு இடையில் உறவில் உள்ள குளறுபடி அதுவும் கீழ்த்தரமான முறையில் கையாளப்பட்டு இருக்கும் நாடகம். (அதிலும் அடிக்கடி குடிகாரக் கணவன் வந்து மனைவியிடம் ஏதாவது உளறிக்கொண்டு இருப்பது போன்ற கட்டங்களை அடிக்கடி காணலாம்). காணித் தகராறு கடன், ஊர் விவகாரம், போன்ற குறிப்பிட்ட சில "Mega கருக்களை'' வைத்துக் கொண்டு நாடகம் போடுகிறார்கள்.

இப்பொழுது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் எங்களுக்கு ஊரில் வாழ்ந்த காலத்தில் இருந்து வந்த வாழ்க்கை முறைக்கும் இப்போ இங்கு வாழ்ந்து வரும் வாழ்க்கை முறைக்கும் எத்தனை வித்தியாசம். அப்படி இருக்க இன்னும் ஊர் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அதையும் இயலுமான அளவிற்கு மட்டமாக (என்னுடைய பார்வையில்) எடுத்துத் தள்ளப்படும் 99 வீதமான சின்னத் திரையினை இங்கே கண்ணீர் விட்டு விட்டுப் பார்ப்பதனால் என்ன பயன்?.

இப்படிக் கேட்பதனால் அனேக அளவிலான தாய்மார்களின் எதிர்ப்பினை நான் சம்பாதிப்பேன் என்பது எனக்கு சாதாரணமாகவே தெரியும். அதற்காக பேசாமல் இருந்து விட முடியுமா? சினிமாவும் பார்க்கிறோம் தானே அதற்கென்ன சம்பந்தம் என்றும் சிலர் இல்லை பலர் கேட்கலாம். சினிமாவிலும் இதே பிரச்சனை இருக்கிறது. எனினும் சின்னத்திரை போன்று அது தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு "திருடா திருடி" படத்தில் தனுசின் பெயரென்ன என்றால் அனேகமானோருக்குத் தெரியாது. அதுவே சின்னத்திரையில் வரும் ஏதாவது கதாபாத்திரத்தின் பெயரைக் கேட்டால் அப்படியே அழகாக ஒப்புவிப்பார்கள். இதுதான் சின்னத் திரையின் தாக்கம்.

நாங்கள் அன்று பார்த்த சில திரைப்படங்களினை இன்று பார்க்க எங்களால் முடியாது. (தியாகராஜ பகவதர் ) ஏன் பார்க்க முடியாது? இப்போது சினிமா வளர்ந்து விட்டது. இதற்காக இப்போது வருகிற குப்பைப் படங்களினை புகழ்வதாய் எண்ண வேண்டாம். நான் பொதுவாகச் சொல்லுகிறேன்.

ஏன், இப்போது சிவாஜி "கைவீசம்மா கைவீசு" என்று சிம்ரனைப் பிடித்துப் பாடல் பாடினால் கேட்க முடியுமா? காலத்திற்கேற்ப நாங்கள் மாறுகிறோம் எங்கள் ரசனைகள் மாறுகிறது. இப்படி இருக்கிற பொழுது மேற்குலகில் இருக்கும் எங்களுக்கு அதைவிட 21ம் நு}ற்றாண்டில்இருக்கும் எங்கள் சிந்தனைச் சிறகுகளின் வீரியம் எப்படி இருக்க வேண்டும்.

வெறும் சின்னத்திரைகளின் சில்லறை விடயங்களால் மயங்கி விட்டால் அல்லது இவைகள் எல்லாம் இயல்பாகிவிட்டால் இதுதான் எங்கள் எல்லையாகி விடும். அடுத்த கட்டம் பற்றிய அக்கறை இருக்காது. சரி, பெரிதாக சிந்திக்கத் தேவை இல்லை. உங்கள் நாடுகளில் காண்பிக்கப்படும் சின்னத்திரைகளினை ஒரு தடவை இருந்து பாருங்கள். அப்போது உங்களுக்கு எம் சின்னத்திரைகள் எந்தக் காலத்தில் இருக்கின்றன என்று தெரியும் அல்லது இருக்கிற நாட்டின் சமூகம் எப்படி இருக்கிறதென்றாவது புரியும்.

Friday, April 01, 2005

மெல்லத் தமிழ் இனி. . .

அண்மைக்காலமாக லண்டனில் மீடியாக்களின் வழி வரும் விளம்பரங்களினைப் பார்க்கும்போது "என்னடா இதுவென்று'' கொஞ்சம் வெறுப்பாக இருக்கும். காரணம் வியாபாரப் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்கிற ஒரு நோக்கில் தம்பாட்டிற்கு விளம்பரங்களை போடுகிறார்கள். உதாரணத்திற்கு எங்கள் தாயகத்துடன் சம்பந்தமில்லாததாக இருப்பினும் அதைப்பற்றி அக்கறைப்படாமல் "தாயக மண்ணின் வாசத்தினை நுகர'' என்று கூறி இந்தியாவின் வடக்கு மானிலப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் அரிசிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.

இதனை விட யாழ்ப்பாணப் பொருள் ஒன்றிற்கு இந்தியர்களை அதாவது சினிமாவோடு சம்பந்தப் பட்டவர்களை வைத்து இந்தியாவிலேயே விளம்பரங்களைத் தயாரிக்கிறார்கள். நான் ஒன்றும் இந்தியர்களை வைத்து விளம்பரம் எடுப்பது தவறு என்று சொல்லவில்லை. தாயகம் சம்பந்தமான விடயங்கள் என்று வருகிறபோது அதற்குள் இந்தியா என்ன இங்கிலாந்தினைக் கூட தொடர்பு படுத்தவேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

நடிகை ஒருவரை வைத்து நகைக்கடை விளம்பரம் எடுப்பது வேறு, அதே நடிகையினை வைத்து பூனகரி மொட்டைக் கருப்பன் அரிசி விளம்பரம் எடுப்பது வேறு. சில காலங்களுக்கு முன்னர் அரிசியினை இலங்கை ஏற்றுமதி செய்தது. தற்போதைய சிக்கல்களினால் எல்லாம் தடைப்பட்டு விட்டது. இப்போ ரில்டாவும் பாசுமதியும்தான் எங்கள் அரிசியாக்க சிலர் முயல்கிறார்கள். இந்த வகை விளம்பரங்களினை இந்தியச் சகோதரர்கள் செய்யவில்லை எங்கள் வியாபாரிகள் எங்கள் ஊடகத்துறையினர்கள் தான் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எங்கள் தனித்தன்மை மீது அக்கறை இல்லையோ தெரியாது அல்லது தனித்தன்மை பற்றிய அறிவு இல்லையோ தெரியாது.

இதைவிட தலைக்குள் இல்லாத சில (சிலர் தான்) தொழில் அதிபர்களும் இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் Creative idea கீழே.

இந்தியாவுக்கோர் -காந்தி.
இலங்கைக்கோர் -பிரபாகரன்.
இங்கிலாந்திற்கோர் -அவரது நிறுவனம்

இந்த விளம்பரத்தால் எங்கள் தனித் தன்மைக்கு அல்லது அடையாளத்திற்கு பிரச்சனை இல்லை எனினும் இவர் போன்ற சில தலைக்குள் இல்லாதோர் தான் எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு ஓடிப்போய் "சித்தக்கேணி செங்கட்டிக்கு விளம்பரம் செய்யவேணும் சினேகாவை புக் பண்ணவேணும் என்று அவர்கள் வாசல்களில் காத்திருப்பார்கள்'

அண்மையில் ஒரு தொலைத்தொடர்பு அட்டைக்கான விளம்பரம் ஒன்றினைப் பார்த்தேன் அது முழுக்க முழுக்க தாயகத்திலேயே எடுக்கப்பட்ட விளம்பரம். அதனைப் பார்க்கும் போது ஒருவித சந்தோசம் உள்ளே ஊறும் (சகோதர மொழியினரதாய் இருந்தாலும்) அதற்குக் காரணம் அது என்னுடைய தாய் நாடு. எத்தனையோ ஆயிரம் மைல்கள் தொலைவில் வேறு ஒரு நாட்டில் நான் இருக்கிறேன். அப்படியென்றால் நான் எங்கு இருந்தாலும் என்னுடைய நாட்டினைப் பார்க்கிற பொழுது எனக்கு என்னுடைய அடையாளம் நினைவு படுத்தப்படுகிறது. அப்படியே நான் உணருகிறேன். எத்தனை பேருக்கு இப்படி அடையாளம் குறித்து அக்கறை இருக்கிறது. உங்களை நீங்களே "விரும்பினால்'' கேட்டுப்பாருங்கள்.

வேலைத்தலத்தில் சில தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளையருடன் பேசுகிறபோது ஐஸ்வர்யா ராய் தங்கள் சகோதரி போலக் காட்டிக் கொள்வார்கள். இதற்கு வெள்ளையர்கள் எங்களை இந்தியர்கள் அல்லது அதனோடு தொடர்புடையவர்கள் என்று எண்ணிக் கோண்டு இருப்பதே காரணம். சரி அவர்கள்தான் எண்ணுகிறார்கள் நாங்களாவது விளக்கலாம் என்றால் விளக்கிய பின்னர் எந்த அழகு தேவதையை சொந்தங் கொண்டாடுவது? அதனால் அப்படியே We are Asian you know என்று பேச்சினை முடித்துவிடலாம் என்பது பலருடைய எண்ணம்.
எத்தனை காலம் இப்படி இருக்கப் போகிறோம்?.

சிலருக்கு சாரூக்கான்தான் தங்கள் நாயகன் அப்ப Tom cruise ? அவன் அமெரிக்கன்! அப்ப சாரூக்கான் இலங்கையோ! இல்லத் தமிழோ! சாரூக்கான் ஒரு நல்ல நடிகர் அவரைப் பிடிக்கும் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் Tom cruise அமெரிக்கன் என்று தள்ளிவைத்து சாரூக்கான் து}க்கி வைக்கப்படுவது ஏன்? எங்கள் நிறத்தில் இருக்கும் அவரும் கொஞ்சம் இப்போ உலகளவில் பிரபல்யம். அதைவிட இந்திக்காரர்கள்தானே கிட்டத்தட்ட வெள்ளையர் போல மாறி வருகிறார்கள் ஆகவே எங்களுக்கு என்று ஒருவரும் இல்லாதபடியினால் இவர்களை வைத்துக் கொண்டு விலாசம் காட்டுவோம் என்று எங்கள் இரண்டாம் தலைமுறை நடந்து வருகிறது.

இப்படி அவர்கள்தான் நடந்துவருகிறார்கள் என்றால் எங்கள் ஊடகக்காரரும் தொழிலதிபர்களும் எங்கள் சுய அடையாளம் குறித்து அக்கறை இல்லாமல் சினிமா நடிகையை வைத்து சீரகம் விற்றால்தான் சனம் சீரகம் வாங்கும் என்று எண்ணி வருகிறார்கள். இதனால் என்ன நடக்கும் இன்னும் சிறிது காலத்தில் எங்கள் அடையாளமோ அல்லது தனித்தன்மையோ இன்றி மொரிசியஸ் தமிழர்போல பெயரளவில் இருந்து கொண்டு எங்கள் அடையாளத்தினை தொலைத்து விடும் நிலை புலம் பெயர் ஈழத்தமிழருக்கு ஏற்படும்.

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா ? மெல்லத் தமிழ் இனிச்சாகுமா?
காலம்தான் பதில் சொல்லும்.


Wednesday, March 23, 2005

சுய ஆறுதலுக்காக

தைத் திருநாள்தான் எனக்குப் (தமிழர்) புத்தாண்டு. அன்று எழுதிய கவிதை சில தவறுகளுடன் வெளிவந்தபோது வருந்தினேன் (இங்கு அல்ல). ஆகவே என் சுய ஆறுதலுக்காக இதோ இங்கே இப்போ!

புது வருடம். . .
சோலைக்குயில்கள் கீதம்பாடித்
துயிலெழுப்ப
காலைக் கதிரவன் கிழக்குவாசல்
வரக்கண்டு
வான்மேகம் செவ்வர்ணம்
பூசி நிற்க
நீலக் குயில்கள் நீண்டதொரு
வாழ்த்திசைக்க
சின்னப்பறவைகள் அணிவகுப்பென
சிறகடிக்க
நாள் ஒன்று விடியும் - இப்படி
முன்றரை நூறுகளில் வருடமாய் நிறையும்
 

மறுபடி
நாளையும் விடியும்!
விடிகிற விடிவு எமக்கெல்லாம்
விடிவைத் தரும் விடியலாய் விடியட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Sunday, March 20, 2005

காண்டக்காரர் கதவை...

என் நண்பனின் து}ண்டுதலால் இருபதுகளின் ஆரம்பத்தில் எனக்கு காண்டம் வாசிக்க வேண்டும் (உயர்தர யோசியமாம்) என்று ஒரு ஆசை வர, ஒருநாள் காலை காண்டக்காரர் கதவைத் தட்டினேன். பிறந்த திகதியும் பெருவிரல் அடையாளமும் எடுத்து விட்டு மதியம் வரச் சொன்னார்கள். மதியம்சென்றதும் ஒருவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார் இறுதியில் ஒர் ஏடு ஒன்றினை எடுத்து (அது எனக்குரிய ஏடாம்) வாசிக்கத் தொடங்கினார்.தம்பி நீர் இப்படி, நீர் அப்படி என்று அடுக்கினார். எனக்கு நல்லவேளை அம்மா வரவில்லை என்று தோன்றியது. என்னைப் பற்றிக் கூறியதில் எனதுவெளிநாட்டு பயணமும் இந்த பத்தி எழுதும் வழக்கம்கூட அதில் அடக்கம். அவர்கள் குறித்துச் சொன்ன கால கட்டத்திலேயே லண்டன் வந்துவிட்டேன். இன்று வரை சொல்லியபடி நடந்து வருகிறது. இப்படி இருக்கிற பொழுது நான் எப்படி அதனைப் பொய் என்று சொல்ல முடியும். என்னைப் பொறுத்தமட்டில் காண்டம் என்பது உண்மை! அவர்கள் சொல்லியது சற்றும் பிசகாமல் நடந்து வருகிறது.

ஆனால்!

என்னுடைய உறவினரும் எனக்கு அடுத்த படியாக சென்று காண்.. வாசித்தார். அவருக்கும் பல விடயங்கள் சொன்னார்கள் அதில் அவருக்கு முக்கியமான அவரது வெளிநாட்டுப் பயணமும் அடக்கம் (அதாவது அந்த நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள்). ஆகவே இரண்டு மாதங்களுக்குள் நான் லண்டன் வந்து அவருக்காக காத்திருந்தேன். பல வருடங்கள் ஆகியும் அவர் வரவில்லை அவர் இன்னும் நாட்டில்தான் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை காண்டம் உண்மையானது அல்ல. அப்போ பொதுவான பார்வையில் காண்டம், உண்மையானதா பொய்யானதா. உண்மை என்றும் சொல்ல முடியாது பொய் என்றும் சொல்ல முடியாது. அப்போ என்ன செய்யலாம்?

முதலில் ஒரு சம்பவத்தினைக் கூறிவிட்டு பின்னர் விடயத்திற்கு வருகிறேன். அவர் என் நண்பர், ஒரு சட்டவல்லுனர். அவரது மகனும் அதே தொழிலினைத் தொடரவேண்டும். என்று ஆசைப்பட்டார் .மகனுக்கும் அதில் ஆசை இருந்தது. (நானும் என் அப்பாவைப்போல ஒரு பிரபலமான விஞ்ஞானியாக வர ஆசைப்பட்டேன்) இடையில் தனது மகனுக்கு காண்டம் வாசித்து கல்வி முதற்கொண்டு வாழ்க்கைத் துணைவரை கேட்டுப் பதிவு செய்து வைத்தார். இப்பொழுதுதான் பிரச்சனை.

மகனுக்கு 18 வயதாகி விட்டது. தகப்பனும் ஏதோ காண்டம்தான் இவரது நேரசுசி (time table) என்று மனதில் எழுதிவைத்து விட்டு மகனை அதற்கு ஏற்றாற் போல் வளைத்திருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்படைந்த மகன் இப்போ காண்டத்திற்கு நேர் எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டான். சட்டம் படிக்க முடியாது கடை வைக்கப் போகிறேன் என்கிறான். வாழ்க்கைத் துணைக்கும் எதிர்தான் என்று முடிவெடுத்து விட்டான்.

அவனுடன் பேசச் சொன்னார் என் நண்பர். அவனிடம் பேசியபோது என் நண்பர், மகன் வைத்திருந்த மரியாதையினை இழந்து விட்டார் என்பது புரிந்தது. எனக்கு ஒரு உதாரணம் சொன்னான் "எனது தந்தையிடம் ஜோசியன் யாராவது இன்று பாதையில் இருந்து பணம் பொறுக்குவாய் என்று சொன்னால் அந்தப் பணம் கிடைக்கும்வரை தலையைக் குனிந்து வீதியைப் பார்த்துக் கொண்டுதான் செல்வார் என் அப்பா '' என்றான். பலவிதமாகப் பேசினான். அவனுடைய வயதிற்கு அவனது முதிர்ச்சி சற்று செறிவானதாகவே இருந்தது.

இருப்பினும் இப்படி Anti-அப்பாவாக மாறியதற்குக் காரணம் என்ன? காண்டம்!. ஒருவேளை அவன் சட்டத்திற்குள் நுளை வானாகில் ஓர் பெரும் புள்ளியாக வரக்கூடும் ஏனெனில் அவனது தகப்பனுடைய உதவி இருக்கும் அதைவிட அவனுக்கு "இத்துறையின் ஈடுபாடு'' இயல்பாகவே தகப்பனுடாக கடத்தப்பட்டு இருக்கும். இப்போது எல்லாம் நழுவி விட்டது.

உண்மை, பொய் என்று சொல்ல முடியாதது ஜோசியம் (என் கருத்து). அப்போ என்ன செய்யலாம்? ஒன்றையும் எங்களைக் கட்டுப்படுத்த விடக்கூடாது. சரி நம்புகிறீர்களா பிரச்சனை கிடையாது அப்படியே விடுங்கள் சொன்னது மாதிரியோ அல்லது தலையில் எழுதிய மாதிரியோ நடக்கும். அதைப்பற்றி அக்கறைப் படாதிருங்கள். அதை விட்டுவிட்டு அதன்படிதான் நடக்க வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு விடயமும் நிறைவாய் நடக்காது.

எனக்கு அவர்கள் வினாடிக்கு வினாடி என்ன நடக்கும் என்றா சொன்னார்கள்? இல்லையே! ஆகவே நானே சிலவேளை நடக்கின்ற சம்பவங்களினை அவர்கள் சொன்னவற்றுடன் பொருத்தி விட்டேனோ தெரியாது. நான் ஒரு முறை செய்யும் தொழிலை விட்டு விலகுவேன் என்று சொன்னார்கள். இன்றுவரை ஆறு இடங்களில் இருந்து விலகி விட்டேன். ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொன்னார்களோ என்று கேள்வி எழும். இப்படிக் கண்டதற்கெல்லாம் ஒரு காண்டம் வந்து! என் முன்னின்று பல் இளிக்கும்.

எந்த விடயத்திலும் நிறைவிருக்காது. ஒருமுறை பத்திரிகை ஒன்றில் ராசிபலன் பக்கத்தினை வாசித்து எல்லா ராசியும் எனக்குப் பொருந்துவதை அறிந்தேன் உண்மையினைச் சொன்னால் எல்லாவற்றினையும் எனக்கு ஏற்றாற்போல் பொருத்தி இருக்கிறேன். இந்த சம்பவத்தோடு சகலவற்றினையும் கைவிட்டேன்.

மேற்சொன்ன என் நண்பரின் சம்பவம்தான் இங்கே இப்பத்தியினை எழுதத் து}ண்டியது. எத்தனைபேர் என் கருத்தினை ஏற்றுக் கொள்கிறீர்களோ தெரியவில்லை! ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நான் பெற்ற தெளிவு பெறவேண்டும் இவ்வுலகு அவ்வளவுதான்.

Friday, March 04, 2005

இழந்து இருக்கிறோம்

ஒரு காலத்தில் தென் ஆசியாவின் மிகப் பெரிய நூலகம். எத்தனையோ மனிதர்களை மாமேதைகளாக்கிய நூலகம். சில சிங்களவர்களும் மரியாதை கொடுத்து வந்த நூலகம். எங்கள் யாழ் நூலகம். 1981ஆம் ஆண்டு யூன் 31ம் திகதி இரவு நூற்றுக்கு மேற்பட்ட சிங்களக் காடையர்களினால் காமினி திசானாயகாவின் நேரடி வழிநடத்தலில் எரித்து நாசமாக்கப்பட்டது. தமிழ் சுவடிகள் ஓலைகள் உட்பட அண்ணளவாக 95.000 வகையான பிரதிகள் ஒரே இரவில் எரித்து அழிக்கப்பட்டன. தமிழே முக்கால்வாசி அந்த இரவில் எரிந்ததெனவும் கொள்ளலாம். இப்படி எரிக்கப்பட்ட காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

உங்கள் தாய் நாடு இது இல்லை என்ற பின்பும் ஏன் இனவேறுபாடுகள் இருக்கிறதென்று கூறி தொடர்ந்தும் இங்கேயே இருக்கிறீர்கள் உங்கள் திராவிட நாட்டிற்குச் செல்ல வேண்டியதுதானே அங்கே இனவேறுபாடுகள் இல்லை. உங்கள் கோவில், உங்கள் கடவுள், உங்கள் கலாச்சாரம், உங்கள் கல்வி. உங்கள் பல்கலைக் கழகங்கள். எல்லாம் அங்கே இருக்கின்றன உறங்கும் சிங்களம் எழும்பி தமிழர் தமிழீழத்தினை இலங்கையில் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அறிந்தால் நிலமை சுமூகமாக இருக்காது. ஆகவே தமிழர்கள் உறங்கிக்கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்களை எழுப்பாமல் இருப்பது உசிதமானது. நித்திரையில் உள்ள சிங்கத்தினை எழுப்பினால் சிங்கம் அமைதியாக இருக்காது என்பதனை அறிவீர்கள். இது லொக்கு பண்டார என்பவரது பேச்சு.

நாங்கள்தானே ஆள்பவர்கள். நாங்கள்தான் ஆளவேண்டும். சிறுபான்மையினரிடம் கொடுக்க
முடியாது. நாங்கள் சிங்களவராகவும் பௌத்தர்களாகவும் இந்த நாட்டில்தான் பிறந்தோம். நாங்கள்தான் இங்கு பெரும்பான்மையினர். ஆகவே நாங்களே ஆளுவோம்
. இது விமலா கன்னங்கரா.


இன்னொருவர், இல்லை! எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழ்த் தலைவர் என்பவரைப் பிடித்து அண்மையில் உள்ள ஒரு கொங்கிறீட் போஸ்டில் கட்டி வைத்து அவர் சாதாரணவாசி போல் மாறும்வரை அவருக்கு சவுக்கடி கொடுப்பேன். இதற்குப்பின்னும் யாராவது அவரைப்போல செய்தால் அவரைப் பிடித்து ஆற்றில் எறிந்து விடுவேன் இப்படிச் சொன்னவர் சந்திரபால என்பவர்.

இப்படிப் பலர் தமிழுக்கும் தமிழனுக்கும் எதிராக பேசினார்கள். இவ்வளவும் இந்த நூலகம் அழிக்கப்பட்ட காலங்களில். வெறும் பேச்சுக்கள் என்று மாத்திரம் இல்லாமல் பல அரசியல், முக்கியத்துவம் வாய்ந்தது எங்கள் நூலக அழிப்புச் சம்பவம். அன்று நடந்த சம்பவங்களுக்கு அல்லது சிங்களத்தின் சீர்கெட்ட வன்முறைகளுக்கு பெரும் சான்றாக நேற்றுவரை இருந்தது எங்கள் நூலகம்.

இதை எப்படி மீளக்கட்ட முடியும்? மீளக்கட்டுவது என்பது இத்தனை வருடம் சிங்களத்தின் காட்டுமிராண்டித் தனத்துக்கு சான்று பகர்ந்த எங்கள் நூலகத்தினை மறுபடி எரிப்பதற்குச் சமனானதாகும். அன்று தமிழனின் புலமைக்கு பேர்போன நூலகம் அழிக்கப்பட்டது இன்று சிங்களவரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சான்றாய் நின்ற நூலகம் அழிக்கப்பட்டு இருக்கிறது.

சிலர் என்னைத் தவறாக நினைக்கலாம். நூலகம் தேவைப்படுகிறதென்றால், புதிதாக ஒன்றை அந்த நூலகத்திற்குப் பக்கத்திலேயே அழகாகக் கட்டி இருக்கலாம். எத்தனையோ நவீன வசதிகளும் அமைத்தும் இருக்கலாம். அதைவிட்டு விட்டு எதற்காக எங்கள் வரலாறு சொல்லும் ஒரு பொக்கிசத்தினை புனரமைப்பு என்ற பேரில் இல்லாமல் செய்யவேண்டும்.

சரி, நாளைக்கு ஒரு நவீன சாதனத்தினைப் பொருத்தவேண்டும் என்ன செய்வது? அந்தப் பழைய கட்டடத்தில் ஓட்டை போடுவதா? ஒரு Lift பொருத்தவேண்டும்! முடியுமா? பிறகென்ன புனர் நிர்மாணம்? அதைவிட இருந்த பழந்தமிழ் ஓலைகள் எல்லாவற்றை எல்லாம் எங்கு போய் மறுபடி எடுப்பது.

அறிவாளிகள் புத்திஜீவிகள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? ஏன் இவர்கள் இதைத் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் சில விடயங்கள் கேள்விப்பட்டேன். எத்தனையோ லட்சங்கள் செலவாகி இருக்கிறது இந்தப் பணிக்கு, அதில் எத்தனையோ லட்சங்கள் தனிப்பட்ட (கும்பல்) சிலரது சட்டைப்பைக்குள் சென்று இருக்கிறது. அரசின் இந்த "மூடிமறைப்பு'' திட்டத்திற்கு இப்படியான சுயநலக் கும்பல்களின் ஆமோதிப்பு தான் இந்த புனரமைப்பு என்கின்ற பெயரில் கொள்ளை நடக்கக் காரணமாய் இருந்திருக்கிறது.

கொள்ளை ஒரு பக்கம் இருக்கட்டும் அரசியல் பக்கம் பாருங்கள் எங்கே ஓர் தருணம் கிடைத்தால் தமிழ்ப்பெண்ணுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுக்க விரும்பும் அம்மையாருக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் தான் தமிழர் மீது அக்கறையான ஓர் ஜனாதிபதி என்று காட்டுவதற்கு பிரசித்தி பெற்ற தமிழர்களின் நூலகத்தினை அரசுதான் புனரமைத்துக் கொடுத்தது என்று அதனை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறாராம்.

ஆக எங்கள் நூலகத்தினை புனரமைக்கிறோம் என்று சொல்லி இறுதியில் இருந்ததினை விட இழந்து விட்டு இருக்கிறோம். ஆனால் யாரும் அதைக் குறித்துக் கவலைப்படுவதாய் இல்லை. நேற்றும் ஒருவர் என்னிடம் புது நூலகம் பற்றிப் பெருமையாகப் பேசினார். எது எப்படி இருப்பினும் இந்த முழு திட்டத்திற்கும் ஓடித்திரிந்த அந்தத் தனிப்பட்ட கும்பல்
லண்டன் வந்து தம்பட்டம் அடிக்காதவரை சந்தோசம்,

அவர்களுக்கு!

Thursday, February 17, 2005

சுனாமி முடிந்துவிட்டது

சுனாமி முடிந்துவிட்டது சனம் ஆறப்போகுது மச்சான் ஏதாவது செய்யவேணும் இல்லாட்டி சனம் எல்லாத்தையும் மறந்திட்டு பேசாம இருந்திடும்' என்று என் நண்பன் சொன்னான். உண்மைதான்! எங்களில் பலருக்கு அது மறந்து போய்விட்டது. ஆனால் அன்றைய நாட்களில் நாங்கள் எப்படி ஒடித் திரிந்து உதவினோம் ஆனால் இப்போது!!. எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டது.இந்தச் சுனாமி மட்டுமல்ல பல விடயங்களில் நாங்கள் இப்படித்தான். உடைக்கப்படுகின்ற சோடா போல (குளிர்பானங்கள்). புஸ்... என்று ஒரு சத்தத்துடன் சிலவேளைகளில் வெளியிலும் சிந்தி, பின் அடங்கி விடுவது. ஆக இது இயல்பான ஒன்றே!அப்போ இனிமேல் எங்களில் பலருக்கு சுனாமி குறித்தோ அவை தந்த விளைவுகள் குறித்தோ அக்கறை வராது. எல்லாம் கரைந்து விட்டது. உண்மைதான்! ஆனால் எப்படி இதனை விட்டுவிட்டு இருப்பது? முடியாதே! இப்படி நான் எனக்குள் யோசித்தபடி இருக்கிறேன். . . . .


பாடசாலைக் காலங்களில் நாங்கள் ஏதாவது பரீட்சையில் சித்தியடையவேண்டும் என்றால் இராப்பகல் கண் விழித்துப் படிக்கின்றோம். பலவேளைகளில் பரிட்சையில் வெற்றியும் அடைகின்றோம். பின்னர் வேலை செய்கின்றபோது உயர்பதவியினை அடைவதற்காக பலவழிகளில் சிரமப்பட்டு வேலைசெய்து சிலவேளைகளில் வெற்றியும் அடைகின்றோம். இந்த முயற்சிகளிற்காக செலவிடப்படும் காலம் அனேகமாக சில மாதங்களாக இருக்கும். ஒருவாரத்தில் பரிட்சைக்காக அல்லது வேலை உயர்வுக்காக எங்களைத் தயார் செய்து கொள்வது கடினமே. (பரிட்சை என்றால் வெறும் அரை இறுதிப் பரீட்சை என்று எண்ணமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்)


இதைவிட, காதல் என்று ஒரு விடயம் இருக்கிறதே ஐயகோ!
அது காலத்தினைப் பற்றியெல்லாம் கவலைப்பட வைக்காது. காதலியையோ காதலனையோ அடையும் வரை உள்ளே நெருப்பினை எரித்தபடி இருக்கும். இப்படியே இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சுனாமிக்கு வருவோம்.


