Friday, December 16, 2005

எப்படி வாழப்போகிறீர்கள்

கடவுள் நம்பிக்கை இல்லை என்று எழுதியதால் என்னை அறிந்தவர்கள் பலர் இப்போ எனக்கு அறிவுரை செய்யத்தொடங்கி விட்டார்கள். அவர்கள் நிச்சயமாய் என்மேல் உள்ள கரிசனையில்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பது எனக்கு உறுதியாய் தெரியும். அவர்களுக்கு நான் ஏதொ தவறான காரியம் செய்வதாக ஒர் எண்ணம்.
அவர்களுக்கும் இன்னும் பல வாசகர்களுக்கும் என் நிலை விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

இங்கே வழிபடப்படும் தெய்வங்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்க்கிறபோது அவை அந்தந்தப் பிரதேசங்களிற்கு ஏற்ப ஆரம்பகாலத்தில் அப்பிரதேச மக்களால் அல்லது கொஞ்சம் விசயம் தெரிந்தவர்களால் உருவாக்கப் பட்டதாகவே கருதுகிறேன். அதனால் தான் எனக்கு அது குறித்து "அக்கறை'' இல்லை!

என்னுடைய மனித புத்திக்கு எட்டிய வரைக்கும் நியாயமாக நடக்கிறேன். இப்படி எல்லாம் கடவுள் சொன்னார் என்று இன்னொரு மனிதன் சொல்கிறதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதே மனிதன் நல்ல விடயம் ஒன்றைக் கடவுள் சொல்கிறார் என்றால் ஏற்றுக்கொள்கிறேன் அதற்குக் காரணம் கடவுள் அல்ல, சொல்லப்படுகிற விடயமே! இயலுமானவரை நல்லதை செய், நல்லதை நினை! அதுதான் எனது முயற்சி. அதையும் நீங்கள் செய்தால் தேவையில்லாத சிக்கல் இருக்காது மனம் தெளிவாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் அவ்வளவுதான்.
இதனைப் பலரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
சிலர் தமது அத்திவாரம் ஆட்டம் கண்டுவிடும் என்று பயப்படுகிறார்கள்.
நான் என்ன செய்வது.

அதை ஒருபுறம் வைத்துவிட்டு அண்மையில் ஒருவர் என்னிடம் பேசியதை எழுதுகிறேன். அவர் என்னிடம் டேய் உனக்கு வீடு வாங்கிற ஐடியா இல்லையோ என்றார். இருக்குத்தானே இது நான். ஒண்டெல்லோ இது அவர். காணாதா -நான் டேய் ஒண்ட வைச்சு என்னத்தைச் செய்யிறது இது அவர். இதுக்கும் மேலே உரையாடலைத் தொடராமல் விடயத்திற்கு வருகிறேன்.

அதாவது அவர் மட்டுமல்ல நம்மில் பலர் இப்படித்தான். கார் வைத்திருந்தால் Bmw வைத்திருக்க வேண்டும். முடிந்தால் remortgage செய்து இரண்டு வீடு வைத்திருக்க வேண்டும். இவை சாதாரணமா இயலாத காரியம் என்றால் தொடர்ச்சியாகத் தும்படிக்க வேண்டும். இப்படி வாழ்வதுதான் பிரதானம் என்று பலர் நினைக்கிறோம்.

நாலு வீடும் நாலு காறும் உங்கள் செல்வத்தினை வெளிப்படுத்தலாம் அல்லது வாழ்க்கைத்தரம் என்ற பொருளியல் அளவீட்டை அதிகரிக்கலாம் ஆனால் உங்களின் உண்மையான அளவை தரத்தை அதிகரிக்குமா?

மகாகவி பாரதியாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவருக்கு இன்னும் உலகம் கொடுக்கும் மரியாதைக்கு காரணம் என்ன? அவருடைய வீடும் Bmw காருமா? ஒவ்வொரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டவர் பாரதி. இன்னும் சொல்லப் போனால் கஞ்சாவை நஞ்சாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லியபடி கஞ்சா அடித்த மனிதர் அவர். ஆனால் இன்றும் அவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அதுதான் மகாகவி பாரதி.

ஒரு மனிதனுடைய தரம் அல்லது பெறுமதி அவன் வைத்திருக்கும் செல்வத்தினால் கணிக்கப் படுவதில்லை. அது அவன் வாழும் வாழ்க்கை முறைகளினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. (எல்லாளன் உமக்கு என்ன நடந்தது இப்ப என்னத்துக்காக இதை எழுதிறீர்...? )

வாழும் மனிதர்கள் யாவருமே மற்றவர்களுக்கு எங்களை ஏதாவது வழியில் வெளிப்படுத்தவோ அல்லது வித்தியாசப்பட்டு இருக்கவோ விரும்புகிறோம். அதற்காகத்தான் ஒவ்வொருவரும் இப்படி எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறோம். நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்றால் நாங்கள் வைத்திருக்கும் பொருட்களை வைத்து மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவதைவிட அல்லது மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதை விட எங்கள் குணாதிசயங்கள் மூலம் வெளிப்படுத்தவோ வித்தியாசப்படவோ முயற்சிக்கலாம் என்பதுதான்.

