Sunday, April 24, 2005

சின்னத்திரை -755

அன்றொரு நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஏதோ தொடர் நாடகம் ஒன்று அதாவது சின்னத்திரை நாடகம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. ஓடிக் கொண்டு இருந்தது என்றால் அவர்கள் வாடகை கொப்பி எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று அர்த்தம். இன்று கிட்டத்தட்ட இரு மாதங்களின் பின் அதே வீட்டில் அதே நடிகர்களுடன் அதே கதாபாத்திரங்களுடன் (ஆகவே நான் அன்று பார்த்த அதே நாடகம்) திரும்ப ஓடிக் கொண்டு இருக்கிறது. அன்றும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை இன்றும் அதே பிரச்சனை ஆனால் வேறு வடிவத்தில் (Episode 755).

நான் தொடர் நாடகங்கள் பார்க்காதவன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் நான் எதையும் தொடர்ச்சியாகப் பார்த்ததும் இல்லை அதைவிட அவை தமிழ் நாடகங்களும் இல்லை. இங்கே ஆங்கில தொலைக்காட்சிப் பக்கத்தில் ஒளிபரப்பாகும் மூன்று நாலு நாடகங்கள் பார்ப்பேன் அவ்வளவுதான். தொடர்ந்தும் அல்ல நேரம் கிடைத்தால் அதாவது எப்போதாவது Free யாக இருந்தால். நான் பார்த்த எந்த நாடகத்திலும் என்னை அழவைக்க அதாவது பார்வையாளரை அழவைக்க வேண்டும் என்கின்ற நோக்கம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நம்மூர்க் கூத்துக்களைப் பார்த்தால் பார்வையாளர்களை அழவைக்க வேண்டும் எவ்வாறு எனினும் எங்களுக்காக ஏதாகிலும் ஒரு "அழுகுனி'' காட்சியினை உருவாக்கி அதனூடாக நாம் அழவேண்டும் என்ற நோக்கத்தினை முன்னிறுத்தியே சின்னத் திரைகள் அனேகமாக தயாரிக்கப்படுகின்றன.

நான் நாட்டில் இருந்த போது இந்திரா சௌந்தராஜனின் "விடாது கறுப்பு'' முழுமையாக (வாடகைக் கொப்பி) பார்த்தேன். அந்த நாடகம் இவ்வகையான சின்னத்திரை நாடகங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. அதில் இப்போது வருவது போன்ற மலிவான சிந்தனை உடையதான பிரச்சனைகளைக் காட்டிய தில்லை. அது ஒரு புராணக் கதை போன்ற நாடகம். Split Personality ஐ வைத்து எழுதப்பட்ட நாடகம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பதட்டத்துடன் நகர்ந்து கொண்டு இருக்கும். ஆனால் இப்போ எத்தனை நாடகங்கள் அப்படி வருகின்றன? அன்றே அந்தக் காலப் பகுதியில் விடாது கறுப்பு மட்டும்தான் இருந்தது.

இப்போ நான் அறிகிற அளவிற்கு (என்னுடைய வீட்டில் தமிழ்ச் சேவை இருக்கிறது என்கின்ற அளவில் ஏதாவது ஒரு நாடகம் அடிக்கடி குறைந்தது இரண்டு நிமிடத்திற்காவது என் கண்களில் தட்டுப்படும்) சொத்துப் பிரச்சனை வைத்து சுற்றப்பட்டு இருக்கும் கதையுடைய நாடகம். கணவன் மனைவிக்கு இடையில் உறவில் உள்ள குளறுபடி அதுவும் கீழ்த்தரமான முறையில் கையாளப்பட்டு இருக்கும் நாடகம். (அதிலும் அடிக்கடி குடிகாரக் கணவன் வந்து மனைவியிடம் ஏதாவது உளறிக்கொண்டு இருப்பது போன்ற கட்டங்களை அடிக்கடி காணலாம்). காணித் தகராறு கடன், ஊர் விவகாரம், போன்ற குறிப்பிட்ட சில "Mega கருக்களை'' வைத்துக் கொண்டு நாடகம் போடுகிறார்கள்.

