Thursday, January 27, 2005

புலம் பெயர்ந்தோர் சினிமா

இன்று நாங்களும் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்கிற ஆசை புலம்பெயர்ந்த பல தமிழர்கள் இடையே துளிர்த்து வருவதனை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நேரத்தில் இவ்விடயம் குறித்து எழுதுவதே சாலச்சிறந்தது என எண்ணுகிறேன். நாம் வாழும் இந்த நாடுகள், பொதுவாக எல்லா துறைகளிலும் உச்ச நிலையிலேயே இருக்கின்றன இப்படியான நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் திரைப்படங்கள், எப்படியான ஒரு தரத்தினை உடையதாக இரக்கின்றது? இதுபற்றி நான் சொல்லி நீங்கள தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பத்துப்பேர் ஒன்று கூடுவார்கள், திரைப்படங்கள் எடுக்கவேண்டும் என்கின்ற தங்கள் ஆசை பற்றி அதில் சிலர் பேசுவார்கள் "எடுக்கிறமடா" என்று ஒரு சபதம் இடுவார்கள். இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்கவேண்டாம், எனக்குத்தெரியும். பின் இவர்கள் அறிமுகமான சிலருடன் சீரியசாக பேசுவார்கள், நடிகர்கள் தேடுவார்கள்! பணம் என்பார்கள்! சேவை என்பார்கள்! இப்படி ஒவ்வொரு விடயமும் வளர்ந்து கொண்டு வரும், அதன் பின் படமும் வெளியில் வரும்.


ஆண்டவனின் அருளுக்காகவோ என்னவோ இப்படத்தினை அனேகமாக ஆலயங்களிலேயே காண்பிப்பார்கள். ஆக இவர்கள் திரைப்படம் என்று "ஏதோ" ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். என்ற அந்த முயற்சியினை பாராட்டலாம், அதாவது கொலம்பஸ் இந்தியா என்று எண்ணி மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடித்தது போல ஆனால் நிச்சயமாக அந்த "படத்தினை" யாராலும் பாராட்ட முடியாது, ஏனெனில் அது படமே அல்ல அதையும் தாண்டி.....

தானும் எடுக்காமல் எடுப்பவனையும் விடாமல்..... என்று சிலர் பொங்கி எழுவீர்கள். நான் இப்படி எல்லாம் எழுதுவதால் எனக்கு விருது ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
இத் துறையில் எங்கள் நிலை குறித்து சற்று எண்ணிப் பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக, வீடுகளில் இப்படத்தின் பிரதியினை போட்டுப் பார்த்தால் ஏதோ பிறந்த நாள் கொண்டாட்டம் என்றோ திருமண வீட்டில், கை கலப்பினையும் சேர்த்து தவறுதலாக எடுத்து விட்டார்களோ என்றோ தோன்றும்.

ஒரு முறை நான் படைப்பாளி ( ?? ) ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது தொலைக் காட்சியில் ஒருவர் ஒரு சிறுவனுடன் பாக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். அது அவருடைய திரைப்படம் என்று எனக்குத் தெரியாது, நான் அவரிடம் அவர் சொந்தக்காரரா? என்று கேட்டேன் , ஆம்! என்றார், எங்க கனடாவிலா இருக்கிறார்? என்றேன், இல்லை! என்றார், பின்ன ஈரோப்பா? என்றேன், "ச்ச...இந்தாள் இங்கதான் இருக்குது!" என்றார், பிறகேன் இப்படி இவரை TVல பார்க்கிறீங்கள் என்றேன், "இது என்ர படம் ஐசே!" என்றார்.

நான் என்ன செய்வது பாக்கில் ஒருவர் ஒரு சிறுவனுடன் விளையாடும்போது எனக்கு இது ஒரு படம் என்கிற உணர்வினை அந்த "அது" தந்திருக்க வேண்டும், ஆனால் நான் யாரோ ஒரு உறவினர் தன் மகனை வீடியோ எடுத்து இவருக்கு அனுப்பி இருக்கிறார் என்றுதான்; நினைத்தேன். நான் இந்த திரைப்பட முயற்சியினை பற்றி பேசியபோது அவர் கடும் சிரத்தையெடுத்துத்தான் இம்முயற்சியில் வெற்றிபெற்று இருக்கிறார் என்று உணர்ந்தேன். (வெற்றி என்று நான் சொல்வது படத்தினை முழுதாய் எடுத்து முடித்ததையே )அதற்காக இப்படியான ஒரு படத்திற்கு அவரை நான் எப்படிப் பாராட்டமுடியும்?.

இந்தியச் சினிமாவில் எத்தனையோ பேர் சேர்ந்து முழுநேரமாக திரைப்பட முயற்சியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் நாங்கள் அப்படி அவர்கள்போல் இயங்க முடியாது, இது எங்களுக்கு பகுதிநேர வேலை போலத்தான், என்பது பலரின் வாதம். உண்மைதான்இப்படி முழுநேரமாக இயங்க முடியாது என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இந்த முயற்சியில் இறங்கும் எத்தனை பேருக்கு திரைப்படத்தினை எப்படி உருவாக்குகிறார்கள் என்று தெரியும்?. அதாவது Plot, Story, Subplot, Screenplay, Dialouge, Story board, Direction, Cinematography, இப்படி நீளும் பட்டியல் குறித்த அறிவு எத்தனை பேருக்கு உண்டு.