வள்ளுவரோ அல்லது கொலம்பஸ்சோ அல்லது அரிஸ்டோட்டிலோ வேறுபடுவது அவர்கள் வைத்திருந்த செல்வங்களால் அல்ல. அவர்கள் குணங்களால் அவை வெளிக்கொணர்ந்த விடயங்களால். அதற்காக நாங்கள் எல்லாம் நாடு களைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
அந்தாள் நல்ல மனுசன். அந்தாள் கெட்டிக்கார மனுசன். அந்தாள் சுப்பர் மனுசன். இப்படி இருந்தாலே போதும். நான் இதை எழுதுவதற்கான காரணம் நீங்கள் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதைவிட கையில் கழுத்தில் சங்கிலி அணிந்து கொண்டு வீடு கூடிப்போட்டுது விக்கவேணுமடா என்று விலாசம் காட்டுவதாக எண்ணி முட்டாளாகக் கூடாது என்பதுதான்.

வாழ்க்கையே நிலையில்லாதது அதிலும் நிலையில்லாத செல்வத்தை வைத்துக்கொண்டு விலாசம் காட்டுவது எப்படி?

பாரதியினது வாழ்க்கையும்
அவனது செல்வமும் நிலை இல்லாதது
ஆனால் அவன் விட்டுச்சென்ற பெயர் நிலையானது.

நீங்கள் எதனை விட்டுச்செல்லப் போகிறீர்கள். Bmw,வீடுகள்?.
உண்மையான உங்கள் பெயரை விட்டுச்செல்லுங்கள்.
புதிய வருடத்தில் நீங்கள் எப்படி வாழப்போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்.

Friday, December 02, 2005

எம் கலாசாரம்

எந்த ஒரு இனமும் தனித்து வாழவேண்டும் என்றால் அதற்கென்றொரு மொழி கலை கலாசாரம் இருக்கவேண்டும் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். தமிழ் கலாசாரத்தை வாழ வைக்க அல்லது பேணவேண்டிய பொறுப்பு தமிழர்களிடமே இருக்கிறது.

எந்தவொரு மனிதனும் எங்களுடைய தனித் தன்மையினை அல்லது விசேட தன்மைகளை அசட்டை செய்கிறபோது அவர்களுக்கு தமிழர்கள் குறித்தும் அவர்கள் கலாசாரம் பற்றியும் சொல்ல வேண்டிய கடைப்பாது ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. அதனை விட புலத்தில் வாழும் நாங்கள் வேற்றுக் கலாச்சார அல்லது பல்லினக் கலாச்சார மக்களுடன் சேர்ந்து வாழுகிறபடியினால் எங்கள் தனித்தன்மையை நாம் கவனமாகக் காக்க வேண்டும். எங்கள் நடை உடை பாவனை மூலம் இதனை மற்றவர்கள் உணரக் கூடியதாக நடக்கலாம். சுருங்கச் சொன்னால் எங்கள் வாழ்க்கை முறை மூலமாக இதனை வெளிப்படுத்தி நாம் தமிழர் என்ற இனம் என்பதை வெளிப்படுத்தலாம்.

இப்படிச் சொல்லும் பலவிதமான கலாசாரக் காவலர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் தவறில்லை ஆனால், நாம் எப்படியெல்லாமோ வாழ்ந்து கொண்டு இருக்கிறபோது தமிழர் கலாசாரத்தினை மட்டும் காத்துக் கொள்வதால் என்ன பயன். ஆகா எல்லாளனும் சினிமா நடிகைகளுக்கு வக் காலத்து வாங்குகிறாரோ (வாங்குகிறானோ) என்று உங்களுக்குத் தோன்றும். அவர்கள் என்ன சொன்னார்கள் அவை பத்திரிகைகளில் எவ்வடிவில் வந்தன என்பது பற்றித் தெளிவு இல்லை என்பதால் அது தொடர்பான சரி பிழை களை விட்டுவிடுவோம். அதைவிட என்னுடைய கருத்து சினிமாக்காரருடன் ஒத்துப்போகிறதா என்ற தேவை யாருக்கும் இல்லை.

