Friday, April 01, 2005

மெல்லத் தமிழ் இனி. . .

அண்மைக்காலமாக லண்டனில் மீடியாக்களின் வழி வரும் விளம்பரங்களினைப் பார்க்கும்போது "என்னடா இதுவென்று'' கொஞ்சம் வெறுப்பாக இருக்கும். காரணம் வியாபாரப் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்கிற ஒரு நோக்கில் தம்பாட்டிற்கு விளம்பரங்களை போடுகிறார்கள். உதாரணத்திற்கு எங்கள் தாயகத்துடன் சம்பந்தமில்லாததாக இருப்பினும் அதைப்பற்றி அக்கறைப்படாமல் "தாயக மண்ணின் வாசத்தினை நுகர'' என்று கூறி இந்தியாவின் வடக்கு மானிலப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் அரிசிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.

இதனை விட யாழ்ப்பாணப் பொருள் ஒன்றிற்கு இந்தியர்களை அதாவது சினிமாவோடு சம்பந்தப் பட்டவர்களை வைத்து இந்தியாவிலேயே விளம்பரங்களைத் தயாரிக்கிறார்கள். நான் ஒன்றும் இந்தியர்களை வைத்து விளம்பரம் எடுப்பது தவறு என்று சொல்லவில்லை. தாயகம் சம்பந்தமான விடயங்கள் என்று வருகிறபோது அதற்குள் இந்தியா என்ன இங்கிலாந்தினைக் கூட தொடர்பு படுத்தவேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

நடிகை ஒருவரை வைத்து நகைக்கடை விளம்பரம் எடுப்பது வேறு, அதே நடிகையினை வைத்து பூனகரி மொட்டைக் கருப்பன் அரிசி விளம்பரம் எடுப்பது வேறு. சில காலங்களுக்கு முன்னர் அரிசியினை இலங்கை ஏற்றுமதி செய்தது. தற்போதைய சிக்கல்களினால் எல்லாம் தடைப்பட்டு விட்டது. இப்போ ரில்டாவும் பாசுமதியும்தான் எங்கள் அரிசியாக்க சிலர் முயல்கிறார்கள். இந்த வகை விளம்பரங்களினை இந்தியச் சகோதரர்கள் செய்யவில்லை எங்கள் வியாபாரிகள் எங்கள் ஊடகத்துறையினர்கள் தான் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எங்கள் தனித்தன்மை மீது அக்கறை இல்லையோ தெரியாது அல்லது தனித்தன்மை பற்றிய அறிவு இல்லையோ தெரியாது.

இதைவிட தலைக்குள் இல்லாத சில (சிலர் தான்) தொழில் அதிபர்களும் இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் Creative idea கீழே.

இந்தியாவுக்கோர் -காந்தி.
இலங்கைக்கோர் -பிரபாகரன்.
இங்கிலாந்திற்கோர் -அவரது நிறுவனம்

இந்த விளம்பரத்தால் எங்கள் தனித் தன்மைக்கு அல்லது அடையாளத்திற்கு பிரச்சனை இல்லை எனினும் இவர் போன்ற சில தலைக்குள் இல்லாதோர் தான் எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு ஓடிப்போய் "சித்தக்கேணி செங்கட்டிக்கு விளம்பரம் செய்யவேணும் சினேகாவை புக் பண்ணவேணும் என்று அவர்கள் வாசல்களில் காத்திருப்பார்கள்'

அண்மையில் ஒரு தொலைத்தொடர்பு அட்டைக்கான விளம்பரம் ஒன்றினைப் பார்த்தேன் அது முழுக்க முழுக்க தாயகத்திலேயே எடுக்கப்பட்ட விளம்பரம். அதனைப் பார்க்கும் போது ஒருவித சந்தோசம் உள்ளே ஊறும் (சகோதர மொழியினரதாய் இருந்தாலும்) அதற்குக் காரணம் அது என்னுடைய தாய் நாடு. எத்தனையோ ஆயிரம் மைல்கள் தொலைவில் வேறு ஒரு நாட்டில் நான் இருக்கிறேன். அப்படியென்றால் நான் எங்கு இருந்தாலும் என்னுடைய நாட்டினைப் பார்க்கிற பொழுது எனக்கு என்னுடைய அடையாளம் நினைவு படுத்தப்படுகிறது. அப்படியே நான் உணருகிறேன். எத்தனை பேருக்கு இப்படி அடையாளம் குறித்து அக்கறை இருக்கிறது. உங்களை நீங்களே "விரும்பினால்'' கேட்டுப்பாருங்கள்.