ஏன் சுனாமி எங்களுக்கு இப்படியான தாக்கத்தினை ஏற்படுத்தாமல் சில வாரங்களுள் ஓடி ஒளிந்து கொண்டது?. கல்வித்தேர்ச்சி, பதவி உயர்வு, காதல், போன்றவற்றை விட சுனாமி தாழ்ந்ததா? இங்கேதான் ஒரு விடயம் கவனிக்கப்பட்டாக வேண்டும். கல்வியா வேலையா காதலா சுனாமியா என்பதெல்லாம், நாங்கள்தான் தீர்மானிக்கிறோம். நாங்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தில் தான் எல்லாம் இருக்கிறது. காதலை எடுத்துக் கொண்டால் 'ஓர்மோன்களும்' சேர்ந்து எங்கள் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியினை வழங்குகிறது.


ஆகவே ஒரு விடயத்தில் உள்ள ஆர்வம் அல்லது அவசியத்தன்மை அனேகமாக அந்த விடயத்தில் வெற்றி அடையச் செய்கிறது. இப்படியாயின் புலம்பெயர் ஈழத்தழிழர்கள் (நேரடியாகப் பாதிக்கப்பட்டோரை விட) சுனாமி நிவாரணச் செயற்பாடுகளுக்கு உதவுவது ஆர்வத்திலா அல்லது அதில் உள்ள அவசியத்தன்மையிலா? பெரிதாக இரண்டும் இல்லை என்றுதான் எண்ணுகிறேன்! 'என்னடா சொன்னாய்' என்று எத்தனைபேர் வெகுண்டெழுகிறீர்கள்? ஒருவரும் இல்லை! ஆனால் 'அப்படிச் சொல்லமுடியாது' என்று பலரும் சொல்லுவீர்கள். சுனாமி எங்கள் மனங்களில் 'அன்று' பெரிதாக இடம் பிடித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 'சர்வதேச ஊடகங்கள்' என்பது என் கருத்து!


ஏனெனில் சுனாமி நாட்டில் பலவித அழிவுகளினைத் தந்திருந்தாலும் கூட இருபது வருடமாக உரிமைப் போராட்டம் நடந்து வரும் எம் நாட்டில் எப்போதாவது இப்படி ஒன்றாய் சேர்ந்து நின்றோமா?. இல்லையே, இப்போது தானே எங்கள் பலம் எங்களுக்கே தெரிந்து இருக்கிறது. அதனால் தான் சர்வதேச ஊடகங்களும் முக்கிய காரணம் என்கிறேன். ஊடகங்களை விட்டுவிட்டு மறுபடி விடயத்திற்கு வருவோம்.


சில விடயங்களைப் பொறுத்த வரையில் எங்களுக்கு இயல்பாகவே ஒரு ஆர்வம் இருக்கிறது. சிலவற்றைப் பொறுத்தவரையில் தேவை இருக்கிறது. இதனால் தான் நாங்கள் அந்த சில விடயங்களில் மும்முரமாக இயங்குகிறோம்.


ஆகவே, நான் சொல்ல வருவது என்னவெனில் இயல்பான ஆர்வத்தினை தவிர்த்து தேவை கருதி சில விடயங்களில் இறங்குவது என்பது நாமே ஏற்படுத்திக் கொள்வது. இதுபோல் சில தீர்மானங்களினை நாம் ஏற்கனவே எங்களுக்குள் அமுல்ப்படுத்தலாம். உதாரணத்திற்கு எங்கள் தேசம் என்று எடுத்துக்கொண்டால்! என் தேசத்தில் பற்று எனக்குள் ஹஎன்றும்' இருக்க வேண்டும். எம் தேசத்தினைக் கட்டியெழுப்பும் பணியில் என் பங்கு என்ன? எப்படியாய் நான் இதைச் செய்யப்போகிறேன் என்றெல்லாம் அக்கறை உடையவனாய் இருக்கவேண்டும் என்று ஒரு தீர்மானத்தினை ஏற்கனவே நான் எடுத்து இருக்கவேண்டும்.


அதாவது சில விடயங்களை நாங்கள், எங்கள், சமூகநலன் கருதி எங்களுக்குள்ளே இப்படி எல்லாம் ஏற்கனவே எழுதி வைத்து விட்டு இருக்கவேண்டும். அப்படி என்றால்தான் ஆர்வமற்ற ஆனால் அவசியமான எங்கள் செயற்பாடுகளுக்கு எப்போதும் உந்துதலினை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் எங்கள் கருமங்களில் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்பது, இந்த அடியவனின் மிகமிகத் தாழ்மையான கருத்து.

Thursday, February 03, 2005

யாரும் யாருக்கும்

அண்மையில் இணையத்தளம் ஒன்றில் சாதனைப் பெண்கள் என்ற ஒரு பதிவினை வாசிக்க நேரிட்டது. அந்தப் பதிவினிலே டயானாவின் பெயரும் இருந்தது. டயானா செய்த சாதனை என்னவென்று அறிவோம் என்ற எண்ணத்தில் அந்த பகுதியினை வாசிக்கலானேன். அந்தப் பத்தியின் படி டயானா செய்த சாதனை ஓர் எயிட்ஸ் நோயாளியுடனும் தொழு நோயாளியுடனும் கை குலுக்கினார் என்பதே. எனக்கு இன்னொன்றும் தெரியும். அவர் மிதிவெடிகள் அகற்றுதல் சம்பந்தமான சேவை ஒன்றிலும் ஈடுபட்டு இருந்தார்.


சாதனைப் பெண் டயானா குறித்த பத்தியில் மேற்சொன்ன கை குலுக்கல் சமாச்சாரத்தை விட மீதி என்ன தெரியுமா? அவர் எவ்வளவு அழகானவர்! முதல் பத்திரிகையாளர் சந்திப்பு! அதாவது இவர்தான் இனி இளவரசி என்று அறிந்தவுடன் அவர் பணி புரியும் பாடசாலைக்குச் சென்று அவரை படம் பிடித்தமை! அது எப்படி அங்கு கூறப்பட்டது தெரியுமா? இதோ இப்படி


ஒரு சிறிய குழந்தையைக் கையில் து}க்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா "மிஸ்'' தயக்கத்துடன் வெளியே வந்தாள். தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கேர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர... ( இப்படி! ) அதைவிட அவர் குடும்பம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள்

இதனை ஆட்சேபித்து என் கருத்தினைச் சொன்னேன் என்னை "ஆணாதிக்கக்காரன்'' என்று விட்டார்கள். அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கு இல்லை.


டயானா சாதனைப் பட்டியலில் இடம்பெற்றதன் காரணம் என்ன? அவர் பிரபல்யமான பெண்ணாக (அதாவது நானறிந்த அளவில் உலகில் அதிகளவு புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்) இருந்தமையாக இருக்கலாம் அதாவது பிரித்தானிய ராணியின் மன்னிக்கவும் மகாராணியின் மருமகள், அழகானவர். இரண்டாவது தகைமையே டயானா பிரபல்யமானதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அதைவிட டயானா ஒன்றும் பெரிதாய் செய்து விடவில்லை. அனைத்தும் ஊடங்களே! அதுவும் இங்கிலாந்து ஊடகங்கள்! யப்பா...!


எல்லாம் ஒரு வகை பிரமிப்பு! டயானா! மகாராணி!. ஒரு உதாரணம் சொல்கிறேனே, பக்கிங்காம் மாளிகை!


லண்டனுக்கு வருகிற என் நண்பர் முதற்கொண்டு உறவினர்வரை பார்க்க விரும்புகிற ஒரு இடம். அங்கே என்ன நிகழ்கிறது, ஒரு பெரிய மாளிகை சுற்றி இரும்புத் து}ண்களுடனான ஒரு இரும்பு வேலி! ஏதோ ஒரு நேரத்தில் காவலாளிகள் மாறுவார்கள் (வேலை முடிந்தவுடன் இன்னொருவர் பொறுப்பேற்பார்). இதுதான் அங்கு முக்கியமான கட்டம்! புதிதாக சிலர் வருவார்கள். ஏதேதோ சொல்லுவார்கள். நின்றவர்கள் போய்விடுவார்கள். இதை பார்க்கத்தான் அங்கே போகிறோம். (என்னைப் பார்க்க யாராவது லண்டன் வந்தால் என் பாடு அதோ கதிதான். பக்கிங்காம் மாளிகை...)


