Wednesday, March 23, 2005

சுய ஆறுதலுக்காக

தைத் திருநாள்தான் எனக்குப் (தமிழர்) புத்தாண்டு. அன்று எழுதிய கவிதை சில தவறுகளுடன் வெளிவந்தபோது வருந்தினேன் (இங்கு அல்ல). ஆகவே என் சுய ஆறுதலுக்காக இதோ இங்கே இப்போ!

புது வருடம். . .
சோலைக்குயில்கள் கீதம்பாடித்
துயிலெழுப்ப
காலைக் கதிரவன் கிழக்குவாசல்
வரக்கண்டு
வான்மேகம் செவ்வர்ணம்
பூசி நிற்க
நீலக் குயில்கள் நீண்டதொரு
வாழ்த்திசைக்க
சின்னப்பறவைகள் அணிவகுப்பென
சிறகடிக்க
நாள் ஒன்று விடியும் - இப்படி
முன்றரை நூறுகளில் வருடமாய் நிறையும்
 

மறுபடி
நாளையும் விடியும்!
விடிகிற விடிவு எமக்கெல்லாம்
விடிவைத் தரும் விடியலாய் விடியட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Sunday, March 20, 2005

காண்டக்காரர் கதவை...

என் நண்பனின் து}ண்டுதலால் இருபதுகளின் ஆரம்பத்தில் எனக்கு காண்டம் வாசிக்க வேண்டும் (உயர்தர யோசியமாம்) என்று ஒரு ஆசை வர, ஒருநாள் காலை காண்டக்காரர் கதவைத் தட்டினேன். பிறந்த திகதியும் பெருவிரல் அடையாளமும் எடுத்து விட்டு மதியம் வரச் சொன்னார்கள். மதியம்சென்றதும் ஒருவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார் இறுதியில் ஒர் ஏடு ஒன்றினை எடுத்து (அது எனக்குரிய ஏடாம்) வாசிக்கத் தொடங்கினார்.தம்பி நீர் இப்படி, நீர் அப்படி என்று அடுக்கினார். எனக்கு நல்லவேளை அம்மா வரவில்லை என்று தோன்றியது. என்னைப் பற்றிக் கூறியதில் எனதுவெளிநாட்டு பயணமும் இந்த பத்தி எழுதும் வழக்கம்கூட அதில் அடக்கம். அவர்கள் குறித்துச் சொன்ன கால கட்டத்திலேயே லண்டன் வந்துவிட்டேன். இன்று வரை சொல்லியபடி நடந்து வருகிறது. இப்படி இருக்கிற பொழுது நான் எப்படி அதனைப் பொய் என்று சொல்ல முடியும். என்னைப் பொறுத்தமட்டில் காண்டம் என்பது உண்மை! அவர்கள் சொல்லியது சற்றும் பிசகாமல் நடந்து வருகிறது.

ஆனால்!

என்னுடைய உறவினரும் எனக்கு அடுத்த படியாக சென்று காண்.. வாசித்தார். அவருக்கும் பல விடயங்கள் சொன்னார்கள் அதில் அவருக்கு முக்கியமான அவரது வெளிநாட்டுப் பயணமும் அடக்கம் (அதாவது அந்த நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள்). ஆகவே இரண்டு மாதங்களுக்குள் நான் லண்டன் வந்து அவருக்காக காத்திருந்தேன். பல வருடங்கள் ஆகியும் அவர் வரவில்லை அவர் இன்னும் நாட்டில்தான் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை காண்டம் உண்மையானது அல்ல. அப்போ பொதுவான பார்வையில் காண்டம், உண்மையானதா பொய்யானதா. உண்மை என்றும் சொல்ல முடியாது பொய் என்றும் சொல்ல முடியாது. அப்போ என்ன செய்யலாம்?

முதலில் ஒரு சம்பவத்தினைக் கூறிவிட்டு பின்னர் விடயத்திற்கு வருகிறேன். அவர் என் நண்பர், ஒரு சட்டவல்லுனர். அவரது மகனும் அதே தொழிலினைத் தொடரவேண்டும். என்று ஆசைப்பட்டார் .மகனுக்கும் அதில் ஆசை இருந்தது. (நானும் என் அப்பாவைப்போல ஒரு பிரபலமான விஞ்ஞானியாக வர ஆசைப்பட்டேன்) இடையில் தனது மகனுக்கு காண்டம் வாசித்து கல்வி முதற்கொண்டு வாழ்க்கைத் துணைவரை கேட்டுப் பதிவு செய்து வைத்தார். இப்பொழுதுதான் பிரச்சனை.

