Saturday, April 30, 2005

கண்ணீர் அஞ்சலிகள் !

மாமனிதர் சிவராம் அவர்களுக்கு
அனைத்து உலகத் தமிழர் சார்பில்

கனத்த மனத்துடன்
கண்ணீர் அஞ்சலிகளை
காணிக்கையாக்குகிறேன்.

Sunday, April 24, 2005

சின்னத்திரை -755

அன்றொரு நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஏதோ தொடர் நாடகம் ஒன்று அதாவது சின்னத்திரை நாடகம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. ஓடிக் கொண்டு இருந்தது என்றால் அவர்கள் வாடகை கொப்பி எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று அர்த்தம். இன்று கிட்டத்தட்ட இரு மாதங்களின் பின் அதே வீட்டில் அதே நடிகர்களுடன் அதே கதாபாத்திரங்களுடன் (ஆகவே நான் அன்று பார்த்த அதே நாடகம்) திரும்ப ஓடிக் கொண்டு இருக்கிறது. அன்றும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை இன்றும் அதே பிரச்சனை ஆனால் வேறு வடிவத்தில் (Episode 755).

நான் தொடர் நாடகங்கள் பார்க்காதவன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் நான் எதையும் தொடர்ச்சியாகப் பார்த்ததும் இல்லை அதைவிட அவை தமிழ் நாடகங்களும் இல்லை. இங்கே ஆங்கில தொலைக்காட்சிப் பக்கத்தில் ஒளிபரப்பாகும் மூன்று நாலு நாடகங்கள் பார்ப்பேன் அவ்வளவுதான். தொடர்ந்தும் அல்ல நேரம் கிடைத்தால் அதாவது எப்போதாவது Free யாக இருந்தால். நான் பார்த்த எந்த நாடகத்திலும் என்னை அழவைக்க அதாவது பார்வையாளரை அழவைக்க வேண்டும் என்கின்ற நோக்கம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நம்மூர்க் கூத்துக்களைப் பார்த்தால் பார்வையாளர்களை அழவைக்க வேண்டும் எவ்வாறு எனினும் எங்களுக்காக ஏதாகிலும் ஒரு "அழுகுனி'' காட்சியினை உருவாக்கி அதனூடாக நாம் அழவேண்டும் என்ற நோக்கத்தினை முன்னிறுத்தியே சின்னத் திரைகள் அனேகமாக தயாரிக்கப்படுகின்றன.

நான் நாட்டில் இருந்த போது இந்திரா சௌந்தராஜனின் "விடாது கறுப்பு'' முழுமையாக (வாடகைக் கொப்பி) பார்த்தேன். அந்த நாடகம் இவ்வகையான சின்னத்திரை நாடகங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. அதில் இப்போது வருவது போன்ற மலிவான சிந்தனை உடையதான பிரச்சனைகளைக் காட்டிய தில்லை. அது ஒரு புராணக் கதை போன்ற நாடகம். Split Personality ஐ வைத்து எழுதப்பட்ட நாடகம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பதட்டத்துடன் நகர்ந்து கொண்டு இருக்கும். ஆனால் இப்போ எத்தனை நாடகங்கள் அப்படி வருகின்றன? அன்றே அந்தக் காலப் பகுதியில் விடாது கறுப்பு மட்டும்தான் இருந்தது.

இப்போ நான் அறிகிற அளவிற்கு (என்னுடைய வீட்டில் தமிழ்ச் சேவை இருக்கிறது என்கின்ற அளவில் ஏதாவது ஒரு நாடகம் அடிக்கடி குறைந்தது இரண்டு நிமிடத்திற்காவது என் கண்களில் தட்டுப்படும்) சொத்துப் பிரச்சனை வைத்து சுற்றப்பட்டு இருக்கும் கதையுடைய நாடகம். கணவன் மனைவிக்கு இடையில் உறவில் உள்ள குளறுபடி அதுவும் கீழ்த்தரமான முறையில் கையாளப்பட்டு இருக்கும் நாடகம். (அதிலும் அடிக்கடி குடிகாரக் கணவன் வந்து மனைவியிடம் ஏதாவது உளறிக்கொண்டு இருப்பது போன்ற கட்டங்களை அடிக்கடி காணலாம்). காணித் தகராறு கடன், ஊர் விவகாரம், போன்ற குறிப்பிட்ட சில "Mega கருக்களை'' வைத்துக் கொண்டு நாடகம் போடுகிறார்கள்.