எங்களுரிலும் காவலாளிகள் இருக்கிறார்கள். வேலை முடிய மற்றவர்கள் மாறி வருவார்கள். இதனை நாங்கள் யாரும் அங்கு போய் வாய் பிளந்து பார்ப்பதில்லையே! ஏன்? சரி போய்ப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் என்ன நடக்கும்? "போய் வேலையப் பாரன்... இங்க என்ன படமா காட்டிறம்...'' இப்படி ஒரு அர்ச்சனை கிடைக்கும். இதுவும் குறைந்த பட்ச அர்ச்சனையே.

அப்படி இருக்க இங்கே ஏன் இதனை அனுமதித்து இருக்கிறார்கள்? அதுவும் இது ஒன்றும் சுற்றுலா பிரதேசம்போல உள்ளே செல்ல முடியாது. அதிக பட்சம் இரும்பு வேலிகளுக்கிடையில் முகத்தினை வைத்துக் கொண்டு குரங்கு போல பராக்குப் பார்க்கலாம். அவ்வளவுதான்.


சரி இதற்குப் பின்னும் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று சொல்லாவிட்டால், அது அவ்வளவு நன்றாக இருக்காது. சில விடயங்களில் சில மனிதர்கள் தங்களின் சுய அனுகூலங்களுக்காக சிலவற்றைக் கடைப்பிடிப்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம் பக்கிங்காம் மாளிகை. (மக்கள் ஏதோ மனுக்கொடுக்க வந்தவர்கள்போல வெறுமனே காய்ந்து கொண்டு இருந்துவிட்டு வீடு செல்லுகிறார்கள்.)

ஒரு மனிதரை மதிப்பது வேறு! அவருக்கு மேலதிகமாக மரியாதை கொடுப்பது வேறு! இரண்டாவதை ஏற்க முடியாதது என்றே சொல்வேன். காதல்கவிதை திரைப்படத்தில் டயானாவை 'காதலான தாயே' என்று ஒரு பாடலில் வர்ணித்து இருப்பார்கள். இந்த விடயத்தில் டயானாவில் ஏதும் தவறில்லை. வியாபார நோக்கில் அன்றைய சு10ளலில் சினிமாக்காரர்கள் செய்த யுக்தி இது! ஏனென்றால் போட்ட பணத்தினை திருப்பி எடுக்கவேண்டும். பார்வையாளர்களினைக் குறித்து அக்கறை எல்லாம் அவர்களுக்கு இல்லை. ஆனால் பார்த்தவருர்களுக்கு டயானா தேவதை! எங்கோ இருந்த பெண்மணிக்கு மனதில் 'இளவரசி' சிங்காசம் கொடுத்து அமர்த்தி விட்டார்கள்.


எனக்கென்னவோ யாராகிலும் சினிமா நடிகர்களை தல,கில என்று சொல்லக் கேட்டால் மிகவும் வேதனையாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் இன்னொருவரின் பங்கு என்ன? ஏன் இப்படி ஒரு மாயை, பிரம்மை?

யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. யாரும் யாரையும் விடக் கூடியவர்கள் அல்ல! ஒருவர் மீது ஒருவர் பிரமிப்பு வைப்பது து}க்கித் தலையில் வைத்திருப்பது போன்றவை சென்ற நு}ற்றாண்டுக்கு வேண்டு மென்றால் பொருந்தலாம் ஆனால் இந்த நு}ற்றாண்டுக்கு.... வேண்டாம் து}க்கி எறியுங்கள்!

Thursday, January 27, 2005

புலம் பெயர்ந்தோர் சினிமா

இன்று நாங்களும் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்கிற ஆசை புலம்பெயர்ந்த பல தமிழர்கள் இடையே துளிர்த்து வருவதனை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நேரத்தில் இவ்விடயம் குறித்து எழுதுவதே சாலச்சிறந்தது என எண்ணுகிறேன். நாம் வாழும் இந்த நாடுகள், பொதுவாக எல்லா துறைகளிலும் உச்ச நிலையிலேயே இருக்கின்றன இப்படியான நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் திரைப்படங்கள், எப்படியான ஒரு தரத்தினை உடையதாக இரக்கின்றது? இதுபற்றி நான் சொல்லி நீங்கள தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பத்துப்பேர் ஒன்று கூடுவார்கள், திரைப்படங்கள் எடுக்கவேண்டும் என்கின்ற தங்கள் ஆசை பற்றி அதில் சிலர் பேசுவார்கள் "எடுக்கிறமடா" என்று ஒரு சபதம் இடுவார்கள். இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்கவேண்டாம், எனக்குத்தெரியும். பின் இவர்கள் அறிமுகமான சிலருடன் சீரியசாக பேசுவார்கள், நடிகர்கள் தேடுவார்கள்! பணம் என்பார்கள்! சேவை என்பார்கள்! இப்படி ஒவ்வொரு விடயமும் வளர்ந்து கொண்டு வரும், அதன் பின் படமும் வெளியில் வரும்.


ஆண்டவனின் அருளுக்காகவோ என்னவோ இப்படத்தினை அனேகமாக ஆலயங்களிலேயே காண்பிப்பார்கள். ஆக இவர்கள் திரைப்படம் என்று "ஏதோ" ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். என்ற அந்த முயற்சியினை பாராட்டலாம், அதாவது கொலம்பஸ் இந்தியா என்று எண்ணி மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடித்தது போல ஆனால் நிச்சயமாக அந்த "படத்தினை" யாராலும் பாராட்ட முடியாது, ஏனெனில் அது படமே அல்ல அதையும் தாண்டி.....

தானும் எடுக்காமல் எடுப்பவனையும் விடாமல்..... என்று சிலர் பொங்கி எழுவீர்கள். நான் இப்படி எல்லாம் எழுதுவதால் எனக்கு விருது ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
இத் துறையில் எங்கள் நிலை குறித்து சற்று எண்ணிப் பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக, வீடுகளில் இப்படத்தின் பிரதியினை போட்டுப் பார்த்தால் ஏதோ பிறந்த நாள் கொண்டாட்டம் என்றோ திருமண வீட்டில், கை கலப்பினையும் சேர்த்து தவறுதலாக எடுத்து விட்டார்களோ என்றோ தோன்றும்.

ஒரு முறை நான் படைப்பாளி ( ?? ) ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது தொலைக் காட்சியில் ஒருவர் ஒரு சிறுவனுடன் பாக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். அது அவருடைய திரைப்படம் என்று எனக்குத் தெரியாது, நான் அவரிடம் அவர் சொந்தக்காரரா? என்று கேட்டேன் , ஆம்! என்றார், எங்க கனடாவிலா இருக்கிறார்? என்றேன், இல்லை! என்றார், பின்ன ஈரோப்பா? என்றேன், "ச்ச...இந்தாள் இங்கதான் இருக்குது!" என்றார், பிறகேன் இப்படி இவரை TVல பார்க்கிறீங்கள் என்றேன், "இது என்ர படம் ஐசே!" என்றார்.

நான் என்ன செய்வது பாக்கில் ஒருவர் ஒரு சிறுவனுடன் விளையாடும்போது எனக்கு இது ஒரு படம் என்கிற உணர்வினை அந்த "அது" தந்திருக்க வேண்டும், ஆனால் நான் யாரோ ஒரு உறவினர் தன் மகனை வீடியோ எடுத்து இவருக்கு அனுப்பி இருக்கிறார் என்றுதான்; நினைத்தேன். நான் இந்த திரைப்பட முயற்சியினை பற்றி பேசியபோது அவர் கடும் சிரத்தையெடுத்துத்தான் இம்முயற்சியில் வெற்றிபெற்று இருக்கிறார் என்று உணர்ந்தேன். (வெற்றி என்று நான் சொல்வது படத்தினை முழுதாய் எடுத்து முடித்ததையே )அதற்காக இப்படியான ஒரு படத்திற்கு அவரை நான் எப்படிப் பாராட்டமுடியும்?.

