Monday, January 09, 2006

சும்மா சுத்தல்...?

எல்லாளன் நீங்கள் தமிழர்தானே தமிழ் இனம் கலாசாரம் பண்பாடு போன்றவற்றில் அக்கறை கொள்கிறீர்களா? கடைப்பிடிக்கிறீர்களா? இப்படி ஒரு கேள்வியினை வில்லங்கமான ஒருவர் வில்லங்கமான ஒரு இடத்தில் வைத்துக் கேட்டார். உடனே இப்படி யோசியும் அப்படி யோசியும் என்று ஆரம்பிக்க முடியாது. அருகில் இருந்தவர்கள் அடிபாட்டுக்கு வந்து விடுவார்கள். ஆகவே எப்படிப் பதிலளிப்பது என்று கொஞ்சம் யோசிக்க வேண்டியதாகப் போய்விட்டது. என்னுடைய கருத்து இது என்று இலகுவாக சொல்லிவிடவும் முடியாது. சொன்னால் கேட்பவர்களுக்கு அது ஒவ்வாததாக இருப்பின் அங்கே பிரச்சனை வரும். அவர்களைச் சந்தோசப்படுத்தப் பொய் சொன்னால் எனக்குக் கஷ்டமாக இருக்கும். என்ன செய்வது? சரி அடுத்த முறை உதை எழுதுங்கோவன் என்று சொல்லி விலகினார் வில்லங்கமானவர் (நண்பர்தான்).

நான் தமிழன்தான் இனம் கலாசாரம் பண்பாடு என்பவற்றில் அக்கறை உடையவன் தான். என்று சொன்னால் அப்ப வேட்டி சால்வை உடுத்தும் என்பர். அக்கறை இல்லை என்றால் பிறகு ஏன் நீர் தமிழ்ப் பத்திரிகையில் எல்லாம் எழுதுகிறீர் பேசாம இருமன் என்பர். அவர்களையும் அவர்கள் விதண்டா வாதங்களையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அவருடைய கேள்விக்கான என்னுடைய பதில் என்ன? என்று யோசிக்கிறேன்.

நான் ஏற்கனவே ஒருமுறை எழுதியது போல கலாசாரம் பண்பாடு என்பவை எமக்கு வழிகாட்ட என உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய முறை என்றே படுகிறது. இது பிரதேசங்களுக்கு பிரதேசம் அவரவர் வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்ப அவை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல் எங்களுக்கும் எழுதப்படாத சில கலாசார விதிகள் இருக்கின்றன. ஆடை அணியும் முறை! தமிழ் ஆண் வேட்டி சட்டை சால்வை உடுத்துவார் தமிழ்ப் பெண் சேலை அணிவார் பொட்டுவைப்பார் வளையல்கள் அணிவார் என்று சிலவற்றைச் சொல்லலாம்.

குளிர்ப்பிரதேசங்களில் இருக்கும் எஸ்கிமோக்கள் என்ன அணிகிறார்கள் என்று எனக்குத் தெரியாது (அதனுடைய பெயர்) ஆனால் நிச்சயமாக வேட்டி சட்டை இல்லை என்பது எனக்குத்தெரியும். அப்படி என்றால் அவரவர் பிரதேசங்களுக்கு ஏற்ப அவரவர் ஆடைகள் தீர்மானமாகி இருக்கிறதெ தவிர வேட்டி சட்டையில் பெரும் விசேடம் ஒன்றும் இல்லை.

மொழியினை எடுத்துக் கொண்டால் எம்முடைய பிரதேசத்திற்கு உரிய மொழி தமிழ் மொழி ஆனால் அத்தமிழ் மொழியை வைத்துக்கொண்டு இன்றைய உலகில் எத்தனை விடயங்களைகளைச் சாதிக்கலாம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழ்மொழியை ஆங்கில மொழியுடன் ஒப்பிடும் பொழுது தமிழ் மொழியின் நவீன உலகத்திற்கான வீரியத்தின் அளவு என்ன?

தானறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதான மொழி வேறில்லை என்று பாரதி சொன்னார். அவருடைய எந்தவொரு செயற்பாட்டிற்காக வெளிப்படும் எண்ணங்களும் தமிழில்தானே உதிக்கும் அப்படி இருக்கிறபொழுது அவர் தமிழைத்தான் சிறந்தது என்று சொல்லுவார்.

சேக்ஸபியருக்குப் பல மொழிகள் தெரிந்திருக்கும் ஆனால் ஆங்கிலம்தான் சிறந்தது என்றுதானே அவர் சொல்லுவார். கணிணி முறையில் சொல்வதானால். அவரவருக்குரிய Operating system அவரவர் மொழியில்தான் எழுதப்பட்டு இருக்கும். அதாவது காலை எழும்புகிறபோது இப்பொழுது எத்தனை மணி என்று தான் நான் நினைப்பேனே தவிர What is the time now என்று நினைக்கப் போவதில்லை
ஆகவே பாரதியின் எண்ணம் எப்போதும் தமிழில்தானே இருந்திருக்கும் பின் எப்படி அவருக்கு மற்ற மொழி இனிதாக இருக்கும்? (மகாகவி மேல் மரியாதை உடையவன்தான் நான்)
21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி வாளோடு மூத்த தமிழ் என்றும் செம்மொழி என்றும் சொல்லி என்ன பயன்?

இங்கே நான் வெறுமனே தமிழர் ஆடை மொழி போன்ற இரண்டை மட்டுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டேன் எம்மிடம் இவை போல் ஆயிரம் இருக்கின்றன. இப்படி இருக்கிறபோது தமிழர் தமிழ் மொழி தமிழ்க் கலாசாரம் என்று துÖக்கிப் பிடிப்பது சும்மா சுத்தல்....

ஆனால்!!!

எனக்கென்றொரு சுயத்தில் எனக்கென்றொரு அடையாளத்தில் "அக்கறை" உடையவர்களாக நாம் இருந்தால் எமக்கு இன கலாசார மொழி முக்கியமே. சகல இனமக்களும் தம்முடைய அனைத்து அடையாளங்களையும் விட்டுக் கொடுத்து நாம் யாவரும் ஒர் மனிதகுலம் என்று வந்தால் அந்த நிலைவேறு.

ஆனால் எல்லோரும் தங்கள் தங்கள் அடையாளங்களினைக் காத்து நிற்கிறபோது நான் என்ன மண்ணுக்கு என் அடையாளத்தினை விட்டுக்கொடுக்க வேண்டும்.

சில சிக்கல்கள் இருக்கிறதுதான். அவை எங்களுடையதில் மட்டுமா இருக்கிறது? மோசமானவைகளைத் தவிர்ப்போம். மிகுதியைக் காப்போம்.

ஒரு இனம் தனித்து நிற்கவேண்டும் என்றால் அதற்கென்றொரு கலை கலாசாரம் என்கிற அடையாளம் அவசியம். எனக்கு அடையாளம் தேவை! உங்களுக்கு எப்படி?