வேலைத்தலத்தில் சில தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளையருடன் பேசுகிறபோது ஐஸ்வர்யா ராய் தங்கள் சகோதரி போலக் காட்டிக் கொள்வார்கள். இதற்கு வெள்ளையர்கள் எங்களை இந்தியர்கள் அல்லது அதனோடு தொடர்புடையவர்கள் என்று எண்ணிக் கோண்டு இருப்பதே காரணம். சரி அவர்கள்தான் எண்ணுகிறார்கள் நாங்களாவது விளக்கலாம் என்றால் விளக்கிய பின்னர் எந்த அழகு தேவதையை சொந்தங் கொண்டாடுவது? அதனால் அப்படியே We are Asian you know என்று பேச்சினை முடித்துவிடலாம் என்பது பலருடைய எண்ணம்.
எத்தனை காலம் இப்படி இருக்கப் போகிறோம்?.

சிலருக்கு சாரூக்கான்தான் தங்கள் நாயகன் அப்ப Tom cruise ? அவன் அமெரிக்கன்! அப்ப சாரூக்கான் இலங்கையோ! இல்லத் தமிழோ! சாரூக்கான் ஒரு நல்ல நடிகர் அவரைப் பிடிக்கும் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் Tom cruise அமெரிக்கன் என்று தள்ளிவைத்து சாரூக்கான் து}க்கி வைக்கப்படுவது ஏன்? எங்கள் நிறத்தில் இருக்கும் அவரும் கொஞ்சம் இப்போ உலகளவில் பிரபல்யம். அதைவிட இந்திக்காரர்கள்தானே கிட்டத்தட்ட வெள்ளையர் போல மாறி வருகிறார்கள் ஆகவே எங்களுக்கு என்று ஒருவரும் இல்லாதபடியினால் இவர்களை வைத்துக் கொண்டு விலாசம் காட்டுவோம் என்று எங்கள் இரண்டாம் தலைமுறை நடந்து வருகிறது.

இப்படி அவர்கள்தான் நடந்துவருகிறார்கள் என்றால் எங்கள் ஊடகக்காரரும் தொழிலதிபர்களும் எங்கள் சுய அடையாளம் குறித்து அக்கறை இல்லாமல் சினிமா நடிகையை வைத்து சீரகம் விற்றால்தான் சனம் சீரகம் வாங்கும் என்று எண்ணி வருகிறார்கள். இதனால் என்ன நடக்கும் இன்னும் சிறிது காலத்தில் எங்கள் அடையாளமோ அல்லது தனித்தன்மையோ இன்றி மொரிசியஸ் தமிழர்போல பெயரளவில் இருந்து கொண்டு எங்கள் அடையாளத்தினை தொலைத்து விடும் நிலை புலம் பெயர் ஈழத்தமிழருக்கு ஏற்படும்.

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா ? மெல்லத் தமிழ் இனிச்சாகுமா?
காலம்தான் பதில் சொல்லும்.


8 comments:

Anonymous said...

உங்க அடையாளத்த காட்டரத்துக்கு தான் ஐரோப்பிய வீதிகள்ல பிள்ளையாரை இழுத்து கொண்டு திரிகிறீகளே, பிறகென்ன. வேணும் என்று சொன்னால் கன்டி கதிர்காமரையும் இழுத்துகொண்டு திரியுங்கள்.

எல்லாளன் said...

தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் Anonymous!
இது ஒன்றும் இந்தி எதிர்ப்போ இந்திய எதிர்ப்போ கிடையாது. அவரவர் தம் அடையாளத்தின் மேல் கொண்டுள்ள பற்று அக்கறை அவ்வளவுதான். பிள்ளையாரை இழுத்து வீதி நெருக்கடியை ஏற்படுத்துவது எனக்குப் பிடிக்காத விடயம். ஆனால் இது மதம் சம்பந்தப்பட்டதல்ல. எங்கள் அடையாளத்தினை நெஞ்சைப் பிளந்தோ இரத்தத்தால் கீறியோ காட்ட வேண்டியதல்ல. சிறிதாய் ஒரு பொட்டு வைத்துக்காட்டலாம் அல்லவா அதுதான் என் கருத்து. நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் நாங்கள் நாங்கள் நாங்களாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். ஒரு கனடியப் பெண்ணுடன் அண்மையில் பேசக்கிடைத்தது அவர் சொன்னார் They all want to be blacks (tamil boys) என்று. அவர்கள் (blacks) அடையாளத்தினைக் காக்க அவர்கள் இருக்கிறார்கள். எங்கள் அடையாளத்தினைக்காக்க ...? இதுதான் என் பிரச்சனை.

Muthu said...

எல்லாளன்,
மொரிசியஸ் தமிழர்கள் அந்தளவுக்கு எதையும் இழந்துவிட்டதாய் நினைக்கவில்லை. சமீபத்தில் தமிழின் இடம் பணத்தாள்களில் மாற்றப்பட்டதற்கு போராட்டம் நடத்தி மீண்டும் புதியதாய் நோட்டு அச்சடிக்கும்படி அரசாங்கத்தைச் செய்தது நினைவுக்கு வருகிறது.

எல்லாளன் said...

மதுவிற்குப் பயம் கலந்த வணக்கம் (உங்கள் புகைப்படம் பார்த்தேன் கொஞ்சம் சிரித்தால் என்ன சார்?)

மொரிசியஸ் தமிழர் பற்றிய தகவலுக்கு நன்றி! இருப்பினும் இவர்கள் பற்றிக்கேள்விப் பட்டதால் மாத்திரமே நான் எழுதிவிட வில்லை. என்னுடன் 17 மொரிசியஸ் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அனைவரும் தமிழ் இந்துக்களாம். ஒருவருக்கும் தமிழ் தெரியாது. கேட்டால் தமிழ்ப் படிக்க விருப்பம் என்று சொல்லுவார்கள் அவ்வளவுதான். இந்த நிலை ஒரு சில இங்கிலாந்துத் தமிழருக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. அதுதான் கவலை எனக்கு!

சயந்தன் said...

//சித்தக்கேணி செங்கட்டிக்கு விளம்பரம் செய்யவேணும் சினேகாவை புக் பண்ணவேணும் என்று அவர்கள் வாசல்களில் காத்திருப்பார்கள்' //

உது எங்கடை ஊருக்கு பக்கத்து ஊர் எண்டபடியாலை சொல்லுறன் சினோகாவை விட்டிட்டு திரிஷாவை புக் பண்ண சொல்லி

வானம்பாடி said...

எல்லாளன்,

தனித்துவத்தையும் அடையாளங்களையும் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றுதான்.ஆனால் அதற்கு மிகுந்த முனைப்பு வேண்டி இருக்கிறது. வட அமெரிக்காவில் இந்தியனும், பாகிஸ்தானியனும், பங்களாதேசியும் தெற்காசியர்களே, அதுவும் பெரும்பாலும் இந்தியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் எத்தனை காலம் உங்கள் அடையாளங்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்? பெரும்பாலும் இது இரண்டாம் தலைமுறையிலேயே தொலைந்து விடுகிறது. உங்களுக்கு இருக்கும் இலங்கை பற்றிய நெகிழ்வு, வேற்று நாட்டில் பிறக்கும் உங்கள் அடுத்த தலைமுறைக்கு இருக்குமா? அவர்களுக்கு அது பெற்றொரின் நாடு, அவ்வளவே.

கறுப்பி said...

(பின்னூட்டம் பெரிதாக இருக்கிறது மன்னிக்கவும்.)

