Friday, May 06, 2005

மண மாக்கட்

"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே.
என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது என்பது எளிதில் இயலாத காரியம் (?) . ஆனால் அதுவெல்லாம் இப்போ அக்கறைப் படத்தேவை இல்லாத விடயம்.
அதைவிட மேல் எழுதியவற்றிற்கும் இனி வரப் போவதற்கும் சம்பந்தமே இல்லை. "பிறகேன் எழுதுகிறாய்'' என்று கேட்பீர்கள். வேறொன்றும் இல்லை "எங்கள்" திருமணம் குறித்து மிகவும் குளம்பிப்போய் உள்ளதால் உங்களையும் ஒரு "குளப்பு" குளப்பி விடுவோமே என்பதே என் நோக்கம். குளப்பம் என்னவெனில் எங்கள் திருமணங்கள் "மலிவானதாகப்" போய்க்கொண்டு இருக்கிறதா என்பதுதான்.
திருமணம் என்பது இரண்டு முறைகளின் ஊடாகத்தான் நடைபெறுகிறது. முதலாவது காதல் இரண்டாவது காதல் அல்லாதது (டேய். . .டேய். . . ) காதல்த் திருமணங்கள் அவ்வளவு சிக்கல்களினை ஏற்படுத்துவதில்லை. (ஒன்று இரண்டினைத் தவிர) காதல் அல்லாத திருமணங்கள் இருக்கிறதல்லவா அதில் தான் பெரும் சிக்கல் இருக்கிறது. அதாவது மாப்பிள்ளையினைத் தெரிவு செய்யும் முறை அல்லது பொம்பிளையை தெரிவு செய்யும் முறை. இதில் அனேகமாக பெற்றோரினது தலையீடு மட்டுமே காணப்படும் ஆனால் பிள்ளைக்கு புகைப்படம் காண்பிக்கப் படும் வாய்ப்பும் உண்டு.
மாப்பிள்ளை வெளிநாடா, உள்ளுரா, என்ன வேலை செய்கிறார் என்பதுதான் முதற் கட்டக் கேள்விகளாக இருக்கும். பின் பெற்றோர் யார்? என்ன சாதி? என்ன செய்யினம்? இப்படிக் கேள்விகள் வரும்.
ஆக குறிப்பிட்ட வயது வர ஒன்றைப் பிடித்துக் கட்டிக் கொடுத்து அவர்கள் தார்மீகக் கடமைகளை முடித்து விடவேண்டும். என்பதில் தான் அக்கறை உண்டு அவர்களுக்கு. தனிப்பட்ட அந்த இருவர் தொடர்பான அக்கறை இன்றி, சரி பேசினோம், கட்டிக் கொடுத்தோம் என்ற போக்கில் இப்போ பல திருமணங்கள் நடந்தேறுகின்றன.
எனக்குத் தெரிய திருமண நாள்வரை மாப்பிள்ளையின் முகம் தெரியாது இருந்த ஒரு பெண்ணும் இருக்கிறாள். (இப்படியானவர்கள் மிக அரிதுதான்) ஏன் என்று திருமணப் பேச்சு வார்த்தைக் காலத்திலேயே பெண்ணின் தந்தையிடம் கேட்டேன். ( பெண் நாட்டில் இருந்தவேளை) அவள் "நீங்கள் பாருங்கோ அப்பா! நான் இல்லை எண்டோ சொல்லப் போறன்'' என்று சொன்னதாகச் சொல்லி மகளைக் குறித்துப் பெருமைப்பட்டார். நான் கவலைப்பட்டேன்.
இன்று எத்தனைபேர் திருமணம் குறித்து "அக்கறையாக'' இருக்கிறார்கள். போன வாரம் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார். "இஞ்ச! ஊரில ஒரு பிள்ளை இருக்கிது எக்கவுன்ஸ் டிபாற்மென்ட் ஒண்டில வேலை செய்யுது. ஆரும் கேட்டாச் சொல்லும், இங்க வந்தாலும் வேலை செய்யிறதுக்குப் பிரச்சனை இருக்காது" என்று.
இதை அவர் சொன்னபோது நான் ஏதோ கார் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். அதனால் "எப்பயாவது Offerல வரேக்க சொல்லுங்கோ அப்ப பாக்கிறன்'' என்று சிரித்து விட்டு வந்தேன் (அந்தப் பெண் அவருக்கு மூன்றாவது நபராக இருந்தபடியால் நான் அப்படிப் பேசியது கோபத்தினை ஏற்படுத்தவில்லை). அவர் எனக்குப் பின்னால் வந்தவரிடம் இது பற்றிப்பேசிக் கொண்டு இருந்தார். அவர் இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ விதத்தில் ஒரு சங்கடத்தினை எனக்கு அது ஏற்படுத்தியது.
பெண்ணோ ஆணோ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும் அல்லவா அந்த உணர்வுகள் ஒன்று சேர இருக்கும் இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போக வேண்டும் அல்லவா! இதை எல்லாம் குறித்து அக்கறைப் படாமல், வெறுமனே லண்டன் என்று திருமணத்திற்காக ஒரு பெண் அல்லது ஆண் இங்கு வருகிறார் ஆயின், அவர் காதல் யார் மீது? எனக்கேதோ லண்டன் மீது என்றே படுகிறது.
வாழ்க்கை வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டதா?மனித உணர்வுகளுக்கு இருந்த மரியாதை மரணித்து விட்டதா?
இல்லை இதுதான் நடைமுறை வாழ்க்கையா?
இது எங்களுக்கு மட்டும்தானா?
இது எங்கள் கலாசாரம் சம்பந்தப்பட்டதா?

இதற்கெல்லாம் பதில் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன். அதுவரைக்கும் நீங்களும் நான் இவ்வளவு நேரமும் கூறிய அனைத்துப் பிரச்சனைகள் குறித்து கொஞ்சம் யோசிங்க! முடிந்தால் எனக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள்