Saturday, January 15, 2005

அடுத்ததாய் என்னவென்று. . .

எங்கோ மண் பிளக்க!
நீள் கடல் நிலை குலைக்க!
எம்மவர் உயிர் தொலைக்க!
வந்ததே இந்தப் பேரிடர்!
எங்கு போய் முறையிட!
யாரை நான் குறை கூற!

நிலம் நடுங்கியதே அதையா?
ஆழி நிலை குலைந்ததே அதையா -இல்லை
அணுமுதல் அனைத்தும் அசைக்கும் அவனையா?
யாரை நான். . . ?

ஏ கடலே! என்று எறி விழுகிறார்கள் சிலர்
காலனே! என்று கதறி அழுகிறார்கள் பலர்
துரோகி என்று காறி உமிழ்கிறார்கள் சிலர்
என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு !

கடலை வையலாம்
நிலம் பிளந்த வையத்தை வையலாம் -இல்லை
இவை யாவையும் வைத்தவனைக் கூட வையலாம்?
வைது நான் என்ன செய்ய?

மாண்டவர்கள் மீண்டு வருவார்களா?
சிதைந்தவைகள் செழிக்கப் போகின்றனவா?

மனித சமுதாயத்தின் அறிவிற்கு எட்டாமலேயே -எத்தனையோ
விடயங்கள் இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன!

அத்தனையினையும் எண்ணி எண்ணி அழுவதை விட -ஆக்கபூர்வமாய்
என்ன செய்யப்போகிறோம்! என்பதிலேயே கருத்தாய் இருக்கிறேன்

சுனாமி!
சுனாமி எங்கள் அடுப்புமுதல் அரசியல்வரை அசைத்துவிட்டு இருக்கிறது
எங்கள் உயிர்களை எடுத்து எங்கள் உடைமைகளை அழித்து
எங்கள் உரிமைகளை நன்றாய் உலகறியச் செய்திருக்கிறது
ஏன் என்று எட்டவில்லை இந்த மனித புத்திக்கு

உரிமையின் உண்மையினைச் சொல்ல!
இத்தனை பேரழிவா அதன் ஊழியத்தின் கூலி?

உலகறியச் செய்ததோ , உலகழிக்கச் செய்ததோ நானறியேன்!

இருபது வருடங்களாய் மெல்ல மெல்ல எழுந்து நிமிர்ந்தபோது,
எம் தேசம்! இயற்கையால் தட்டி விடப்பட்டு தடுமாறிக் கொண்டு இருக்கிறது

அது என் தேசம்! என் உயிர் பிறந்த தேசம்!
நானும் என் அண்ணனும் ஓடி ஆடிய தேசம்
வகை வகையாய் என் தங்கைக்கு வளை வாங்கிக் கொடுத்த தேசம்

இன்று!
என் அண்ணண்மாரை இழந்தேன்!
என் தங்கைமாரை இழந்தேன்!
தம்பி, அக்கா, அன்னை என ஆயிரம் பேரை இழந்தேன் ஏதிழக்கினும் -நான்
ஒருபோதும் என்னுயிர்த் தேசம் இழக்கேன்

அது எம் தேசம்! அது எம்முயிர்த் தேசம்
அதை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பும் எம்முடையதே!.

சாலைகள் அமைக்கலாம்!
ஆலைகள் அமைக்கலாம்!
உதவி செய்வோர்க்குத் து}ண்களாயும் நிக்கலாம்!
என்ன செய்யப் போகுறோம் நாம்?
அது எம் தேசம்!
அது எம்முயிர்த் தேசம்!

அழிவுகளும் அனர்த்தங்களும் அனைத்தினையும் கொண்டு போகலாம்
எங்கள் உயிரில் ஊறி ஓடும் ஒற்றுமையினைத் தவிர!

அங்கே நீலக்கடல் எழுந்து, விழுந்த பொழுதிலிருந்து -இங்கே
ஒற்றுமைக் கடல் எழுந்து, நிமிர்ந்து, நிலைத்து, நிற்கிறது!

இந்தச் சுனாமி செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது- இருப்பினும்
ஒரே ஒரு விடயத்திற்காய் மாத்திரம் நான் ஆறுதல் அடைகிறேன்

ஈழத்தமிழனின் ஒற்றுமையின் பலம் -பல
தமிழர்களுக்கே இதனால்த் தானே தெரிந்தது!

அலைகளை மறக்கிறேன்!
அழிவுகளையும் மறக்கிறேன்!
அடுத்ததாய் என்னவென்றே!
எண்ணியபடியே நடக்கிறேன். . . . .

வாழ்க தமிழ் -அல்ல அல்ல
வாழும் தமிழ்
வெல்கிறோம் தமிழீழம்

1 comment:

SnackDragon said...

kavithai nalla irukku