நாம் நலமான அல்லது சீரான வாழ்வினை வாழ்வதற்காகவே இந்தக் கலாசாரம் என்கிற ஒரு ஒழுக்கமைப்புடைய முறை ஏற்படுத்தப் பட்டிருக்குமே அன்றி நாசமாவதற்கு அல்ல. அப்படி என்றால் கலாசாரம் பற்றி அக்கறைப்படுகிற அனைத்து ஆசாமிகளும் ஒரு ஒழுங்கான அல்லது ஒழுக்கமான முறையுடன் சீரான வாழ்க்கையினை வாழ ஆசைப்படுகிறவர்கள் என்று கொள்ளலாம் என்று கருதுகிறேன். அதனால்தான் அவர்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட முறைகளை இயலுமான அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள், கடைப்பிடிக்க வைக்கிறார்கள்.

இங்குதான் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது ஒரு கேள்வி இருக்கிறது. உண்மையில் இவர்கள் சீராக வாழவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதனைச் கடைப்பிடிக்கிறார்களா அல்லது நாம் தமிழர் எம் தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாழோடு முன்தோன்றி மூத்த தமிழ். எங்கள் முத்து தமிழ், எங்கள் சொத்து தமிழ் என்று நினைக்கிறபடியால் கடைப்பிடிக்கிறார்களா அதுவும் அல்லாவிட்டால் சிறிய வயதில் இருந்து இயல்பாகவே அப்படி Programme பண்ணப்பட்ட படியால் கடைப்பிடிக்கிறார்களா என்பதே அந்தக் கேள்வி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ( நீ எழுதிறதெண்டா எழுதிப்போட்டுப் போ எங்களிட்ட எல்லாம் உனக்கு என்ன கேள்வி... )

எனக்கென்னவோ நாங்கள் தமிழர் என்பதற்காகவும் ஏற்கனவே அப்படி Programme பண்ணப் பட்டு இருப்பதாலுமே கலாசாரம் என்ற ஒன்றினை து}க்கிப்பிடிக்கிறோம் என்று படுகிறது

நான், வெறும் தமிழர்கள் மட்டும்தான் இப்படி என்று சொல்லவில்லை. உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு இனமாகிலும் தங்கள் கலாசாரத்தினை து}க்கிப்பிடித்து வைத்திருப் பவர்கள் அனைவரையும்தான் இப்படிச் சொல்கிறேன். அதே நேரத்தில் இதனைச் சரி, தவறு என்று கூறும் வாதத்திற்கும் நான் வரவில்லை. பின்னர் ஏன் இப்படிச் சொல்கிறேன்.

அதாவது இப்படி வாழவேண்டும் இதுவே எங்கள் முறை இதுவே சரியான சீரான வாழ்க்கை என்பவர்களில் 99 வீதத்தினர் தமது அன்றாட வாழ்க்கையில் எந்த அளவுக்கு ஒழுங்காக வாழ்
கிறார்கள்? "ஒழுங்கு'' என்கிற ஒரு வார்த்தையை வைத்து ஏதோ கள்ளத்தொடர்பினைப் பற்றி எண்ண வேண்டாம்.
ஒரு மனிதனுடைய எண்ணமும் உடலும்தான் "அவன்''

இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். அந்த எண்ணத்திற்கும் உடலுக்கும் ஏற்றதான வாழ்க்கையினை நாம் வாழ்கிறோமா? பெரிதாய் இல்லாமல் சிறியதாய் ஒரு விடயத்தினைச் சொல்கிறேன் புகைப்பிடித்தல்!
புகைத்தல் கொல்லும் என்று எழுதினாலும் அதைப் பற்றி அக்கறைப்படாமல் சதா ஊதித் தள்ளுபவர்கள் எத்தனை பேர்? புகைத்தல் என்பது ஒரு உதாரணத்திற்கு நான் சொல்கிற விடயம். ஆனால் இதற்கப்பால் எத்தனையோ இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வீடு தொழில் உறவுகள் இடையே எத்தனையோ பரிசைகேடான நிகழ்வுகளை நாம் அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

சாதாரணமாக குப்பைத்தொட்டி சற்று எட்டத்தில் இருக்கிறபோது நிக்கிற இடத்தில் குப்பையினை எறிந்து விட்டுப்போவதே எங்கள் எண்ணத்தில் எதோ சிக்கல் இருக்கிறது என்பதைத் தான் வெளிப்படுத்துகிறது.
கலாசாரம் ஒருவரிடம் இருந்து இன்னொரு இனத்தவரை வேறுபடுத்தி நின்றாலும் அது ஒழுங்கான சீரான வாழ்க்கை முறைக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும். ஆகவே அவற்றை பேணுவோம்.

அதுதானே எம் கலாசாரம்.