Friday, September 16, 2005

HEALING BY DEALING

நான் எந்த சமயத்திற்கும் உரியவன் அல்ல. மனிதரை வழி நடத்த உருவாக்கப்பட்டவைகளே இன்று வழி தவறி மனிதர்களுக்குள் சிக்கல்களினை வளர்த்து விட்டு இருக்கிறது என்பதால் பொதுவாக எனக்கு "மதங்கள்'' பிடிக்காது.

அண்மையில் எனது நண்பன் ஊரிலே து}க்குக் காவடி எடுத்தான். அவன் சகோதரன் தாயகத்தில் ஓரிருவருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறான். இந்தக் காரணத்தினால்தான் அவன் காவடி எடுத்தானாம்.

இன்னுமொருவர் இங்கு தனது விசாப் பிரச்சனைகள் தீரவேண்டும் என்று நேர்த்தி வைத்திருந்தார். பிரச்சனை தீர்ந்தது. இப்போது அவர் British citizen. அதனால் அவர் அண்மையில் அங்கப் பிரதட்சணம் செய்தார்.

மூன்றாவதும் இறுதியுமானவருமான நண்பர் தனக்கு குறிப்பிட்ட வேலை கிடைக்கவேண்டும் என்று நேர்த்தி வைத்திருந்து சென்ற வாரம் தான் 200 pint Fresh milk ஊற்றினார்.

மேற்சொல்லப்பட்ட என் நண்பர்கள் கடந்து வந்த அந்தப் பாதை எனக்குத்தெரியும். அது மிகவும் கொடூரமானது.

இதனை இவ்விடத்தில் விட்டுவிட்டு நான் கடந்த வாரம் வாங்கிய கணிணி மென்பொருள் பற்றி ஒரு தடவை சொல்லவேண்டும். நான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துடன் எனக்குத் தேவையான மென்பொருள் பற்றிப்பேசினேன். அவர்கள் அந்த மென்பொருளுக்கு ஈடான ஒன்று இருப்பதாகச் சொல்லி அதை என் தேவைகட்கு உபயோகப்படுத்தலாம் என்று சொன்னார்கள். நான் அவர்களிடம் அந்த மென்பொருளினை வாங்கி உபயோகித்தபோது என்தேவைகளை அது ஈடு செய்யவில்லை. அதனால் நான் அவர்களிடம் மென்பொருளைக் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொண்டேன். அத்துடன் எனக்கும் அவர்களுக்கும் இடையில் இருந்த வியாபார உறவு முடிந்து விட்டது.

மறுபடி விட்ட இடத்திற்கு வருகிறேன். என் நண்பர்கள் மூன்றுபேர் தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இவர்கள் என் நண்பர்கள் என்பதால் அவர்கள் செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைச் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது.

ஏனெனில் இறைவனுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கிற உறவு என்ன என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றே எண்ண வேண்டி இருக்கிறது. இவர்கள் என்று நான் குறிப்பிடுபவர்கள் தனியே என் மூன்று நண்பர்களை மட்டும் அல்ல. மாறாக நேர்த்தி செய்யும் அனைத்து அடியார்களையும்தான்.

நேர்த்தி என்றால் என்ன? இறைவனிடம் ஒரு தேவைக்காக மன்றாடி அத்தேவையினை நீ நிறைவேற்றியவுடன் நான் உனக்காக இப்படிச் செய்வேன் என்று இறைவனுக்கு ஒரு வாக்குறுதியினை வழங்குதல் அல்லவா. இறைவன் நிறைவேற்றியவுடன் நாங்கள் நேர்த்திக் கடனினைச் செய்கிறோம். சரி இறைவன் ஒன்றும் செய்யாமல் இருந்தால்? நாங்கள் அவரவர் வேலையுடன் இருப்போம். அப்படித் தானே! நான் மென்பொருள் வாங்கியது போல, இது என்னையா இது கடவுளுடனேயே வியாபாரம். பலருக்கு என்னுடைய வாதம் ஆரோக்கிய மானதாகப்படாது.

சரி இப்படிப் பார்ப்போம். என்னுடைய சில சிக்கல்களை என்னிடம் இருந்து விலகவேண்டும் என்று இறைவனின் காலில் விழுகிறேன். அதாவது நேர்த்தி வைக்கிறேன். ஆனால் அது நடக்க வில்லை. இருப்பினும் நான் நேர்த்தியினை நிறைவேற்றுகிறேன் அதுதான் உண்மையான உறவு.

அதாவது இப்படி, இறைவா என்னுடைய பிரச்சனைகளை உன்னிடம் சொன்னேன் ஆனால் நீ கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் நான் செய்ய இருந்த நேர்த்தியினை இப்போ செய்கிறேன். என்று சொன்னால் அது இறைவனில் நாம் வைத்துள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது.
அதை விடுத்து. நீ தந்தால் நான் செய்வேன் இல்லாவிட்டால் இல்லை என்றால் அது ஒருவகை வியாபாரம் என்றுதான் சொல்லவேண்டும் ஆகவே இன்றைய காலத்தில் காணப்படும் அனைத்து நேர்த்திகளும் வியாபாரம்தான் ( Bothway Dealing ). சரி இதை நீங்கள் விளங்கிக் கொண்டாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

உண்மைகளை ஏற்றுக்கொண்டால், இன்று பல சமயங்களின் கட்டமைப்புக்களில் ஓட்டைகள் விழுந்து அவை நாசமாகிவிடும். அதாவது சந்திரனில் மனிதன் காலடி வைக்கவில்லை வைக்கவும் முடியாது என்றும் கூறி வந்த Conspiracy Theory யை உடைக்க முடியாமல் நாசா இருந்தாலும் அதை ஏற்காமல் தன்வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. காரணம் அதன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது முயன்றாலும் குட்டு வெளிப்பட்டு விடும்.
ஆகவே இருந்த இடத்தில் இருந்து கொண்டு, இல்லை மனிதன் சந்திரனில் கால்வைத்தான் என்று சாதாரணமாகச் சொல்லுகிறது.

அதுபோலத்தான் தங்கள் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காக மதங்களும் தம்விடயங்களை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறது.சரி, நாங்கள் நேர்த்தியினை வியாபாரம் என்று பார்க்கவில்லை. அது தெய்வீகமானது. புனிதமானது என்று கூறினால் கூறிவிட்டுப் போங்கள். ஒரு விடயத்தினையாவது முடிந்தால் செய்யுங்கள்.

நேர்த்தி என்று சொல்லி Trolleyயில் பாலினைக் கடவுளுக்கு ஊற்றாமல் அதை ஏதாவது முதியோர் இல்லங்களுக்கு அல்லது ஆதரவு இல்லங்களுக்கு வழங்குங்கள். புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, இல்லங்களுக்கான பட்ஜெட்டில் பால் செலவாவது குறையும்.

No comments: