Thursday, January 20, 2005

Writable and Rewritable CDs

நான் பத்திரிகைக்கு பத்தி எழுதும் வழக்கம் உடையவன். ஒரு நாள் "நீ இப்பிடி எல்லாம் எழுதிறதால சனம் எல்லாம் யோசிக்குது, நடக்குது எண்டு நினைக்கிறியா'' என்று என் நண்பன் கேட்டான். நிச்சயமாய் எல்லோரும் கேட்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் எல்லோரும் யோசித்தால், நடந்தால், உலக சமனிலை குழம்பிவிடும்.

எப்போழுதும் இரண்டு சாராரும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதாவது என்னை விட்டுவிடுங்கள் நான் பெரும் எழுத்தாளன் எல்லாம் கிடையாது. ஆனால் இந்த பூமியில் எத்தனை அறிவாளிகள் தோன்றி எழுதி உரைத்து மறைந்து இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மாவறிஞர் அரிஸ்டோரிலுக்கு என்ன நடந்தது? அவர் என்ன பேசுகிறார் என்பதையே விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் அவருக்கு மரணதண்டனை வழங்கினார்கள். இருப்பினும் சிலர் அவருடைய சீடர்களானார்கள். ஆக இப்படி எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டு இருப்பார்கள், ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் து}க்கிப் போட்டுச் செல்லுவார்கள்.

அதாவது ஒரு பூ! பூத்து மணம் பெருக்கி அழகு காட்டி, பின் காய்ந்து விடும். அதன் மணத்தினை சிலர் ரசித்து இன்பம் காண்கிறார்கள். இதுபோலத்தான் நானோ அல்லது பெரும் எழுத்தாளர் களோ எங்களுக்குப் படுவதனை எழுதுகிறோம். எடுப்பவர்கள் எடுக்கிறார்கள் மற்றவர்கள் மறுக்கிறார்கள், அவ்வளவுதான். இதனைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டு இருந்தவேளை ஒரு விடயம் எனக்குப் புலப்பட்டது.

அது என்னவெனில் நாங்கம் பயன்படுத்தும் 'இறுவட்டு"

ஆ... என்ன அது??

அதுதான்! CD இந்தச் CDக்களில் இருவிதம் ஒன்று WritableCD மற்றயது Rewritable CD. ஒருதடவை பதிவு செய்த பின்னர் மாற்றம் செய்ய முடியாதது WritableCD. ஆனால் தேவைக்கேற்றபடி மாற்றிப் பதிவு செய்யக் கூடியது RewritableCD. இதனை அப்படியே மனித மனங்களுடன் ஓப்பிட்டால் ஒரு விடயத்தில் ஒருவர் சின்னவயதில் அல்லது ஏதாவது ஓர் ஆரம்பத்தில் இருந்து வைத்துள்ள கருத்தினை என்னாளும் மாற்றாமல் இருப்பது Writable CD வர்க்கம்.

மாற்றங்களுக்கு ஏற்றபடி மாத்திரம் சிலவேளைகளில் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுவது. RewritableCD வர்க்கம். அப்படி என்றால் எதை எழுதினாலும் அல்லது எதை உரைத்தாலும் புதிதாக கருத்து என்று வருகிற பொழுது Writable வர்க்கம் மாறப்போவது கிடையாது. Rewritable வர்க்கம் மட்டுமே தேவையென்றால் மாற்றிக்கொள்ளும். அப்படி என்றால் இவ்வளவு நேரமும் இதில் எழுதியது வீணானதா?

இல்லை! ஏனெனில் நாம் எந்த வர்க்கத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கம் அறிந்து விட்டு இருக்கிறோமா? இதுதான் இங்கு தேவையாகப் படுகிறது எனக்கு. நான் Rewritable ஆகவே இருக்க விரும்புகிறேன். ஆனால் நான் அப்படி இருக்கிறேனா? பலர் தாங்கள் அப்படி என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதனைத் தாங்கள் எடுக்கும் முடிவுகளினுடாக அறிந்து கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. என்ன குழப்புகிறேனோ?

சரி இலகுவான முறையில் சொல்ல ஒரு வழி! அதாவது இந்த Writable வர்க்கத்திலும் மிகவும் "மலிவான" கருத்துக்களை உடைய "சிலர்" பேச நான் கேட்ட வாசகங்கம் இதோ!

- வர்ண(சாதி) வேறுபாட்டைக் கொண்டு வந்தது கிருஸ்ணர். அப்படி எண்டா சும்மா இவயலின்ர கதைகளைக் கேட்டிட்டு அதுகளை விடுறது மிகப் பெரிய பிழை! ஏனெண்டா அது கிருஸ்ணரை அவமதிக்கிறதுக்குச் சமன்.

-எங்கட விழுமியங்கள் பற்றி எங்கட பிள்ளைகளுக்குத் தெரியோணும் ஊரில எங்களுக்கு ஒரு சீதனக் காணி இருக்கெண்டு அவைக்கு நாங்கதான் தெரியப்படுத்தோணும்.

இவைகள் வெறும் உதாரணங்கள் தான். இப்படி ஆயிரம் விடயங்கள்! வெள்ளையன், கறுப்பன், வேலை, வாகனம், என்று நீளுகிறது பட்டியல் இவ்வகையான விடயங்களினை எம்மை விட்டு அகற்றாமல் அல்லது மாற்றாமல் இன்னும் வைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம். இப்படி சில போதிக்கப்பட்ட அல்லது எழுதப்படாத வரையறைகளுக்குள் இருப்பதனால் எங்கள் "சிந்தனைத் திறனும்" ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது.

ஒர் உதாரணத்திற்கு;

இராவணன் என்று சொல்லுகிறபோது எத்தனைபேர் அவன் எங்கள் நாட்டு அரசன் என்று எண்ணுகிறோம் எத்தனைபேர் அவன் ஒர் கொடிய அரக்கன் என்று பார்க்கிறோம். இரண்டாவதுக்கு வலுவான வாக்குகள் கிடைக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. காரணம் எங்களுக்கு, பாடசாலையில் இராமனை உத்தமனாகவும் இராவணனை கொடியவனாகவும் காண்பித்து விட்டார்கள் (இதற்கு மேல் நாம் சிந்திக்கவில்லை). இதனால் எம்மில் சிலர் இராமனை வணங்கவும் செய்கிறார்கள்.

இவ்வகையாக ஆயிரம் விடயங்கள் எங்களை அவமதிக்கக் கட்டிய கட்டுக்கதை என்று சொல்ல, இவன் விசரன் என்று நினைப்பவர்கள் அப்படியே இருப்பார்கள்.

சிலர் என்னடா இவன் ஏதோ சொல்லவாறான் போல... என்று இழுக்கிறீர்களா? அந்த ஆர்வம் உடைய நீங்கள்தான் Rewritable வர்க்கம்.

வருக! வருக! வாழ்க! வளர்க!

No comments: