Thursday, August 18, 2005

நாம் வாழ்வதற்கே

சில நேரங்கள் எங்களுக்கு கடும் ரணமாக இருக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் தலை இறுகிப்போய் விடும். செத்து விடலாமா என்று தோன்றும். எத்தனை பேர் இப்படியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் தள்ளப்பட்டு இருக்கிறேன். பல தடவை இருந்ததினால் பழகிப் போய் விட்டது.


எத்தனை பேர் நாளை மரணம் வந்தால் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறீர்கள். நிச்சயமாக 99 வீதமானோர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக் கூட எண்ணாமல் எனக்கு என்ன நடந்து விட்டது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். காரணம் மரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூட உங்களால் முடியாது. ஏன்?


வாழ்க்கை குறித்து கடுமையான எதிர்பார்ப்பினை வைத்து இருப்பீர்கள் அந்த எதிர்பார்ப்பு உங்களை நாளை போகலாம் ஆயத்தம் செய்யுங்கள் என்றால்! விடாது. ஆகவே பெரிய எதிர்பார்ப்பு ஒன்றினையும் வைத்திருக்காதீர்கள். இப்போது நிச்சயமாக எனக்கு கழன்று விட்டது என்கிற உறுதியான முடிவிற்குப் பலர் வந்திருப்பீர்கள்.


சரி இப்ப நான் சொல்ல நினைக்கிற விடயத்திற்கு வருகிறேன். பெரிதாக ஒன்றும் கட்டுரை எழுதி இறுக்காமல் சில உதாரணங்கள் மூலம் இலகுவாகச் சொல்லுவது நல்லது என்று படுகிறது.


எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். 2 பிள்ளைகளுக்குத் தகப்பன். தும்படித்தல் என்று சொல்வோமே அவர் அதுதான் நான் அவரை அறிந்த ஐந்து வருடமாகச் செய்து கொண்டு இருக்கிறார். மனைவி வீடு, இவர் தும்பு.


இன்னொருவர் வேலைக்குப் போவார். முடிந்தால் நேர பிள்ளையிட்ட வருவார். சகல விடயமும் பிள்ளைக்குப் பக்கத்தில் இருந்து செய்வார். பிள்ளை முடித்தவுடன் தன்பாட்டில் போய் படுத்துவிட்டு மறு நாள் மறுபடி காரியாலயம். வேலை பின்னர் வீடு பிள்ளை.


இன்னொருவர் தனக்குத் தெரியாமல் பிள்ளை பூக்கண்டுக்குத் தண்ணி ஊத்தவும் ஏலாது என்பது போல இருப்பார். பாடசாலை முடிந்தால் வாசலில நிண்டு கூட்டிக் கொண்டு வீடு வருவார். கடும் பாதுகாப்பு! எப்படிச் சொல்ல? இந்தப் பாதுகாப்பு "அவருக்கு'' இருந்திருந்தால் அவருக்கு சினைப்பர் அடிச்சிருக்க மாட்டார்கள். அப்படியொரு பாதுகாப்பு.


மூன்று பேரிட்டையும ஏன் இப்படி என்று கேட்டா பிள்ளைக்காக எண்டு சொல்லுவினம். பிள்ளைக்காக தும்படிச்சு வேலை செய்யிறது முடிஞ்ச உடன பிள்ளையோடயே இருக்கிறது பிள்ளைக்குப் பலத்த பாதுகாப்பு எண்டு முன்னுக்கும் பின்னுக்கும் திரிகிறது. எனக்கு விளங்கேல்ல. அதைவிட எந்த அளவிற்கு அந்தப் பிள்ளைகள் அதைத் தமக்காக என்று எடுத்துக் கொள்ளும். எல்லாம் விடை தெரியாக் கேள்விகள்.


என்னுடைய பிரச்சனை என்னவென்றால்! பெற்றோர் முழுக்க முழுக்க பிள்ளைக்காக வாழ வேண்டுமா? என்பதுதான் (மேலே குறிப்பிடப் பட்ட போன்றோரை நினைவில் வைத்துத்தான் கேட்கிறேன்). என்னுடைய கேள்வியினை சிலர் தவறானதாகக் கூட கருதி இருக்கலாம். ஆனால் மறுபடியும் அதே கேள்விதான் கேட்கிறேன் பெற்றோர் முழுக்க முழுக்கப் பிள்ளைகளுக்காக வாழுவது சரியா?


என்னுடைய பார்வையில் நிச்சயமாக இல்லை. நான் என் பிள்ளைக்காகவும் அவன் தன் பிள்ளைக்காகவும் வாழ்வதில் என்ன இருக்கிறது. நான் எனக்காக வாழவேண்டும் அவன் தனக்காக வாழவேண்டும். அதை விடுத்து மாறி மாறி வாழ்ந்து கொண்டு வந்தால் எப்படி அதை எங்கள் வாழ்க்கை எண்டு சொல்வது? முக்கால் வாசித் தமிழரும் இப்படித்தான் வாழ்ந்து வருகின்றார்கள். அதனை யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். எங்கள் வாழ்க்கையில் எங்கள் பிள்ளைகளுக்கான பங்கு என்று ஒன்று இருப்பது சிறந்ததே ஆனால் அவர்களையே முழுப்பங்காக்குவது பிழை என்பதே என் வாதம்.


உதாரணத்திற்கு பெண்களை எடுத்துக் கொண்டால் அனேகமானோர் திருமணம் முடிந்த பின்னர் தமது வாழ்க்கை முடிந்து விட்டது மாதிரித்தான் வாழ்கிறார்கள். கூடிய பட்சம் கடைத்தெருவுக்கு வருவதுடன் அவர்களுக்கு வாழ்க்கை சுருங்கி விடும். (வேலை செய்யா தவர்களை சொல்கிறேன்) ஆண்களுக்கு கடை வேலை என்று வாழ்க்கை ஒடிக்கொண்டே இருக்கும் தொடர்ந்து வேலை ஆளைப் பிடிக்கவே இயலாது.


ஒரு விடுமுறைக்கு எங்காவது சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுவது கிடையாது. சிலர் இந்தக் கருத்து பிழை என்று பாய்ந்து வருவீர்கள். நான் பொதுவாக என்ன நடக்கின்றது என் பதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றேனே தவிர நாலைந்து பேர் விடுமுறை போவதனை பெரிதாக எடுத்துப் பேசமுடியாது என்பதனை மிகப் பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.


நல்ல விடயங்களினை யாரிடமும் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளையர்களைப் பாருங்கள். அவர்கள் அளவுக்கதிகமாக வேலை செய்ய மாட்டார்கள். தேவையான அளவு விடுமுறைகள் என்று ஏதாவது நாட்டுக்கு அல்லது குறைந்தது பக்கத்து ஊருக்காவது செல்வார்கள். ஏன் பக்கத்து ஊருக்குப் போகுறீர்கள் என்றால் சிறிது மாற்றம் தேவை என்று சொல்லி கணவனும் மனைவியும் போய் தங்கிவிட்டு வருவார்கள்.


இதனால் சொல்ல முயற்சிக்கிற சேதி என்ன வெனில் அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையில் அவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்கின்றோம் என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். எங்களுக்கு கிடைத்திருக்கின்ற வாழ்க்கை நாம் வாழ்வதற்கே.