இதனை விட்டுவிட்டு ஒரு கமெராவையும் இரண்டு லைட்டுகளையும் துக்கிக்கொண்டு "நல்ல கதை கிடைச்சிருக்கு படமெடுக்கிறம் என்று எடுத்தால்" எதிர்காலத்தில் அவரவர் சொந்த வீடுகளில்தான் படங்களை திரையிடவேண்டும். எங்களால் நல்ல காத்திரமான படங்களினை உருவாக்க முடிவதில்லையே, (தொழில்நுட்ப பக்கத்தினை விட்டுவிடுவோம்) ஒரு தாய் கடன் பெற்று படிக்கவைத்த தன்மகன் முதல் நாள் வேலையில் விபத்தாகி இறந்துவிட்டான். என்பதை அறியும்போது அந்ததாய்க்கு ஏற்படும் உணர்வு (படமென்று தெரிந்தும்)தொலைக்காட்சி ஊடாக வந்து எமக்கு ஏதோ செய்யுமே, அப்படி ஏன் எங்கள் திரைப்படங்கள் ஏதுவும் செய்வதில்லை?.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவனின் அறிவும் அனுபவமுமே காரணம் எங்களுக்குத்தான் இரண்டும் இல்லையே (சினிமாத்துறையைப் பொறுத்தவரையில்)அவ்வாறாயின் ஏன் நாங்கள் இது குறித்தான பாடநெறிகளை கற்ககூடாது?, எத்தனையோ கல்லூரிகள், பல்கலைக்களகங்கள் இந்தத்துறை சார்பாக பாடநெறிகளினை வைத்திருக்கிறபோதும் நாங்கள் ஏன் கற்ககூடாது? இந்தத்துறை எங்களுக்கு பாriட்சயமானால், இங்கிருந்து எத்தனையோ ஆயிரம் கொடுத்து இந்தியாவில் திரைப்படங்கள் வாங்கும் வினியோகஸ்தர்கள் எங்களை நம்பி எங்கள் முயற்சிக்கு பணம் போடத்தயங்க மாட்டார்கள், எங்கள் திரைப்படங்கள் திறம்படவருமாயின் அவற்றினை பல நாடுகளில் திரையிடலாம் (கோவில்களில் பொதுஇடங்களில் அல்ல).

இதனை விட்டுவிட்டு "இவங்கள் அவனுகளுக்குத்தான் உதவி செய்வானுகள், பேசாமல் அதைப் படிக்கிற நேரத்துக்கு முண்டு படம் எடுத்திட்டு போய்விடலாம்" என்று சொன்னால் இந்தத் தலைமுறை மட்டுமல்ல இனிவரும் தலைமுறையும் கோவிலிற்குள்தான் படம் பார்க்கும் என்பதில் ஐயமில்லை.

2 comments:

ஒரு பொடிச்சி said...

yes. this is what happening in abroad. they are 'making' home videos and asks the audience to support it.

கறுப்பி said...

உங்கள் கருத்தோடு என்னால் முற்று முழுதாக ஒத்துக்கொள்ள முடியவில்லை.
இந்திய சினிமாவுடனோ, இல்லவிட்டால் Hollywood உடனோ ஈழச்சினிமாவை ஒப்பிட முடியாது. இந்தியத் தமிழ் சினிமாவின் பாதிப்பு ஈழமக்களிடையே நிறைந்து போய் இருக்கின்றது. அதனால் அவர்கள் புதிய ஒரு கதையைப் புதிய முறையில் சொல்ல முயலாமல் இந்தியத் தமிழ்ச் சினிமாவின் பிரதியைக் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் கவலைக்கிடமாக இருக்கிறதே தவிர.. ஈழத் தமிழர் ஈழத்திலும் புலம்பெயர்ந்த இடங்களிலும் புதிய முயற்சியாகத் திரைப்படத்திற்குள் நுழைந்திருப்பதை நாம் பாராட்ட வேண்டும். இல்லையேல் இந்தியச் சினிமா எம்மவரைச் சிந்திக்க விடாமல் தடுத்து விடும். இலக்கிய உலகத்திலும் இந்த அபாயம் இருந்தது. ஆனால் தற்போது பல ஈழ எழுத்தாளர்கள் நல்ல பல படைப்புக்களைத் தரத் தொடங்கி விட்டார்கள் அதே போல் சினிமா உலகமும் முன்னேற வாய்ப்பிருக்கிறது.
தரமற்ற படைப்புக்கள் வந்துதான் தரமானவற்றை எமக்கு அடையாளம் காட்டும். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும் என்றே நம்புகின்றேன்.
சினிமா பற்றிய குறைந்த பட்ச அளவிலான அனுபவம் அறிவு இல்லாத வெறும் கலியாண வீட்டிற்கு வீடியோ எடுத்த பலர் தம்மிடம் கமெரா இருப்பதால் திரைப்படங்கள் எடுப்பதுதான் தாங்கள் கூறியதாக இருக்கலாம். ஆனால் பல தமிழ் இளைஞர்கள் தற்போது இத்துறையில் கல்வி கற்றுப் பயிர்சியும் எடுக்கின்றார்கள். அவர்களால் நல்ல தரமான படைப்புக்களை விரைவில் தர முடியும் என்பது என் நம்பிக்கை.