மகனுக்கு 18 வயதாகி விட்டது. தகப்பனும் ஏதோ காண்டம்தான் இவரது நேரசுசி (time table) என்று மனதில் எழுதிவைத்து விட்டு மகனை அதற்கு ஏற்றாற் போல் வளைத்திருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்படைந்த மகன் இப்போ காண்டத்திற்கு நேர் எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டான். சட்டம் படிக்க முடியாது கடை வைக்கப் போகிறேன் என்கிறான். வாழ்க்கைத் துணைக்கும் எதிர்தான் என்று முடிவெடுத்து விட்டான்.

அவனுடன் பேசச் சொன்னார் என் நண்பர். அவனிடம் பேசியபோது என் நண்பர், மகன் வைத்திருந்த மரியாதையினை இழந்து விட்டார் என்பது புரிந்தது. எனக்கு ஒரு உதாரணம் சொன்னான் "எனது தந்தையிடம் ஜோசியன் யாராவது இன்று பாதையில் இருந்து பணம் பொறுக்குவாய் என்று சொன்னால் அந்தப் பணம் கிடைக்கும்வரை தலையைக் குனிந்து வீதியைப் பார்த்துக் கொண்டுதான் செல்வார் என் அப்பா '' என்றான். பலவிதமாகப் பேசினான். அவனுடைய வயதிற்கு அவனது முதிர்ச்சி சற்று செறிவானதாகவே இருந்தது.

இருப்பினும் இப்படி Anti-அப்பாவாக மாறியதற்குக் காரணம் என்ன? காண்டம்!. ஒருவேளை அவன் சட்டத்திற்குள் நுளை வானாகில் ஓர் பெரும் புள்ளியாக வரக்கூடும் ஏனெனில் அவனது தகப்பனுடைய உதவி இருக்கும் அதைவிட அவனுக்கு "இத்துறையின் ஈடுபாடு'' இயல்பாகவே தகப்பனுடாக கடத்தப்பட்டு இருக்கும். இப்போது எல்லாம் நழுவி விட்டது.

உண்மை, பொய் என்று சொல்ல முடியாதது ஜோசியம் (என் கருத்து). அப்போ என்ன செய்யலாம்? ஒன்றையும் எங்களைக் கட்டுப்படுத்த விடக்கூடாது. சரி நம்புகிறீர்களா பிரச்சனை கிடையாது அப்படியே விடுங்கள் சொன்னது மாதிரியோ அல்லது தலையில் எழுதிய மாதிரியோ நடக்கும். அதைப்பற்றி அக்கறைப் படாதிருங்கள். அதை விட்டுவிட்டு அதன்படிதான் நடக்க வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு விடயமும் நிறைவாய் நடக்காது.

எனக்கு அவர்கள் வினாடிக்கு வினாடி என்ன நடக்கும் என்றா சொன்னார்கள்? இல்லையே! ஆகவே நானே சிலவேளை நடக்கின்ற சம்பவங்களினை அவர்கள் சொன்னவற்றுடன் பொருத்தி விட்டேனோ தெரியாது. நான் ஒரு முறை செய்யும் தொழிலை விட்டு விலகுவேன் என்று சொன்னார்கள். இன்றுவரை ஆறு இடங்களில் இருந்து விலகி விட்டேன். ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொன்னார்களோ என்று கேள்வி எழும். இப்படிக் கண்டதற்கெல்லாம் ஒரு காண்டம் வந்து! என் முன்னின்று பல் இளிக்கும்.

எந்த விடயத்திலும் நிறைவிருக்காது. ஒருமுறை பத்திரிகை ஒன்றில் ராசிபலன் பக்கத்தினை வாசித்து எல்லா ராசியும் எனக்குப் பொருந்துவதை அறிந்தேன் உண்மையினைச் சொன்னால் எல்லாவற்றினையும் எனக்கு ஏற்றாற்போல் பொருத்தி இருக்கிறேன். இந்த சம்பவத்தோடு சகலவற்றினையும் கைவிட்டேன்.

மேற்சொன்ன என் நண்பரின் சம்பவம்தான் இங்கே இப்பத்தியினை எழுதத் து}ண்டியது. எத்தனைபேர் என் கருத்தினை ஏற்றுக் கொள்கிறீர்களோ தெரியவில்லை! ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நான் பெற்ற தெளிவு பெறவேண்டும் இவ்வுலகு அவ்வளவுதான்.

Friday, March 04, 2005

இழந்து இருக்கிறோம்

ஒரு காலத்தில் தென் ஆசியாவின் மிகப் பெரிய நூலகம். எத்தனையோ மனிதர்களை மாமேதைகளாக்கிய நூலகம். சில சிங்களவர்களும் மரியாதை கொடுத்து வந்த நூலகம். எங்கள் யாழ் நூலகம். 1981ஆம் ஆண்டு யூன் 31ம் திகதி இரவு நூற்றுக்கு மேற்பட்ட சிங்களக் காடையர்களினால் காமினி திசானாயகாவின் நேரடி வழிநடத்தலில் எரித்து நாசமாக்கப்பட்டது. தமிழ் சுவடிகள் ஓலைகள் உட்பட அண்ணளவாக 95.000 வகையான பிரதிகள் ஒரே இரவில் எரித்து அழிக்கப்பட்டன. தமிழே முக்கால்வாசி அந்த இரவில் எரிந்ததெனவும் கொள்ளலாம். இப்படி எரிக்கப்பட்ட காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

உங்கள் தாய் நாடு இது இல்லை என்ற பின்பும் ஏன் இனவேறுபாடுகள் இருக்கிறதென்று கூறி தொடர்ந்தும் இங்கேயே இருக்கிறீர்கள் உங்கள் திராவிட நாட்டிற்குச் செல்ல வேண்டியதுதானே அங்கே இனவேறுபாடுகள் இல்லை. உங்கள் கோவில், உங்கள் கடவுள், உங்கள் கலாச்சாரம், உங்கள் கல்வி. உங்கள் பல்கலைக் கழகங்கள். எல்லாம் அங்கே இருக்கின்றன உறங்கும் சிங்களம் எழும்பி தமிழர் தமிழீழத்தினை இலங்கையில் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அறிந்தால் நிலமை சுமூகமாக இருக்காது. ஆகவே தமிழர்கள் உறங்கிக்கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்களை எழுப்பாமல் இருப்பது உசிதமானது. நித்திரையில் உள்ள சிங்கத்தினை எழுப்பினால் சிங்கம் அமைதியாக இருக்காது என்பதனை அறிவீர்கள். இது லொக்கு பண்டார என்பவரது பேச்சு.

நாங்கள்தானே ஆள்பவர்கள். நாங்கள்தான் ஆளவேண்டும். சிறுபான்மையினரிடம் கொடுக்க
முடியாது. நாங்கள் சிங்களவராகவும் பௌத்தர்களாகவும் இந்த நாட்டில்தான் பிறந்தோம். நாங்கள்தான் இங்கு பெரும்பான்மையினர். ஆகவே நாங்களே ஆளுவோம்
. இது விமலா கன்னங்கரா.


இன்னொருவர், இல்லை! எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழ்த் தலைவர் என்பவரைப் பிடித்து அண்மையில் உள்ள ஒரு கொங்கிறீட் போஸ்டில் கட்டி வைத்து அவர் சாதாரணவாசி போல் மாறும்வரை அவருக்கு சவுக்கடி கொடுப்பேன். இதற்குப்பின்னும் யாராவது அவரைப்போல செய்தால் அவரைப் பிடித்து ஆற்றில் எறிந்து விடுவேன் இப்படிச் சொன்னவர் சந்திரபால என்பவர்.

