Sunday, July 17, 2005

DRAMAயணம்

அன்று ஒரு நாள் எனக்கு நடந்த சம்பவம் பற்றி எழுதி இருந்தேன் அது தொடர்பாக கடந்த வாரம்தான் வைத்தியரைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவரிடம் நடந்தவற்றைக் கூறினேன். அவர் ஏற்கனவே என்னுடைய பத்தியைப் படித்திருக்க வேண்டும். 

என்னைச் சோதித்துக் கொண்டு இருந்தவர் திடீரென கம்பவாரிதி ஜெயராஜ் பற்றி எழுதியது சரியா என்று கேட்டார். நான் சிரித்தேன் (ஏதாவது ஊசியப் போட்டு விடப்போறார் என்கிற பயத்தில்). பிறகு நீர் அதுக்கு இங்கு வரவில்லை, வேறு விடயத்துக்காக வந்திருக்கிறீர் என்று மறுபடி சோதனையில் இறங்கினார்.

சோதனை நடந்து கொண்டிருக்கிறது, அவர் சர்வதேசத் தமிழருக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்றார். ஆகா இதென்ன வேதாளத்தின்ர கதைபோல மரத்தில ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார் என்று நினைத்துவிட்டு பேசாமல் இருக்க (ஊசி... பயம்) மறுபடி சோதனை, பின்னர் "ஒருபேப்பரில இருக்கிறவைட்டச் சொல்லும் இராமாயணம் வாசிக்கச் சொல்லி, கம்பரப் பற்றிப் படிக்கச் சொல்லும். நாங்களும் இப்பிடித்தான் முந்தி "கிமாயணம்'' எண்டு எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னால திரிஞ்சனாங்க''. "கிமாயணம்'' தெரியுமோ? இது அவர். "இல்லை'' இது நான். நக்கல் சிரிப்பு இது அவர். பிரச்சனை என்னண்டா மூளை முதிர்ச்சி அடைய வேணும் என்று விட்டு ஏதாவது செய்யுங்கோ என்பதுபோல ஒரு ஏளனத்துடன் சிட்டையில் எழுதினார். இவர்தான் என்னை இப்போ இங்கு இதை எழுதத் து}ண்டினார்.

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் ராமாயணம் பற்றியும் கம்பர் பற்றியும் அவர் அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் தெரியும். ( ஆண்டு 11ல் படித்தது). நான் அறிந்தது இரண்டு இராமாயணம். ஒன்று மூலம் வான்மீகி இராமாயணம் மற்றயது தமிழ் மொழியாக்கம் கம்பராமாயணம். இதைவிட வேறும் இருக்கலாம் அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. மூலமும் படியும் எனக்குப் போதும்.

வான்மீகி இடம் இருந்து கம்பர் தமிழாக்கம் செய்யும்போது கம்பர் ஒரு வம்பு செய்ததாகப் படிக்கிறோம் அதாவது. தசரதனிடம் இருந்து இரண்டு வரங்களைப் பெற்ற கைகேயி இராமனை 14 வருடம் வனவாசம் போகச் சொல்கிறார். இந்த நேரத்தில் இராமன் அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற முகத்துடன் (சந்தோசமாக) ஏற்கிறார். இது கம்பருடையது. வான்மீகி அதாவது ஒறிஜினல் என்ன சொல்கிறது. இராமனுக்கு கடும்கோபம் வருகிறது, எங்கள் வழக்கில் "அடிடா பிடிடா'' என்று கத்திப் பிரச்சனைப் பட்டுத்தான் காட்டுக்குப் போகிறார்.கம்பர் ஏன் மாற்றினாரோ தெரியவில்லை. இதைவிடகடவுளாக வணங்கப்படும் ராமனின் கூத்து சீதையை தீக்குளிக்கச் சொல்லும் வரைக்கும் போகுது.

இராமனை விடுவோம். ஒரு ஆள் அப்படி இருந்தாரோ இல்லையோ அல்லது இருந்து அவருக்கு சும்மா ஒரு கதை எழுதினார்களோ தெரியவில்லை. ஆனால் கதையை வடிவாகப் பார்த்தால் சீதை கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் இலங்காபுரிக்குச் செல்ல வேண்டும் இவருக்கு உதவி செய்ய குரங்குக் கூட்டம் ஒன்று வருகிறது. அதன் தலைவர் சுக்ரீவன். பாலம் போடப்படும் இடம் அவருடைய எல்லைக்குள் இருக்கிறது. ஏன் சுத்தி வளைப்பான். தென்னிந்தியாவில் இருக்கிறது.