இப்பொழுது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் எங்களுக்கு ஊரில் வாழ்ந்த காலத்தில் இருந்து வந்த வாழ்க்கை முறைக்கும் இப்போ இங்கு வாழ்ந்து வரும் வாழ்க்கை முறைக்கும் எத்தனை வித்தியாசம். அப்படி இருக்க இன்னும் ஊர் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அதையும் இயலுமான அளவிற்கு மட்டமாக (என்னுடைய பார்வையில்) எடுத்துத் தள்ளப்படும் 99 வீதமான சின்னத் திரையினை இங்கே கண்ணீர் விட்டு விட்டுப் பார்ப்பதனால் என்ன பயன்?.

இப்படிக் கேட்பதனால் அனேக அளவிலான தாய்மார்களின் எதிர்ப்பினை நான் சம்பாதிப்பேன் என்பது எனக்கு சாதாரணமாகவே தெரியும். அதற்காக பேசாமல் இருந்து விட முடியுமா? சினிமாவும் பார்க்கிறோம் தானே அதற்கென்ன சம்பந்தம் என்றும் சிலர் இல்லை பலர் கேட்கலாம். சினிமாவிலும் இதே பிரச்சனை இருக்கிறது. எனினும் சின்னத்திரை போன்று அது தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு "திருடா திருடி" படத்தில் தனுசின் பெயரென்ன என்றால் அனேகமானோருக்குத் தெரியாது. அதுவே சின்னத்திரையில் வரும் ஏதாவது கதாபாத்திரத்தின் பெயரைக் கேட்டால் அப்படியே அழகாக ஒப்புவிப்பார்கள். இதுதான் சின்னத் திரையின் தாக்கம்.

நாங்கள் அன்று பார்த்த சில திரைப்படங்களினை இன்று பார்க்க எங்களால் முடியாது. (தியாகராஜ பகவதர் ) ஏன் பார்க்க முடியாது? இப்போது சினிமா வளர்ந்து விட்டது. இதற்காக இப்போது வருகிற குப்பைப் படங்களினை புகழ்வதாய் எண்ண வேண்டாம். நான் பொதுவாகச் சொல்லுகிறேன்.

ஏன், இப்போது சிவாஜி "கைவீசம்மா கைவீசு" என்று சிம்ரனைப் பிடித்துப் பாடல் பாடினால் கேட்க முடியுமா? காலத்திற்கேற்ப நாங்கள் மாறுகிறோம் எங்கள் ரசனைகள் மாறுகிறது. இப்படி இருக்கிற பொழுது மேற்குலகில் இருக்கும் எங்களுக்கு அதைவிட 21ம் நு}ற்றாண்டில்இருக்கும் எங்கள் சிந்தனைச் சிறகுகளின் வீரியம் எப்படி இருக்க வேண்டும்.

வெறும் சின்னத்திரைகளின் சில்லறை விடயங்களால் மயங்கி விட்டால் அல்லது இவைகள் எல்லாம் இயல்பாகிவிட்டால் இதுதான் எங்கள் எல்லையாகி விடும். அடுத்த கட்டம் பற்றிய அக்கறை இருக்காது. சரி, பெரிதாக சிந்திக்கத் தேவை இல்லை. உங்கள் நாடுகளில் காண்பிக்கப்படும் சின்னத்திரைகளினை ஒரு தடவை இருந்து பாருங்கள். அப்போது உங்களுக்கு எம் சின்னத்திரைகள் எந்தக் காலத்தில் இருக்கின்றன என்று தெரியும் அல்லது இருக்கிற நாட்டின் சமூகம் எப்படி இருக்கிறதென்றாவது புரியும்.