இப்படிப் பலர் தமிழுக்கும் தமிழனுக்கும் எதிராக பேசினார்கள். இவ்வளவும் இந்த நூலகம் அழிக்கப்பட்ட காலங்களில். வெறும் பேச்சுக்கள் என்று மாத்திரம் இல்லாமல் பல அரசியல், முக்கியத்துவம் வாய்ந்தது எங்கள் நூலக அழிப்புச் சம்பவம். அன்று நடந்த சம்பவங்களுக்கு அல்லது சிங்களத்தின் சீர்கெட்ட வன்முறைகளுக்கு பெரும் சான்றாக நேற்றுவரை இருந்தது எங்கள் நூலகம்.

இதை எப்படி மீளக்கட்ட முடியும்? மீளக்கட்டுவது என்பது இத்தனை வருடம் சிங்களத்தின் காட்டுமிராண்டித் தனத்துக்கு சான்று பகர்ந்த எங்கள் நூலகத்தினை மறுபடி எரிப்பதற்குச் சமனானதாகும். அன்று தமிழனின் புலமைக்கு பேர்போன நூலகம் அழிக்கப்பட்டது இன்று சிங்களவரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சான்றாய் நின்ற நூலகம் அழிக்கப்பட்டு இருக்கிறது.

சிலர் என்னைத் தவறாக நினைக்கலாம். நூலகம் தேவைப்படுகிறதென்றால், புதிதாக ஒன்றை அந்த நூலகத்திற்குப் பக்கத்திலேயே அழகாகக் கட்டி இருக்கலாம். எத்தனையோ நவீன வசதிகளும் அமைத்தும் இருக்கலாம். அதைவிட்டு விட்டு எதற்காக எங்கள் வரலாறு சொல்லும் ஒரு பொக்கிசத்தினை புனரமைப்பு என்ற பேரில் இல்லாமல் செய்யவேண்டும்.

சரி, நாளைக்கு ஒரு நவீன சாதனத்தினைப் பொருத்தவேண்டும் என்ன செய்வது? அந்தப் பழைய கட்டடத்தில் ஓட்டை போடுவதா? ஒரு Lift பொருத்தவேண்டும்! முடியுமா? பிறகென்ன புனர் நிர்மாணம்? அதைவிட இருந்த பழந்தமிழ் ஓலைகள் எல்லாவற்றை எல்லாம் எங்கு போய் மறுபடி எடுப்பது.

அறிவாளிகள் புத்திஜீவிகள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? ஏன் இவர்கள் இதைத் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் சில விடயங்கள் கேள்விப்பட்டேன். எத்தனையோ லட்சங்கள் செலவாகி இருக்கிறது இந்தப் பணிக்கு, அதில் எத்தனையோ லட்சங்கள் தனிப்பட்ட (கும்பல்) சிலரது சட்டைப்பைக்குள் சென்று இருக்கிறது. அரசின் இந்த "மூடிமறைப்பு'' திட்டத்திற்கு இப்படியான சுயநலக் கும்பல்களின் ஆமோதிப்பு தான் இந்த புனரமைப்பு என்கின்ற பெயரில் கொள்ளை நடக்கக் காரணமாய் இருந்திருக்கிறது.

கொள்ளை ஒரு பக்கம் இருக்கட்டும் அரசியல் பக்கம் பாருங்கள் எங்கே ஓர் தருணம் கிடைத்தால் தமிழ்ப்பெண்ணுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுக்க விரும்பும் அம்மையாருக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் தான் தமிழர் மீது அக்கறையான ஓர் ஜனாதிபதி என்று காட்டுவதற்கு பிரசித்தி பெற்ற தமிழர்களின் நூலகத்தினை அரசுதான் புனரமைத்துக் கொடுத்தது என்று அதனை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறாராம்.

ஆக எங்கள் நூலகத்தினை புனரமைக்கிறோம் என்று சொல்லி இறுதியில் இருந்ததினை விட இழந்து விட்டு இருக்கிறோம். ஆனால் யாரும் அதைக் குறித்துக் கவலைப்படுவதாய் இல்லை. நேற்றும் ஒருவர் என்னிடம் புது நூலகம் பற்றிப் பெருமையாகப் பேசினார். எது எப்படி இருப்பினும் இந்த முழு திட்டத்திற்கும் ஓடித்திரிந்த அந்தத் தனிப்பட்ட கும்பல்
லண்டன் வந்து தம்பட்டம் அடிக்காதவரை சந்தோசம்,

அவர்களுக்கு!