Friday, May 20, 2005

வீழ்வேனென. . .

வழமைபோல் நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவன் சினிமாவைத் தவிர வேறு எதுவும் பேசமாட்டான். அன்று "விஜய்"யாயணம் பேசினான். அவன் அப்படி இப்படி என்றெல்லாம் சொன்னான். அதற்கு நான் ரஜினியைக் கொப்பி அடிக்கிறதுதானே விஜயின் பிரதான வேலை என்றேன். அதற்கு அவன் விஜய் ஒரு போதும் ரஜினியைக் கொப்பி அடிப்பதில்லை. ரஜினி படத்தில் வருகிற கட்டங்களினை தன்னுடைய திரைப்படங்களில் தனக்கு ஏற்றாற்போல் பாவிப்பது மட்டுமே உண்மை என்றான். அந்த உரையாடலே இன்றைய இதழின் இப்பத்தியினை எழுதத் து}ண்டியது.
மண்ணில் பிறக்கிறோம் வளர்கிறோம் உழைக்கிறோம் சில காலத்தின் பின்னர் இறக்கிறோம். இதுதான் வாழ்க்கை. இதை வெறுமனே பிறக்கிறார் பின்னர் இறக்கிறார் என்றும் சொல்லலாம். அதே நேரம் இந்த மண்ணில் குழந்தையாய் பிறந்து சிறுவனாகவோ சிறுமியாகவோ இருந்து வாலிபப் பருவம் அடைந்து பின்னர் குடும்பஸ்தராகி வயது முதிர்ந்து இறக்கிறார் என்றும் சொல்லலாம். இப்படிப் பார்க்கிறபோது ஒரு மனிதனுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை அவன் பெரும் பயணம் ஒன்றினை மேற்கொள்கிறான்.
இப்படியான பயணத்திற்கு உட்பட்டவர்கள்தான் அரிஸ்ரோட்டில், சோக்கிறரீஸ், திருவள்ளுவர், பாரதியார் யாவருமே. இவர்களைப் போல பலரை இங்கு உதாரணத்திற்கு இலகுவாகக் குறிப்பிடலாம். ஆனால் இப்படியானோருக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணிப் பார்க்கிறோமா? அனேகமாக நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மட்டுமே அக்கறைப் பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதாவது பிள்ளைகளுடைய வாழ்க்கை, வீட்டு மோட்கேஜ், வேலை என்று எங்களையே சுற்றிக் கொண்டுள்ள அக்கறைகள்.
அரிஸ்ரோட்டில், சோக்கிறரீஸ், திருவள்ளுவர், பாரதியார் போன்றோருக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் இந்த மனித சமுதாய வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பினைத் தந்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். அரிஸ்டோரில் தத்துவம் சோக்கிறடீஸ் தத்துவம் திருவள்ளுவர் குறள் பாரதியார் கவிதைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமூகத்திற்கு உதவியது மட்டும் அன்றி இன்றும் பலருடைய வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிக் கொண்டு இருக்கிறது. உதவிக் கொண்டு இருக்கிறது என்பதைவிட மனித சமுதாயதிற்கு அல்லது இந்தப் பூமிக்கு தங்களுடைய பங்கினைச் செலுத்திக் கொண்டு இருக்கிறது.
இவர்கள் வேறு வேலையே இல்லாமல் இருக்கவில்லை உதாரணத்திற்கு மாகாகவி பாரதியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மனிதருக்கு எத்தனை சிக்கல். வெள்ளையருடன் பிரச்சனை, வீட்டில் வறுமை இப்படி எல்லோருக்கும் இருக்கிற அன்றாட பிரச்சனைகள் பாரதிக்கும் இருந்தது. இருந்தாலும் இன்று பாரதி, மாகாகவி. இதனால் பிரபல்யம் அடைய வேண்டும் என்று சொல்ல வரவில்லை. எங்களால் நாங்கள் வாழும் இந்த உலகத்திற்கு என்ன பயன்? இன்றைய மனித சமூதாயத்திற்கு இனிவரும் மனித சமுதாயத்திற்கு என் பங்களிப்பு என்ன? இதற்காக நான், மனிதர்கள் யாவரும் இதே சிந்தனையோடுதான் வாழவேண்டும் என்று சொல்லவில்லை.
உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஏதோ பிறந்தேன் கொஞ்சநாளில் இறப்பேன் இடையில் வாழ்வேன் என்று இருந்தால் அது என்ன வாழ்க்கை? எனக்குப் பெயர் வைத்தது என்னை மற்றவர்கள் வெறுமனே அழைக்க மட்டும்தானா? "எல்லாளன்'' என்று பெயர் வைத்துவிட்டு எல்லோர் போலவும் சும்மா வாழ்ந்து கொண்டு இருந்தால் "எல்லாளன்'' என்று பெயர் வைத்து மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தப்பட்டு இருக்கவேண்டிய அவசியம் என்ன? (எல்லாளன் புனைபெயராக இருப்பினும்).
இதனால்தான் சொல்கிறேன் நான் இந்த பூமியில் வாழ்ந்து முடிக்கு முன்னர் ஏதாகிலும் இந்த உலகத்திற்கு அல்லது மனித சமுதாயதிற்கு குறைந்தது எனது தமிழ் சமூகத்திற்கு செய்து விட்டுச் சாகவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்த்தான் இந்த பூமிக்கு எங்களால் ஏதாகிலும் பிரியோசனம். அல்லது நாங்கள் பூமிக்கு வெறும் வெற்றுக் கடதாசிகள்.
விஜய் ரஜினியின் சில சீன்களையே எடுத்துத் தனக்கு ஏற்றால் போல் பயன்படுத்துகிறார் என்றால். விஜய் என்பவர் யார்?. சினிமாவிற்கு ஏதோ ரஜினி செய்கிறார். விஜய் என்ன செய்கிறார். ரஜினி போல வர முயல்கிறார். அப்படி என்றால் சினிமாவில் விஜயின் பங்களிப்பு என்ன? தனித்தன்மை என்ன? ரஜினியைக் கொப்பி அடிக்கிறார் என்றால் விஜய் என்பவர் எதற்கு? ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்க்கமான முடிவு இருக்கவேண்டும் பாரதிக்கு இருந்தது.
அது. . .

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல்
நான் வீழ்வேனென நினைத்தாயோ
இனியென்னைப் புதிய உயிராக்கி
மதி தன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்.


3 comments:

கறுப்பி said...

நல்லா யோசிக்கிறியள். தத்துவமாப் பொழியிறியள். அதுசரி அடுத்த மாத மோட்கேசுக்கு காசிருக்கா? எனக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. என்ர மனுசன் அதைப் பாத்துக் கொள்ளுவார். நான் சமூகத்துக்கு என்ன நல்லது செய்யலாம் எண்டு யோசிச்சுக் கொண்டிருப்பன். ஹ ஹ ஹ

எல்லாளன் said...

என்ர வீடு PAID OFF எண்டு நினையுங்கோ!

சினேகிதி said...