இப்பொழுது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் எங்களுக்கு ஊரில் வாழ்ந்த காலத்தில் இருந்து வந்த வாழ்க்கை முறைக்கும் இப்போ இங்கு வாழ்ந்து வரும் வாழ்க்கை முறைக்கும் எத்தனை வித்தியாசம். அப்படி இருக்க இன்னும் ஊர் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அதையும் இயலுமான அளவிற்கு மட்டமாக (என்னுடைய பார்வையில்) எடுத்துத் தள்ளப்படும் 99 வீதமான சின்னத் திரையினை இங்கே கண்ணீர் விட்டு விட்டுப் பார்ப்பதனால் என்ன பயன்?.

இப்படிக் கேட்பதனால் அனேக அளவிலான தாய்மார்களின் எதிர்ப்பினை நான் சம்பாதிப்பேன் என்பது எனக்கு சாதாரணமாகவே தெரியும். அதற்காக பேசாமல் இருந்து விட முடியுமா? சினிமாவும் பார்க்கிறோம் தானே அதற்கென்ன சம்பந்தம் என்றும் சிலர் இல்லை பலர் கேட்கலாம். சினிமாவிலும் இதே பிரச்சனை இருக்கிறது. எனினும் சின்னத்திரை போன்று அது தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு "திருடா திருடி" படத்தில் தனுசின் பெயரென்ன என்றால் அனேகமானோருக்குத் தெரியாது. அதுவே சின்னத்திரையில் வரும் ஏதாவது கதாபாத்திரத்தின் பெயரைக் கேட்டால் அப்படியே அழகாக ஒப்புவிப்பார்கள். இதுதான் சின்னத் திரையின் தாக்கம்.

நாங்கள் அன்று பார்த்த சில திரைப்படங்களினை இன்று பார்க்க எங்களால் முடியாது. (தியாகராஜ பகவதர் ) ஏன் பார்க்க முடியாது? இப்போது சினிமா வளர்ந்து விட்டது. இதற்காக இப்போது வருகிற குப்பைப் படங்களினை புகழ்வதாய் எண்ண வேண்டாம். நான் பொதுவாகச் சொல்லுகிறேன்.

ஏன், இப்போது சிவாஜி "கைவீசம்மா கைவீசு" என்று சிம்ரனைப் பிடித்துப் பாடல் பாடினால் கேட்க முடியுமா? காலத்திற்கேற்ப நாங்கள் மாறுகிறோம் எங்கள் ரசனைகள் மாறுகிறது. இப்படி இருக்கிற பொழுது மேற்குலகில் இருக்கும் எங்களுக்கு அதைவிட 21ம் நு}ற்றாண்டில்இருக்கும் எங்கள் சிந்தனைச் சிறகுகளின் வீரியம் எப்படி இருக்க வேண்டும்.

வெறும் சின்னத்திரைகளின் சில்லறை விடயங்களால் மயங்கி விட்டால் அல்லது இவைகள் எல்லாம் இயல்பாகிவிட்டால் இதுதான் எங்கள் எல்லையாகி விடும். அடுத்த கட்டம் பற்றிய அக்கறை இருக்காது. சரி, பெரிதாக சிந்திக்கத் தேவை இல்லை. உங்கள் நாடுகளில் காண்பிக்கப்படும் சின்னத்திரைகளினை ஒரு தடவை இருந்து பாருங்கள். அப்போது உங்களுக்கு எம் சின்னத்திரைகள் எந்தக் காலத்தில் இருக்கின்றன என்று தெரியும் அல்லது இருக்கிற நாட்டின் சமூகம் எப்படி இருக்கிறதென்றாவது புரியும்.

1 comment:

பினாத்தல் சுரேஷ் said...

//"விடாது கறுப்பு'' முழுமையாக (வாடகைக் கொப்பி) பார்த்தேன். அந்த நாடகம் இவ்வகையான சின்னத்திரை நாடகங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது.//

see Chidambara Ragasiyam on Wednesdays.. it is even better than karuppu. A real thriller, serial produced with a screenplay.