இலங்காபுரியில் இராவணன் என்னும் அரக்கன் இருக்கிறான். வீணை வேந்தன் என்று பட்டம் பெற்றவன். தமிழன். இலங்காபுரிக்குத் தமிழர் எங்கிருந்து போனார்கள் தென்னிந்தியாவில் இருந்து, ஆக இராமன் இலங்காபுரிக்கு இராவணனுடன் போர் புரிய வரும்போது தென்னிந்தியாவில் தமிழர் இருக்கவில்லையாம் (?) . குரங்குக் கூட்டங்கள்தான் இருந்ததாம். இப்படி இராமாயணம் சொல்கிறது. குரங்குக்கு மனைவி, அரசாட்சிப் பீடம், இதெல்லாம் எப்படி? திராவிடன் ஆரியனுக்குக் குரங்கானான்.

அதைவிட இலங்காபுரியைச் சேர்ந்த இராவணன் சிவனுக்காக தன் ஒரு தலையை பிடுங்கி நரம்பினை எடுத்து வீணை வாசித்தவர். அவர் ஒரு கொடிய அரக்கன். சின்னத்திரை மாதிரி சித்தியோடு சண்டை பிடித்துச் சின்னத்தனமாக இருந்தவர் இராமன் அவர் இன்று கடவுள்.

இராமாயணத்தை விடக் கம்பர் வேறு ஒன்றும் சொந்தமாக எழுதவில்லையா? அவைகள் து}க்கிப் பிடிக்கப்படாமல். கொப்பி அடிக்கப்பட்ட இராமாயணம் பிரபல்யம் ஆனதேன்? (அல்லது ஆக்கப்பட்டதேன்?) சந்திரமுகி வெற்றிக்கு வாசுவைப் பராட்டுவது போலத்தான் இந்த விடயத்தில் கம்பரைத் து}க்கி வைக்கிறதும்.

இப்போ விடயத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு எழுகிற இக்கேள்விகள் கம்பவாரிதிக்கு அவர்களுக்கு எழவில்லையா? மறுபடியும் சொல்கிறேன் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அல்லது அவர் சார்ந்தவர்கள், கம்பன் கழகம் என்று சொல்லிவிட்டு இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன? எனக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை. அனேகர் இல்லை என்றே படுகிறது.

ஏனெனில் அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவில ஒராள் இருக்கிறார் அவருக்கும் BACKUP அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர்தான். அந்த அளவுக்கு கம்பவாரிதி ஜெயராஜ் மோசம் இல்லைதான் என்றாலும் இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன?

Monday, July 11, 2005

பு/பெயர் தமிழர் சினிமா

இது புலம்பெயர் தமிழர்களின் திரைப்பட வளர்ச்சிக் காலம் என்று சொல்லலாமா? அல்லது பலர் இத்துறைக்குள் இப்போதுதான் நுழையத் தொடங்கும் காலம் என்று சொல்லலாமா? இரண்டாவதுதான் எமக்குப் பொருத்தமானது என்றுஎனக்குப் படுகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கான சினிமா இன்னும் உதிக்க வில்லை. உதிக்கப் போகிறது.

(நான் ஒரு படத்தை எடுத்துப் போட்டு உதிச்சிட்டுது எண்டு சொல்ல திட்டம் வைச்சிருக்கிறன்)

ஏன் உதிக்கவில்லை? இப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பல பதில்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சில பிரச்சனைகள் சொல்லப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். திரைப்படம் எடுக்கின்றோமா முதலில் பார்வையாளர்களைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் (ஐயோ பாவம் என்றும்தான்) நான் இங்கு பார்த்த திரைப்படங்கள் சில அந்த அக்கறை எல்லாம் இல்லாமல் எடுக்கப்பட்டு இருக்கும் அதாவது இது புலம் பெயர் தமிழர்களின் சினிமா என்றால் அது சார்ந்ததாக எடுக்கப் படலாம் (கவனிங்கோ எடுக்கப்படலாம். எடுக்கோணும் என்று சொல்லவில்லை)

அதை விட்டுத் தென் இந்தியச் சினிமா போல் "நான் ஒரு தடவை சொன்னா! நான் ஒரு தடவை சொல்லவில்லை எண்ணா! இப்படி Hero இசத்தினைக் காட்டினால் தான் மக்கள் மயங்குவார்கள் என்று படம் எடுப்பது பயனளிக்காது. நான் புலம்பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட சில படங்களைப் பார்த்து இருக்கிறேன். அனைத்து படங்களும் பார்த்து முடிக்க வேண்டும் என்று கடைசிவரை இருந்திருக்கிறேன். கடைசிவரை இருந்திருக்கிறேன் என்பது "கடினப்பட்டே'' என்பதைக் குறிக்கிறது.