எல்லாளன் தங்கள் பதிவில் சிலவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது அதே போல் சிலதுகள் முடியவில்லை. (கருத்துச் சுதந்திரம் முக்கியம் தானே) எங்கள் அடையாளங்களைக் காக்க வேண்டும் என்று சொன்னீர்கள் இதில் எனக்கு அவ்வளவாக உடன் பாடில்லை.. வயது வந்த நாங்களே பலவற்றை விட்டுக் கொடுத்து விட்டோம். பிள்ளைகளிடம் எப்படி அதை எதிர்பார்ப்து. ஆனால் விளம்பரங்களுக்கு இந்தியச் சினிமா நடிகைகளை வைத்து விளம்பரம் செய்வதை நானும் தான் எதிர்க்கின்றேன். இந்தியா போய் 30 வினாடி விளம்பரம் செய்ய 9000 கனேடிய டொலர்களை ஒருவர் செலவு செய்துள்ளார். நான் இந்தத் துறையில் இருப்பதால் இங்கும் பல இளைஞர்கள் யுவதிகள் இருக்கின்றார்கள் (அவருக்கு அழகு முக்கியம் என்றால் இங்கும் மிக அழகான யுவதிகள் இருக்கின்றார்கள்) அவர்களை வைத்து விளம்பரங்கள் செய்து தருகின்றேன். அங்கே கொடுக்கும் பணத்தில் கால் பகுதியைத் தாருங்கள் என்று கேட்;ட போது அசடு வழியச் சிரிக்கின்றார்கள். முன்பு வெள்ளையர் மோகம் இருந்தது (இன்னும் மாறவில்லை) தற்போது இந்தி மோகம் பலருக்கு. இந்தியாவின் ஒரு பிரதியாகவே பலர் இருக்க விரும்புகின்றார்கள். தம்மால் முடியாது என்ற தாழ்வுமனப்பான்மை வேறு..

அடுத்து கனேடியப் பெண் ஒருவர் கூறியதாகத் தாங்கள் சொன்ன கருத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவரும் கறுப்பர்கள் போல் இருக்க விரும்பவில்லை. அவர் பிழையாக விளங்கிக்கொண்டுள்ளார் என்று நம்புகின்றேன். உடை நாகரீகம் என்பது வருடத்திற்கு வருடம் மாறி வருகின்றது. எனது குழந்தைகளை நான் எனக்குப் பிடித்த மாதிரி உடை அணிவித்து வளர்;த்தேன். வளந்து விட்ட போது அவர்கள் உடைத் தெரிவு விசித்திரமாக இருந்தது (அந்தப் பெண் கூறியது போல் கறுப்பர்களை ஒத்து இருந்தது) நான் என் மகனிடம் இது பற்றிக் கேட்ட போது அவன் சொன்னான் இவ்வளவு நாளும் நான் வெள்ளையர்கள் மாதிரித்தான் உடை அணிந்து வந்தேன். எனக்கு அதை விட இந்த உடை பிடிக்கிறது. இரண்டுமே தமிழரின் உடைகள் அல்ல பிறகு என்ன கறுப்பர்கள் என்றால் இழிவு வெள்ளையர்கள் என்றால் உயர்வோ.. நீங்கள் ஒரு றேசிஸ்ட் என்று என்னைத் தாக்கினான். என்னால் அவனை வேட்டி கட்டு என்று சொல்ல முடியாது எனவே அவன் விருப்பப்படி விட்டுவிட்டேன். ஏற்கெனவே நாங்கள் கொப்பி அதில் யாரை அடித்தால் என்ன? நானே சேலை கட்டுவது எப்படியென்று மறந்து போய் விட்டேன். இதற்குள் இளைவர்களை சாடுவதுதானே கூடாது.

கிஸோக்கண்ணன் said...

எல்லாளன், கவலைப்படாதையுங்கோ. நாங்கள் நினைச்சால் கொஞ்சங் கொஞ்சமா எண்டாலும் உவையளை மாத்தலாம். எனக்குத் தெரிந்த ஊடகக்காரரோடை இந்தப் பிரச்சினை தொடர்பாகக் கதைச்சுப் பார்க்கிறன் (கனடாவில்தான்).

களம் வேறை எண்டாலும், இங்கும் அந்தப் பிரச்சினை இருக்கின்றது. நானும் கனநாளா இங்கை வானொலி கேட்கேல்லை; தொலைக்கட்சி பார்க்கேல்லை. தற்போதைய நிலவரம் என்ன மாதிரி எண்டு தெரியேல்லை. எதுக்கும் புதுமாப்பிள்ளையை(DJ) கேட்டுச் சொல்லுறன்.