இந்தியச் சினிமாவில் எத்தனையோ பேர் சேர்ந்து முழுநேரமாக திரைப்பட முயற்சியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் நாங்கள் அப்படி அவர்கள்போல் இயங்க முடியாது, இது எங்களுக்கு பகுதிநேர வேலை போலத்தான், என்பது பலரின் வாதம். உண்மைதான்இப்படி முழுநேரமாக இயங்க முடியாது என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இந்த முயற்சியில் இறங்கும் எத்தனை பேருக்கு திரைப்படத்தினை எப்படி உருவாக்குகிறார்கள் என்று தெரியும்?. அதாவது Plot, Story, Subplot, Screenplay, Dialouge, Story board, Direction, Cinematography, இப்படி நீளும் பட்டியல் குறித்த அறிவு எத்தனை பேருக்கு உண்டு.

இதனை விட்டுவிட்டு ஒரு கமெராவையும் இரண்டு லைட்டுகளையும் துக்கிக்கொண்டு "நல்ல கதை கிடைச்சிருக்கு படமெடுக்கிறம் என்று எடுத்தால்" எதிர்காலத்தில் அவரவர் சொந்த வீடுகளில்தான் படங்களை திரையிடவேண்டும். எங்களால் நல்ல காத்திரமான படங்களினை உருவாக்க முடிவதில்லையே, (தொழில்நுட்ப பக்கத்தினை விட்டுவிடுவோம்) ஒரு தாய் கடன் பெற்று படிக்கவைத்த தன்மகன் முதல் நாள் வேலையில் விபத்தாகி இறந்துவிட்டான். என்பதை அறியும்போது அந்ததாய்க்கு ஏற்படும் உணர்வு (படமென்று தெரிந்தும்)தொலைக்காட்சி ஊடாக வந்து எமக்கு ஏதோ செய்யுமே, அப்படி ஏன் எங்கள் திரைப்படங்கள் ஏதுவும் செய்வதில்லை?.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவனின் அறிவும் அனுபவமுமே காரணம் எங்களுக்குத்தான் இரண்டும் இல்லையே (சினிமாத்துறையைப் பொறுத்தவரையில்)அவ்வாறாயின் ஏன் நாங்கள் இது குறித்தான பாடநெறிகளை கற்ககூடாது?, எத்தனையோ கல்லூரிகள், பல்கலைக்களகங்கள் இந்தத்துறை சார்பாக பாடநெறிகளினை வைத்திருக்கிறபோதும் நாங்கள் ஏன் கற்ககூடாது? இந்தத்துறை எங்களுக்கு பாriட்சயமானால், இங்கிருந்து எத்தனையோ ஆயிரம் கொடுத்து இந்தியாவில் திரைப்படங்கள் வாங்கும் வினியோகஸ்தர்கள் எங்களை நம்பி எங்கள் முயற்சிக்கு பணம் போடத்தயங்க மாட்டார்கள், எங்கள் திரைப்படங்கள் திறம்படவருமாயின் அவற்றினை பல நாடுகளில் திரையிடலாம் (கோவில்களில் பொதுஇடங்களில் அல்ல).

இதனை விட்டுவிட்டு "இவங்கள் அவனுகளுக்குத்தான் உதவி செய்வானுகள், பேசாமல் அதைப் படிக்கிற நேரத்துக்கு முண்டு படம் எடுத்திட்டு போய்விடலாம்" என்று சொன்னால் இந்தத் தலைமுறை மட்டுமல்ல இனிவரும் தலைமுறையும் கோவிலிற்குள்தான் படம் பார்க்கும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, January 26, 2005

இரண்டு நிமிட மௌனம்

இன்றுடன் அந்த நிகழ்வுக்கும் அழிவுக்கும் மாதம் ஒன்று -இருப்பினும்
அதன் சுவடுகளும் அது தந்த வடுக்களும் இன்னும் அழிவதாய் இல்லை

இழந்த ஆத்மாக்களின் சாந்தி வேண்டி -இருக்கும் நான் இரண்டு நிமிட மௌனம் செலுத்துகிறேன்.

Thursday, January 20, 2005

Writable and Rewritable CDs

நான் பத்திரிகைக்கு பத்தி எழுதும் வழக்கம் உடையவன். ஒரு நாள் "நீ இப்பிடி எல்லாம் எழுதிறதால சனம் எல்லாம் யோசிக்குது, நடக்குது எண்டு நினைக்கிறியா'' என்று என் நண்பன் கேட்டான். நிச்சயமாய் எல்லோரும் கேட்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் எல்லோரும் யோசித்தால், நடந்தால், உலக சமனிலை குழம்பிவிடும்.

எப்போழுதும் இரண்டு சாராரும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதாவது என்னை விட்டுவிடுங்கள் நான் பெரும் எழுத்தாளன் எல்லாம் கிடையாது. ஆனால் இந்த பூமியில் எத்தனை அறிவாளிகள் தோன்றி எழுதி உரைத்து மறைந்து இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மாவறிஞர் அரிஸ்டோரிலுக்கு என்ன நடந்தது? அவர் என்ன பேசுகிறார் என்பதையே விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் அவருக்கு மரணதண்டனை வழங்கினார்கள். இருப்பினும் சிலர் அவருடைய சீடர்களானார்கள். ஆக இப்படி எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டு இருப்பார்கள், ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் து}க்கிப் போட்டுச் செல்லுவார்கள்.

அதாவது ஒரு பூ! பூத்து மணம் பெருக்கி அழகு காட்டி, பின் காய்ந்து விடும். அதன் மணத்தினை சிலர் ரசித்து இன்பம் காண்கிறார்கள். இதுபோலத்தான் நானோ அல்லது பெரும் எழுத்தாளர் களோ எங்களுக்குப் படுவதனை எழுதுகிறோம். எடுப்பவர்கள் எடுக்கிறார்கள் மற்றவர்கள் மறுக்கிறார்கள், அவ்வளவுதான். இதனைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டு இருந்தவேளை ஒரு விடயம் எனக்குப் புலப்பட்டது.

அது என்னவெனில் நாங்கம் பயன்படுத்தும் 'இறுவட்டு"

ஆ... என்ன அது??

அதுதான்! CD இந்தச் CDக்களில் இருவிதம் ஒன்று WritableCD மற்றயது Rewritable CD. ஒருதடவை பதிவு செய்த பின்னர் மாற்றம் செய்ய முடியாதது WritableCD. ஆனால் தேவைக்கேற்றபடி மாற்றிப் பதிவு செய்யக் கூடியது RewritableCD. இதனை அப்படியே மனித மனங்களுடன் ஓப்பிட்டால் ஒரு விடயத்தில் ஒருவர் சின்னவயதில் அல்லது ஏதாவது ஓர் ஆரம்பத்தில் இருந்து வைத்துள்ள கருத்தினை என்னாளும் மாற்றாமல் இருப்பது Writable CD வர்க்கம்.

மாற்றங்களுக்கு ஏற்றபடி மாத்திரம் சிலவேளைகளில் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுவது. RewritableCD வர்க்கம். அப்படி என்றால் எதை எழுதினாலும் அல்லது எதை உரைத்தாலும் புதிதாக கருத்து என்று வருகிற பொழுது Writable வர்க்கம் மாறப்போவது கிடையாது. Rewritable வர்க்கம் மட்டுமே தேவையென்றால் மாற்றிக்கொள்ளும். அப்படி என்றால் இவ்வளவு நேரமும் இதில் எழுதியது வீணானதா?