Friday, April 01, 2005

மெல்லத் தமிழ் இனி. . .

அண்மைக்காலமாக லண்டனில் மீடியாக்களின் வழி வரும் விளம்பரங்களினைப் பார்க்கும்போது "என்னடா இதுவென்று'' கொஞ்சம் வெறுப்பாக இருக்கும். காரணம் வியாபாரப் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்கிற ஒரு நோக்கில் தம்பாட்டிற்கு விளம்பரங்களை போடுகிறார்கள். உதாரணத்திற்கு எங்கள் தாயகத்துடன் சம்பந்தமில்லாததாக இருப்பினும் அதைப்பற்றி அக்கறைப்படாமல் "தாயக மண்ணின் வாசத்தினை நுகர'' என்று கூறி இந்தியாவின் வடக்கு மானிலப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் அரிசிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.

இதனை விட யாழ்ப்பாணப் பொருள் ஒன்றிற்கு இந்தியர்களை அதாவது சினிமாவோடு சம்பந்தப் பட்டவர்களை வைத்து இந்தியாவிலேயே விளம்பரங்களைத் தயாரிக்கிறார்கள். நான் ஒன்றும் இந்தியர்களை வைத்து விளம்பரம் எடுப்பது தவறு என்று சொல்லவில்லை. தாயகம் சம்பந்தமான விடயங்கள் என்று வருகிறபோது அதற்குள் இந்தியா என்ன இங்கிலாந்தினைக் கூட தொடர்பு படுத்தவேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

நடிகை ஒருவரை வைத்து நகைக்கடை விளம்பரம் எடுப்பது வேறு, அதே நடிகையினை வைத்து பூனகரி மொட்டைக் கருப்பன் அரிசி விளம்பரம் எடுப்பது வேறு. சில காலங்களுக்கு முன்னர் அரிசியினை இலங்கை ஏற்றுமதி செய்தது. தற்போதைய சிக்கல்களினால் எல்லாம் தடைப்பட்டு விட்டது. இப்போ ரில்டாவும் பாசுமதியும்தான் எங்கள் அரிசியாக்க சிலர் முயல்கிறார்கள். இந்த வகை விளம்பரங்களினை இந்தியச் சகோதரர்கள் செய்யவில்லை எங்கள் வியாபாரிகள் எங்கள் ஊடகத்துறையினர்கள் தான் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எங்கள் தனித்தன்மை மீது அக்கறை இல்லையோ தெரியாது அல்லது தனித்தன்மை பற்றிய அறிவு இல்லையோ தெரியாது.

இதைவிட தலைக்குள் இல்லாத சில (சிலர் தான்) தொழில் அதிபர்களும் இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் Creative idea கீழே.

இந்தியாவுக்கோர் -காந்தி.
இலங்கைக்கோர் -பிரபாகரன்.
இங்கிலாந்திற்கோர் -அவரது நிறுவனம்

இந்த விளம்பரத்தால் எங்கள் தனித் தன்மைக்கு அல்லது அடையாளத்திற்கு பிரச்சனை இல்லை எனினும் இவர் போன்ற சில தலைக்குள் இல்லாதோர் தான் எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு ஓடிப்போய் "சித்தக்கேணி செங்கட்டிக்கு விளம்பரம் செய்யவேணும் சினேகாவை புக் பண்ணவேணும் என்று அவர்கள் வாசல்களில் காத்திருப்பார்கள்'

அண்மையில் ஒரு தொலைத்தொடர்பு அட்டைக்கான விளம்பரம் ஒன்றினைப் பார்த்தேன் அது முழுக்க முழுக்க தாயகத்திலேயே எடுக்கப்பட்ட விளம்பரம். அதனைப் பார்க்கும் போது ஒருவித சந்தோசம் உள்ளே ஊறும் (சகோதர மொழியினரதாய் இருந்தாலும்) அதற்குக் காரணம் அது என்னுடைய தாய் நாடு. எத்தனையோ ஆயிரம் மைல்கள் தொலைவில் வேறு ஒரு நாட்டில் நான் இருக்கிறேன். அப்படியென்றால் நான் எங்கு இருந்தாலும் என்னுடைய நாட்டினைப் பார்க்கிற பொழுது எனக்கு என்னுடைய அடையாளம் நினைவு படுத்தப்படுகிறது. அப்படியே நான் உணருகிறேன். எத்தனை பேருக்கு இப்படி அடையாளம் குறித்து அக்கறை இருக்கிறது. உங்களை நீங்களே "விரும்பினால்'' கேட்டுப்பாருங்கள்.

வேலைத்தலத்தில் சில தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளையருடன் பேசுகிறபோது ஐஸ்வர்யா ராய் தங்கள் சகோதரி போலக் காட்டிக் கொள்வார்கள். இதற்கு வெள்ளையர்கள் எங்களை இந்தியர்கள் அல்லது அதனோடு தொடர்புடையவர்கள் என்று எண்ணிக் கோண்டு இருப்பதே காரணம். சரி அவர்கள்தான் எண்ணுகிறார்கள் நாங்களாவது விளக்கலாம் என்றால் விளக்கிய பின்னர் எந்த அழகு தேவதையை சொந்தங் கொண்டாடுவது? அதனால் அப்படியே We are Asian you know என்று பேச்சினை முடித்துவிடலாம் என்பது பலருடைய எண்ணம்.
எத்தனை காலம் இப்படி இருக்கப் போகிறோம்?.

சிலருக்கு சாரூக்கான்தான் தங்கள் நாயகன் அப்ப Tom cruise ? அவன் அமெரிக்கன்! அப்ப சாரூக்கான் இலங்கையோ! இல்லத் தமிழோ! சாரூக்கான் ஒரு நல்ல நடிகர் அவரைப் பிடிக்கும் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் Tom cruise அமெரிக்கன் என்று தள்ளிவைத்து சாரூக்கான் து}க்கி வைக்கப்படுவது ஏன்? எங்கள் நிறத்தில் இருக்கும் அவரும் கொஞ்சம் இப்போ உலகளவில் பிரபல்யம். அதைவிட இந்திக்காரர்கள்தானே கிட்டத்தட்ட வெள்ளையர் போல மாறி வருகிறார்கள் ஆகவே எங்களுக்கு என்று ஒருவரும் இல்லாதபடியினால் இவர்களை வைத்துக் கொண்டு விலாசம் காட்டுவோம் என்று எங்கள் இரண்டாம் தலைமுறை நடந்து வருகிறது.

இப்படி அவர்கள்தான் நடந்துவருகிறார்கள் என்றால் எங்கள் ஊடகக்காரரும் தொழிலதிபர்களும் எங்கள் சுய அடையாளம் குறித்து அக்கறை இல்லாமல் சினிமா நடிகையை வைத்து சீரகம் விற்றால்தான் சனம் சீரகம் வாங்கும் என்று எண்ணி வருகிறார்கள். இதனால் என்ன நடக்கும் இன்னும் சிறிது காலத்தில் எங்கள் அடையாளமோ அல்லது தனித்தன்மையோ இன்றி மொரிசியஸ் தமிழர்போல பெயரளவில் இருந்து கொண்டு எங்கள் அடையாளத்தினை தொலைத்து விடும் நிலை புலம் பெயர் ஈழத்தமிழருக்கு ஏற்படும்.

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா ? மெல்லத் தமிழ் இனிச்சாகுமா?
காலம்தான் பதில் சொல்லும்.