சில புலம் பெயர் தமிழர் வாழ்வு சார் பிரச்சனைகளை சொல்ல வருகின்றன. சில அது பற்றி அல்லாமல் சாதாரணமான ஒரு கதையைச் சொல்ல முயல்கின்றன. சில தொழில் நுட்ப ரீதியாக கதை தவிர்த்து கொஞ்சம் முன்னுக்கு அடி எடுத்து வைக்கின்றன. ஆனால் நான் பார்த்த எந்தப் படமும் "பார்க்கலாம்'' என்று சொல்வதற்கு இல்லை. ஒரு படம் பார்த்துக் கொண்டு இருந்தபோது வெறுப்பில் அப்படி இப்படி அசைந்து கொண்டு இருந்தேன் (அட எனக்குப் பின்னாலும் ஆக்கள்...) உடனே பின்னால் இருந்தவரிடம் திரும்பி, மறைச்சுப் போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றேன். அதற்கு அவர் முடிஞ்சா முழுக்க மறைங்கோ என்றார்.

ஏன் இந்த நிலை? என்று கேட்டால் தமிழ்நாட்டுச் சினிமாவின் தொழில்நுட்பத்திற்குக் கிட்டே நெருங்க ஏலாது ஐசே! என்பார்கள். அப்படியா! சரி அப்படி அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? ரஜினி நடந்து வரும்போது காலின் கீழ்ப்பகுதியில் நெருப்புப் பொறி பறக்கிறது. கிரபிக்ஸ் பூக்களுக்கிடையில் காதலர்கள் டூயட் பாடுகிறார்கள். இந்த அளவுக்கான தொழி நுட்பத் தேவை எமக்கு இருக்கிறதா? அல்லது இருந்தாலும் இப்படியான சீன்களுக்கான தேவை எமக்கு இருக்கிறதா? சரி அதை விடுவோம். அழகி, காதல், ஆட்டோகிராப், போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கும் நெருங்க இயலாது என்று கூறப்படும் அந்தத் தொழில் நுட்பத்திற்கும் இடையே எந்த அளவிலான தொடர்புகள் இருக்கின்றன. மேற்சொன்ன படங்களுக்கு அடிப்படைத் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டது.

ஆக சினிமா எடுப்பதற்கு அடிப்படைத் தொழில் நுட்பம் இருந்தாலே போதுமானது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம் "எங்களுக்கு'' திரைப்படம் உருவாக்கல் தொடர்பான அனுபவ அறிவு குறைவு. அல்லது இல்லை. இதனால்தான் இவ்வளவு சிக்கலும். கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றிலும் கவனம் எடுத்தால் கூட பார்க்கக் கூடிய ஒரு படத்தினை உருவாக்கலாம் என்பது என் நம்பிக்கை.

ஆனால் சிலர் என்ன செய்கிறார்கள். தங்கள் திரைப்படத்திற்கு வித்தியாசமான முறையில் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அதாவது தமிழர்களுடன் தொடர்பான உணர்வுகளைத் தங்கள் தனிப்பட்ட உற்பத்திகளுடன் சேர்த்து விடுவதே அம்முறை. தமிழ், விடுதலை, போராட்டம், போன்ற சில விடயங்களை சம்பந்தமில்லாத தம் உற்பத்திகளுடன் ஊறுகாய் போல் சேர்த்து அவற்றினை ருசி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் படைப்பாளிகள்.

உதாரணத்திற்கு மாவீரர் துயிலும் இல்லம்! புலம்பெயர் திரைப்படங்களில் காண்பிக்கப் பட்டுள்ளது. காண்பிக்கவும் படும். அதை யாரும் காண்பிக்கக் கூடாது என்று சொல்ல முடியாதுதான்! ஆனால் அப்படியான இடங்களை தங்கள் லாபத்திற்காக அல்லது ஏதோ சுற்றுலாத் தளங்கள் போல படங்களில் காட்டுவது சரியா என்று தெரியவில்லை. அதைவிட அப் பிரதேசம் சென்று அதனைப் படம் பிடிப்பதன் நோக்கம் என்ன? சினி ஸ்டைலில் Feeling காட்டுறீங்களா? இல்லை Film காட்டுறீங்களா? என்றுதான் கேட்கவேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம் "இந்தப் படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புக்கள் மேல் நம்பிக்கை இல்லை''.

இப்படி நான் எழுதுவதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள், படம் எடுப்பதில் உள்ள சிரமம் அறியுங்கள். பின்னர் எழுதுங்கள் உருவாகும் புலம் பெயர் தமிழரின் திரைத் துறையை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள்.

நான் என்ன சொல்கிறேன்; உருவாகும் துறை ஒழுங்காக உருவெடுக்க வேண்டும் என்றால் இப்படி எழுதத்தான் வேண்டும். இல்லை என்றால் இன்றைய அனேக தென்னிந்தியத் திரைப் படங்கள் போல் C கிளாஸ் ஓடியன்சுக்குத்தான் படம் எடுக்கும் நிலை வரும் புரியவில்லையா? 3 சண்டை 2 கானா கொஞ்சம் நகைச்சுவை இப்படி ஒரு "துறை'' உருவாகுவதற்கு அது உருவாகாமல் இருப்பது மேல்.