இல்லை! ஏனெனில் நாம் எந்த வர்க்கத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கம் அறிந்து விட்டு இருக்கிறோமா? இதுதான் இங்கு தேவையாகப் படுகிறது எனக்கு. நான் Rewritable ஆகவே இருக்க விரும்புகிறேன். ஆனால் நான் அப்படி இருக்கிறேனா? பலர் தாங்கள் அப்படி என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதனைத் தாங்கள் எடுக்கும் முடிவுகளினுடாக அறிந்து கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. என்ன குழப்புகிறேனோ?

சரி இலகுவான முறையில் சொல்ல ஒரு வழி! அதாவது இந்த Writable வர்க்கத்திலும் மிகவும் "மலிவான" கருத்துக்களை உடைய "சிலர்" பேச நான் கேட்ட வாசகங்கம் இதோ!

- வர்ண(சாதி) வேறுபாட்டைக் கொண்டு வந்தது கிருஸ்ணர். அப்படி எண்டா சும்மா இவயலின்ர கதைகளைக் கேட்டிட்டு அதுகளை விடுறது மிகப் பெரிய பிழை! ஏனெண்டா அது கிருஸ்ணரை அவமதிக்கிறதுக்குச் சமன்.

-எங்கட விழுமியங்கள் பற்றி எங்கட பிள்ளைகளுக்குத் தெரியோணும் ஊரில எங்களுக்கு ஒரு சீதனக் காணி இருக்கெண்டு அவைக்கு நாங்கதான் தெரியப்படுத்தோணும்.

இவைகள் வெறும் உதாரணங்கள் தான். இப்படி ஆயிரம் விடயங்கள்! வெள்ளையன், கறுப்பன், வேலை, வாகனம், என்று நீளுகிறது பட்டியல் இவ்வகையான விடயங்களினை எம்மை விட்டு அகற்றாமல் அல்லது மாற்றாமல் இன்னும் வைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம். இப்படி சில போதிக்கப்பட்ட அல்லது எழுதப்படாத வரையறைகளுக்குள் இருப்பதனால் எங்கள் "சிந்தனைத் திறனும்" ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது.

ஒர் உதாரணத்திற்கு;

இராவணன் என்று சொல்லுகிறபோது எத்தனைபேர் அவன் எங்கள் நாட்டு அரசன் என்று எண்ணுகிறோம் எத்தனைபேர் அவன் ஒர் கொடிய அரக்கன் என்று பார்க்கிறோம். இரண்டாவதுக்கு வலுவான வாக்குகள் கிடைக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. காரணம் எங்களுக்கு, பாடசாலையில் இராமனை உத்தமனாகவும் இராவணனை கொடியவனாகவும் காண்பித்து விட்டார்கள் (இதற்கு மேல் நாம் சிந்திக்கவில்லை). இதனால் எம்மில் சிலர் இராமனை வணங்கவும் செய்கிறார்கள்.

இவ்வகையாக ஆயிரம் விடயங்கள் எங்களை அவமதிக்கக் கட்டிய கட்டுக்கதை என்று சொல்ல, இவன் விசரன் என்று நினைப்பவர்கள் அப்படியே இருப்பார்கள்.

சிலர் என்னடா இவன் ஏதோ சொல்லவாறான் போல... என்று இழுக்கிறீர்களா? அந்த ஆர்வம் உடைய நீங்கள்தான் Rewritable வர்க்கம்.

வருக! வருக! வாழ்க! வளர்க!

Saturday, January 15, 2005

அடுத்ததாய் என்னவென்று. . .

எங்கோ மண் பிளக்க!
நீள் கடல் நிலை குலைக்க!
எம்மவர் உயிர் தொலைக்க!
வந்ததே இந்தப் பேரிடர்!
எங்கு போய் முறையிட!
யாரை நான் குறை கூற!

நிலம் நடுங்கியதே அதையா?
ஆழி நிலை குலைந்ததே அதையா -இல்லை
அணுமுதல் அனைத்தும் அசைக்கும் அவனையா?
யாரை நான். . . ?

ஏ கடலே! என்று எறி விழுகிறார்கள் சிலர்
காலனே! என்று கதறி அழுகிறார்கள் பலர்
துரோகி என்று காறி உமிழ்கிறார்கள் சிலர்
என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு !

கடலை வையலாம்
நிலம் பிளந்த வையத்தை வையலாம் -இல்லை
இவை யாவையும் வைத்தவனைக் கூட வையலாம்?
வைது நான் என்ன செய்ய?

மாண்டவர்கள் மீண்டு வருவார்களா?
சிதைந்தவைகள் செழிக்கப் போகின்றனவா?

மனித சமுதாயத்தின் அறிவிற்கு எட்டாமலேயே -எத்தனையோ
விடயங்கள் இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன!

அத்தனையினையும் எண்ணி எண்ணி அழுவதை விட -ஆக்கபூர்வமாய்
என்ன செய்யப்போகிறோம்! என்பதிலேயே கருத்தாய் இருக்கிறேன்

சுனாமி!
சுனாமி எங்கள் அடுப்புமுதல் அரசியல்வரை அசைத்துவிட்டு இருக்கிறது
எங்கள் உயிர்களை எடுத்து எங்கள் உடைமைகளை அழித்து
எங்கள் உரிமைகளை நன்றாய் உலகறியச் செய்திருக்கிறது
ஏன் என்று எட்டவில்லை இந்த மனித புத்திக்கு

உரிமையின் உண்மையினைச் சொல்ல!
இத்தனை பேரழிவா அதன் ஊழியத்தின் கூலி?

உலகறியச் செய்ததோ , உலகழிக்கச் செய்ததோ நானறியேன்!

இருபது வருடங்களாய் மெல்ல மெல்ல எழுந்து நிமிர்ந்தபோது,
எம் தேசம்! இயற்கையால் தட்டி விடப்பட்டு தடுமாறிக் கொண்டு இருக்கிறது

அது என் தேசம்! என் உயிர் பிறந்த தேசம்!
நானும் என் அண்ணனும் ஓடி ஆடிய தேசம்
வகை வகையாய் என் தங்கைக்கு வளை வாங்கிக் கொடுத்த தேசம்

இன்று!
என் அண்ணண்மாரை இழந்தேன்!
என் தங்கைமாரை இழந்தேன்!
தம்பி, அக்கா, அன்னை என ஆயிரம் பேரை இழந்தேன் ஏதிழக்கினும் -நான்
ஒருபோதும் என்னுயிர்த் தேசம் இழக்கேன்

அது எம் தேசம்! அது எம்முயிர்த் தேசம்
அதை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பும் எம்முடையதே!.

சாலைகள் அமைக்கலாம்!
ஆலைகள் அமைக்கலாம்!
உதவி செய்வோர்க்குத் து}ண்களாயும் நிக்கலாம்!
என்ன செய்யப் போகுறோம் நாம்?
அது எம் தேசம்!
அது எம்முயிர்த் தேசம்!

அழிவுகளும் அனர்த்தங்களும் அனைத்தினையும் கொண்டு போகலாம்
எங்கள் உயிரில் ஊறி ஓடும் ஒற்றுமையினைத் தவிர!

அங்கே நீலக்கடல் எழுந்து, விழுந்த பொழுதிலிருந்து -இங்கே
ஒற்றுமைக் கடல் எழுந்து, நிமிர்ந்து, நிலைத்து, நிற்கிறது!

இந்தச் சுனாமி செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது- இருப்பினும்
ஒரே ஒரு விடயத்திற்காய் மாத்திரம் நான் ஆறுதல் அடைகிறேன்

ஈழத்தமிழனின் ஒற்றுமையின் பலம் -பல
தமிழர்களுக்கே இதனால்த் தானே தெரிந்தது!

அலைகளை மறக்கிறேன்!
அழிவுகளையும் மறக்கிறேன்!
அடுத்ததாய் என்னவென்றே!
எண்ணியபடியே நடக்கிறேன். . . . .

வாழ்க தமிழ் -அல்ல அல்ல
வாழும் தமிழ்
வெல்கிறோம் தமிழீழம்