Wednesday, June 01, 2005

தமிழர் சினிமா

இது புலம்பெயர் தமிழர்களின் திரைப்பட வளர்ச்சிக் காலம் என்று சொல்லலாமா? அல்லது பலர் இத்துறைக்குள் இப்போதுதான் நுழையத் தொடங்கும் காலம் என்று சொல்லலாமா? இரண்டாவதுதான் எமக்குப் பொருத்தமானது என்றுஎனக்குப் படுகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கான சினிமா இன்னும் உதிக்க வில்லை. உதிக்கப் போகிறது. (நான் ஒரு படத்தை எடுத்துப் போட்டு உதிச்சிட்டுது எண்டு சொல்ல திட்டம் வைச்சிருக்கிறன்)

ஏன் உதிக்கவில்லை? இப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பல பதில்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சில பிரச்சனைகள் சொல்லப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். திரைப்படம் எடுக்கின்றோமா முதலில் பார்வையாளர்களைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் (ஐயோ பாவம் என்றும்தான்) நான் இங்கு பார்த்த திரைப்படங்கள் சில அந்த அக்கறை எல்லாம் இல்லாமல் எடுக்கப்பட்டு இருக்கும் அதாவது இது புலம் பெயர் தமிழர்களின் சினிமா என்றால் அது சார்ந்ததாக எடுக்கப் படலாம் (கவனிங்கோ எடுக்கப்படலாம். எடுக்கோணும் என்று சொல்லவில்லை) அதை விட்டுத் தென் இந்தியச் சினிமா போல் "நான் ஒரு தடவை சொன்னா! "நான் ஒரு தடவை சொல்லவில்லை எண்ணா! இப்படி Hero இசத்தினைக் காட்டினால் தான் மக்கள் மயங்குவார்கள் என்று படம் எடுப்பது பயனளிக்காது.

நான் புலம்பெயர் நாடுகளில் தயாரிக்கப்பட்ட சில படங்களைப் பார்த்து இருக்கிறேன். அனைத்து படங்களும் பார்த்து முடிக்க வேண்டும் என்று கடைசிவரை இருந்திருக்கிறேன். கடைசிவரை இருந்திருக்கிறேன் என்பது "கடினப்பட்டே'' என்பதைக் குறிக்கிறது. சில புலம் பெயர் தமிழர் வாழ்வுசார் பிரச்சனைகளை சொல்ல வருகின்றன. சில அது பற்றி அல்லாமல் சாதாரணமான ஒரு கதையைச் சொல்ல முயல்கின்றன. சில தொழில் நுட்ப ரீதியாக கதை தவிர்த்து கொஞ்சம் முன்னுக்கு அடி எடுத்து வைக்கின்றன. ஆனால் நான் பார்த்த எந்தப் படமும் "பார்க்கலாம்'' என்று சொல்வதற்கு இல்லை.

ஒரு படம் பார்த்துக் கொண்டு இருந்தபோது வெறுப்பில் அப்படி இப்படி அசைந்து கொண்டு இருந்தேன் (அட எனக்குப் பின்னாலும் ஆக்கள்...) உடனே பின்னால் இருந்தவரிடம் திரும்பி மறைச்சுப் போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றேன். அதற்கு அவர் முடிஞ்சா முழுக்க மறைங்கோ என்றார்.

ஏன் இந்த நிலை? என்று கேட்டால் தமிழ்நாட்டுச் சினிமாவின் தொழில்நுட்பத்திற்குக் கிட்டே நெருங்க ஏலாது ஐசே! என்பார்கள். அப்படியா! சரி அப்படி அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? ரஜினி நடந்து வரும்போது காலின் கீழ்ப்பகுதியில் நெருப்புப் பொறி பறக்கிறது. கிரபிக்ஸ் பூக்களுக்கிடையில் காதலர்கள் டூயட் பாடுகிறார்கள். இந்த அளவுக்கான தொழில் நுட்பத்தேவை எமக்கு இருக்கிறதா? அல்லது இருந்தாலும் இப்படியான சீன்களுக்கான தேவை எமக்கு இருக்கிறதா? சரி அதை விடுவோம்.

அழகி, காதல், ஆட்டோகிராப், போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கும் நெருங்க இயலாது என்று கூறப்படும் அந்தத் தொழில் நுட்பத்திற்கும் இடையே எந்த அளவிலான தொடர்புகள் இருக்கின்றன. மேற்சொன்ன படங்களுக்கு அடிப்படைத் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டது. ஆக சினிமா எடுப்பதற்கு அடிப்படைத் தொழில் நுட்பம் இருந்தாலே போதுமானது.

இப்படி வேண்டுமானால் சொல்லலாம் "எங்களுக்கு'' திரைப்படம் உருவாக்கல் தொடர்பான அனுபவ அறிவு குறைவு. அல்லது இல்லை. இதனால்தான் இவ்வளவு சிக்கலும். கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றிலும் கவனம் எடுத்தால் கூட பார்க்கக் கூடிய ஒரு படத்தினை உருவாக்கலாம் என்பது என் நம்பிக்கை.

ஆனால் சிலர் என்ன செய்கிறார்கள். தங்கள் திரைப்படத்திற்கு வித்தியாசமான முறையில் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அதாவது தமிழர்களுடன் தொடர்பான உணர்வுகளைத் தங்கள் தனிப்பட்ட உற்பத்திகளுடன் சேர்த்து விடுவதே அம்முறை. தமிழ், விடுதலை, போராட்டம், போன்ற சில விடயங்களை சம்பந்தமில்லாத தம் உற்பத்திகளுடன் ஊறுகாய் போல் சேர்த்து அவற்றினை ருசி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் படைப்பாளிகள்.

உதாரணத்திற்கு மாவீரர் துயிலும் இல்லம்! புலம்பெயர் திரைப்படங்களில் காண்பிக்கப் பட்டுள்ளது. காண்பிக்கவும் படும். அதை யாரும் காண்பிக்கக்கூடாது என்று சொல்ல முடியாதுதான்! ஆனால் அப்படியான இடங்களை தங்கள் லாபத்திற்காக அல்லது ஏதோ சுற்றுலாத் தளங்கள் போல படங்களில் காட்டுவது சரியா என்று தெரியவில்லை.

அதைவிட அப் பிரதேசம் சென்று அதனைப் படம் பிடிப்பதன் நோக்கம் என்ன? சினி ஸ்டைலில் Felling காட்டுறீங்களா? இல்லை Film காட்டுறீங்களா? என்றுதான் கேட்கவேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம்

"இந்தப் படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புக்கள் மேல் நம்பிக்கை இல்லை''. இப்படி நான் எழுதுவதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள், படம் எடுப்பதில் உள்ள சிரமம் அறியுங்கள். பின்னர் எழுதுங்கள் உருவாகும் புலம் பெயர் தமிழரின் திரைத் துறையை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள். நான் என்ன சொல்கிறேன்; உருவாகும் துறை ஒழுங்காக உருவெடுக்க வேண்டும் என்றால் இப்படி எழுதத்தான் வேண்டும். இல்லை என்றால் இன்றைய தென்னிந்திய சினிமா போல் C கிளாஸ் ஓடியன்சுக்குத்தான் படம் எடுக்கும் நிலை வரும் புரியவில்லையா?
3 சண்டை 2 கானா கொஞ்சம் நகைச்சுவை இப்படி ஒரு "துறை'' உருவாகுவதற்கு அது உருவாகாமல் இருப்பது மேல்.